APR – 02

APR-02

      தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை

பொதுவாக தேர்தல் அறிக்கைக்காக ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு குழுவை அமைத்து, அறைக்குள் அமர்ந்து விவாதித்து தயார் செய்து வெளியிடுவார்கள். ஆனால் அது மக்களின் குரலை ஒலிப்பதாக இருக்காது. இதை உணர்ந்த காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மக்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் தலைமையில் 21 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை கடந்த அக்டோபர் 2018 இல் அமைத்தார். இந்த குழுவிற்கு உறுதுணையாக 20 துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டன. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு இந்தியாவில் உள்ள 24 மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்கள், நிபுணர்கள், கல்வியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் முனைவோர், தொழிற்சங்க பிரதிநிதிகள், பெண் உரிமை அமைப்புகள் போன்ற பல்வேறு பிரிவினரை நேரில் சந்தித்து கருத்துக்களை கேட்டு பதிவு செய்து, அதனடிப்படையில் தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆக, காங்கிரசின் தேர்தல் அறிக்கை என்பது மக்களின் குரலாக ஒலிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தயாரிக்கப்பட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் அதனை வெளியிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்கு முதற்கட்டமாக அரசு பணிகளில் காலியாக உள்ள 22 லட்சம் இடங்கள் நிரப்பப்படும், 2022 க்குள் முற்றிலுமாக வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும், நாடு முழுவதும் விவசாயிகள் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டு வருகிற நிலையில் கடன் நிவாரணம் உடனடியாக வழங்கப்படும், விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, மக்களவையில் 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்படும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரப்படும்.

2030 ஆம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்கும் நோக்கத்தில் குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும், அதன்மூலம் மக்கள் தொகையில் 20 சதவீத குடும்பத்தினருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூபாய் 72 ஆயிரம் அந்தந்த குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூபாய் 3 கோடியே 60 லட்சம் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும்.

மாநில உரிமைகளை மதிக்கிற வகையில் கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட் தொகையில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படும். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு திணிப்பால் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக மாணவர்கள் மாநில பாடத் திட்டத்தில் படிக்கிற போது மத்திய பாடத் திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடப்பதால் தமிழக மாணவர்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வந்தார்கள். இதை தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான எதிர்கட்சிகள் கடுமையான போராட்டங்களை நடத்தி வந்தன.

ஆனால் அதையும் மீறி, மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணித்து வந்தது. இந்த திணிப்பை முடிவுக்கு கொண்டு வருகிற வகையில் அந்தந்த மாநிலங்களே நீட் தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யலாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார். இது தமிழக மக்களிடையே பெருத்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்திருக்கிற பா.ஜ.க. நீட் தேர்வை ஆதரித்து தமிழகத்தில் திணித்தது என்பதை எவரும் மறந்திட இயலாது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதை பா.ஜ.க. ஏற்றுக் கொள்கிறதா ? பா.ஜ.க. ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அ.தி.மு.க. கோரிக்கை விடுக்குமா ? நரேந்திர மோடியை நிர்ப்பந்திக்குமா ? இதற்குரிய பதிலை எவ்வித சால்ஜாப்பும் இல்லாமல் அ.தி.மு.க. தலைமை தெளிவுபடுத்துமா ? இதன்மூலம் அ.தி.மு.க.வின் இரட்டை வேடம் மக்களிடையே தோலுரிக்கப்படும்.

கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவதற்காக கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை நிறைவேற்றியது. இதன்மூலம நூறு நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டது. அது தற்போது 150 நாட்களாக உயர்த்தப்பட்டு அந்தந்த மாநிலங்களில் உள்ள விலைவாசிக்கேற்ப குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரமே மாற்றியமைக்கப்பட்டு ஏழைஎளிய மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.

இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான லட்சியத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டிருக்கிறது. அது காங்கிரசின் குரலாக மட்டுமல்லாமல், மக்களின் குரலாகவும் பிரதிபலித்திருப்பதால் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழக மக்களின் உரிமைகள், நலன்கள்சார்ந்து பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் நாற்பதும் நமதே என்ற இலக்கை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அடிப்படையில் தமிழகம் முழுவதும் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தீவிரமான பிரச்சாரத்தை தமிழ்நாடு காங்கிரஸ் மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply