APR – 29

APR-29

            ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற #கோமதிமாரிமுத்துஅவர்களுக்கு நாளை காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே. எஸ். அழகிரி அவர்கள் மற்றும் காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் ₹5 லட்சத்திற்கான காசோலையை வழங்குகிறார்கள்.

      தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மராட்டிய மாநிலம் மாலேகான் நகரில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் பின்னணியில் இந்துத்வா அமைப்புகளின் தீவிரவாத பிரிவினர் சம்மந்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு வழக்கில் இந்துத்வா அமைப்பை சேர்ந்த சாத்வி பிரக்யாசிங் தாகூர் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முதல்கட்ட ஆதாரங்களின்படி சாத்வி மற்றும் அவரது நண்பர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் மிகக் கடுமையானவையாகும்.

மராட்டிய மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒழிக்கும் பணிக்காக தீவிரவாத எதிர்ப்புக் குழுவை திறமைமிக்க காவல்துறை அதிகாரியான ஹேமந்த் கர்க்கரே தலைமையில் அமைக்கப்பட்டது. இவர்கள் மேற்கொண்ட பாரபட்சமற்ற விசாரணையின் மூலமாக பிரக்யாசிங் உள்ளிட்டவர்கள் குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கின. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள் சாத்வி பிரக்யாசிங் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையில் பிரக்யாசிங் தாகூர் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இது சம்மந்தமான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் 2014 இல் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் மலேகான் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து பிரக்யாசிங் தாகூரை விடுவிக்க அரசு வழக்கறிஞரான ரோகினி சலியன் மீது அழுத்தம் தர ஆரம்பித்தனர். இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். அதை அவர் மறுத்த காரணத்தால் அரசு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி முன்னால் பிரமானம் செய்து சாட்சி சொன்னவர்கள் பிறழ் சாட்சிகளாக மாற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பிரக்யா சிங் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இத்தகைய பயங்கரவாத செயலில் ஈடுபட்ட சாத்வி பிரக்யாசிங் தாகூரை, போபால் மக்களவை தொகுதியில் வேட்பாளராக பா.ஜ.க. நிறுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கையின் அடிப்படையில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் செயலை பா.ஜ.க. செய்திருக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டுமென்று பா.ஜ.க.வினர் பேசுவதைவிட ஒரு சந்தர்ப்பவாத செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. ஒருபக்கம் பயங்கரவாத எதிர்ப்பு. இன்னொரு பக்கம் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு. இத்தகைய இரட்டை வேடம் போடுகிற பா.ஜ.க.வையும், நரேந்திர மோடியையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு மதம் கிடையாது. பயங்கரவாதிகள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்று பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. பயங்கரவாதிகள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்ச விசாரணையின் அடிப்படையில் சட்டத்தின்படி தண்டிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். அந்த அடிப்படை கடமையைக் கூட செய்யாத ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக நாம் பெற்றிருப்பது வெட்கக்கேடானதாகும். எதையும் அரசியல் ஆதாயத்தோடு மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி பதவியில் ஒட்டிக் கொள்ள வேண்டுமென்ற அணுகுமுறையை கையாளும் நரேந்திர மோடிக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

ஒருபக்கம் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாக கூறுகிறார். அதற்காக பெருமைப்பட்டுக் கொள்கிறார். தம்மை வீர, தீரமிக்கவராக காட்டிக் கொள்ள முயல்கிறார். ஆனால் அதே சமயத்தில் ஆறு பேர் பலியானதற்கு காரணமான மலேகான் குண்டு வெடிப்பில் ஆதாரங்களுடன் பிடிபட்ட பிரக்யாசிங் தாகூரை பா.ஜ.க.வின் மக்களவை வேட்பாளராக நிறுத்திய நரேந்திர மோடிக்கு சட்டத்தின் மீதும், அமைதியின் மீதும் நம்பிக்கையுள்ள மக்கள் உரிய தண்டனையை வழங்குவார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி கிழித்தெறியப்பட்டு விட்டது. அவரது இரட்டை வேடம் கலைந்து விட்டது. அவரை யார் என்று அறிந்து கொள்வதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

Leave a Reply