திரு காமராஜர்


முன்னாள் முதல்அமைச்சர், தமிழ்நாடு

திரு காமராஜர்

திருவாளர் கு.காமராஜ்: குமாரசாமி காமராஜர், இந்திய தேசிய கட்டமைப்பிலும், அதன் பயணத்தை நிர்ணயம் செய்ததிலும் பெரும் பங்காற்றிய ஒப்பற்ற தலைவர் ஆவார். குறிப்பாக, 1964 ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேருவின் மறைவிலிருந்து 1969 ஆம் ஆண்டு காங்கிரஸின் உட்கட்சி பிரிவ வரை காமராஜரின் தேசியப்பணி அளப்பரியது. 1903 ஜுலை, 15 ஆம் தேதி தமிழகத்தின் ஏழ்மை மிகுந்த ஒரு பிற்பட்ட இந்து சாதிய கட்டமைப்பில் மிகவும் பின்தங்கிய நாடார் சமூகத்தில் பிறந்தவர். அவரது பள்ளி படிப்பு வெறும் 6 ஆண்டு காலமே நீடித்தது. தன்னுடைய 12வது வயதில் மளிகை கடையில் வேலை பார்த்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் நடைபெற்ற பொழுது, காமராஜருக்கு 15 வயது. இளம் வயதில் அதனை கேள்வியுற்ற அவருக்கு, இந்த சம்பவமே ஒரு திருப்புமுனையாகி விட்டது. இரண்டு வருடங்கள் கழித்து மதுரை மாநகரில் காந்தியடிகளை சந்திக்கிறார் சிறுவயது காமராஜர். அப்போது தன் வாழ்க்கை பாதையை நிர்ணயிக்க தொடங்கினார். பின்னர், இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு, தன் சொந்த வாழ்க்கை, சுகபோகங்கள் எல்லாவற்றையும் மறந்து இந்திய விடுதலைக்காக அரும்பாடு பட்டார். தன்னுடைய 18 வயதில் மகாத்மா காந்தியின் அழைப்பிற்கிணங்க, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற்று ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார். கிராமம் கிராமமாக பிரச்சாரத்திலும், பொது செலவீனங்களுக்கு நன்கொடை திரட்டுவதற்காகவும், கட்சிக் கூட்டங்களை நிகழ்த்தியும் காங்கிரஸ் பேரியக்கத்திற்காக உழைத்தார்.

தன் 20வது வயதில் சிறந்த பேச்சாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவருமான தீரர் சத்தியமூர்த்தியினால் அடையாளம் காணப்பட்டார் காமராஜர். பின்பு அவரையே தன் அரசியல் குருவாக ஏற்று நடந்தார். 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்குபெற்ற காமராஜர் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் அவர் வாழ்க்கையில் வாடிக்கையாக நடைபெற தொடங்கியது இதிலிருந்துதான். ஆறு முறை சிறைச்சாலை சென்றார். ஏறக்குறைய 3000த்திற்கும் அதிகமான நாட்களை சிறையில் கழித்தார். திருமணமாகாத காமராஜருக்கு, சுதந்திரமடைந்த பொழுது வயது 44 ஆகும். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆனார். 1954 வரை அப்பதவியில் நீடித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியினுடைய காரிய கமிட்டியில் 1947 முதல் 1969 வரை உறுப்பினராகவும், சிறப்பு அழைப்பாளராகவும் தொடர்ந்து நீடித்தார். 1937 ஆண்டில் மெட்ராஸ் சட்டபேரவையில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் காமராஜர். மீண்டும் 1946 ஆண்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் 1946 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1952 ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக 1954 ஆண்டில் பொறுப்பேற்றார். அப்போது இந்தியாவின், ஆங்கில மொழி பரிச்சயமில்லாத முதல்வர் அவரே ஆவார். ஆனால், அவருடைய 9 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியினை, மற்ற மாநிலங்களை விட அடைந்து வந்தது. 1963 ஆண்டில் கே பிளான் எனும் திட்டத்தை நேருவிடம் சமர்பித்தார் காமராஜர். அதன்படி வயது மூப்படைந்தவர்கள் கட்சி பணியிலிருந்தும், அமைச்சரவை பொறுப்பிலிருந்தும் விலக நேரிட்டது. இத்திட்டம் காங்கிரஸ் காரிய கமிட்டியின் ஒப்புதலை பெற்ற இரண்டே மாதங்களில் நடைபெறத் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர்களிடம் அதிகார மோகத்தினை நீக்கி, இயக்கத்தினுடைய கொள்கைகளுக்கும், நோக்கங்களுக்கும் பாடுபட வழி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். இது அமலுக்கு வந்தவுடன், 6 மாநில முதல்வர்களும், 6 மத்திய அமைச்சர்களும் தங்கள் பொறுப்பிலிருந்து விலகினார்கள்.

பின்னர் காமராஜர் 1963 ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வகையில் இந்தியாவின் 2 பிரதமர்களை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு மிக முக்கிய பங்காற்றினார். 1967 ஆண்டு விருதுநகர் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்தது அவரின் புகழிற்கு சிறிது பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும் 1967 ஆண்டு நாகர்கோவில்பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்தார். அப்போது நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பிரிவினையின் போது ஸ்தாபன காங்கிரஸில் இயங்கி வந்தார் காமராஜர். தொடர்ச்சியாக வந்த 1971 ஆண்டு பொதுத்தேர்தலின் முடிவு அவருடைய அணிக்கு பின்னடைவை உண்டாக்கியது. 

தன் வாழ்வின் இறுதி வரை இந்திய மக்களுக்கு அயராது உழைத்தவர் காமராஜர். அவர் மறைவிற்கு பின், 1967 ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய குடிமை விருதான ‘பாரத் ரத்னா’ விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது. .