ஜவஹர்லால் நேரு ஆட்சி

நேரு காலத்தில் இந்தியா..

1947 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி இந்தியாவின் முதல் இயற்பியல் பரிசோதனை சாலையை (Physical Laboratary) உருவாக்கிட, அன்றைய இடைக்கால பிரதமராக இருந்த பண்டித நேரு தேசிய இயற்பியல் பரிசோதனைக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் 17 தேசிய இயற்பியல் பரிசோதனைக் கூடங்கள் (National Physical Laboratary) நிறுவப்பட்டு இணைக்கப்பட்டன. 1947 அக்டோபர் மாதம் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. 

1948-ல் ஹைதராபாத் சமஸ்தானம், இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது. 

ஏற்கனவே, 565 சமஸ்தானங்கள் சர்தார் படேலின் முயற்சியால் 1948 ஆம் ஆண்டுக்கு முன்பே இந்தியாவுடன் இணைக்கப்பட்டு விட்டன. 

1948-ல் விசாகப்பட்டிணம் கப்பல் தளத்திலிருந்து இந்தியாவில் கட்டிமுடிக்கப்பட்ட முதல் கப்பலான ‘ஜலஉஷா’ தனது பிரயாணத்தைத் தொடங்கியது. 

1948-ல் இந்தியா அணுசக்தியை, ஆக்க சக்தியாக பயன்படுத்திட வேண்டுமென்பதற்காக பண்டித நேரு, ‘ஹோமிபாபா’ வின் தலைமையில் பாபா அணுசக்தி நிலையத்தை (Baba Aotmic Research Center – BARC)-ஐ உருவாக்கினார். அரசு அமைப்புகளான ‘அணுசக்தி ஆணையம்’ (Atomic Energy Commission) மற்றும் ‘அணுசக்தித்துறை’ (Department of Atomic Energy) ஆகிய இரு அமைப்புகளையும் உருவாக்கினார். இன்று, அவை இரண்டு ஆலமரம் போல் வளர்ந்து இருப்பதால், அணுசக்தி இந்நாட்டின் வளர்ச்சிக்காக தனது உயரிய பங்கினை அளித்து வருகிறது. 

1948-ல் “ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம்” கொண்டு வரப்பட்டது. இது நிலச்சீர்த்திருத்தச் சட்டத்திற்கு முன்னோடியாகக் கருதப்பட்டது. 1950-ல் ஜனவரி 26-ல் இந்திய குடியரசு பிரகடனம். 

1951-ல் அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்தார் நேரு. இதன்மூலம் “பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு” என்பது உறுதியாயிற்று. இதற்கு முழு முயற்சி எடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர்’. 

1951-ல் “திட்டக்கமிஷன்” அறிமுகமாயிற்று. 

முதல் ஐந்தாண்டு திட்டத்தில் அரசாங்கம், தொழில், விவசாயம், முதலீடுகள், உற்பத்தி ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுத்தது. அதன் முதல் அறிகுறிதான், சென்னையில் 1951 ஆம் ஆண்டு “இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை”க்கு இடப்பட்ட அடித்தளம். ஸ்விட்ஸர்லாந்து தொழில்நுட்ப உதவியோடு இந்த தொழிற்சாலை ஆண்டு ஒன்றுக்கு சுமார் 600 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்கிறது. இதன் மூலமே, 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெற்றனர். இந்தத் தொழிற்சாலை இங்கே அமைந்ததின் மூலம் பல துணைத்தொழில்களும் வளர்ந்தன. 

‘Core Sector’ எனும் “அடிப்படைக் கட்டமைப்பு”த் துறைகளான, இரும்பு கனிமவளம், நிலக்கரி கனிமவளம், நீர்த்தேக்கங்கள், மின்சாரம், சிமெண்டு ஆகிய துறைகளில் உற்பத்தியை பெருக்கிட “திட்டக்கமிஷன்”திட்டம் தீட்டியது. 

இரும்பு-உருக்கு ஆலைகளை நிறுவுமாறு, பண்டித நேரு, அன்றிருந்த இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களைக் கேட்டுக் கொண்டார். அதற்கு மூலதனம் அதிகமாகத் தேவைப்படுமென்பதால், அன்றைய இந்திய தொழிலதிபர்கள் யாரும் முன்வரவில்லை. எனவே தான் பண்டித நேரு “கலப்புப் பொருளாதாரக் கொள்கை” யை அறிமுகப்படுத்தினார். இதனால் தான், பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கிட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது. அரசிடம் அதற்கான நிதி வசதி இல்லை. 

ஒரு குணடூசியைக் கூட உற்பத்தி செய்யமுடியாத நிலை. ஆனால், நேரு என்ற மாமனிதரின் மீதுள்ள நம்பிக்கை தான் பிற வெளிநாட்டு அரசுகள் கடன் தர முன்வந்தன. அதுமட்டுமில்லாது, பல தொழிற்சாலைகளும், பல கனரகத் தொழில்களும் இணைந்து பணியாற்றிடும் முறையை (Colloboration) பின்பற்றி உதவி அளித்தன. 

நேருவின் கலப்புப் பொருளாதாரக் கொள்கைகளே, அவருக்குப்பின் வந்த அரசுகள், நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி இட்டுச் சென்றிட வழிவகுத்துள்ளன.

நேரு காலத்து பொதுத்துறை நிறுவனங்கள்:

இரும்பு எஃகுத் தொழிற்சாலைகள்:

ரூர்கேலா எஃகுத் தொழிற்சாலை (ஒரிஸா) – 1959 ஆம் ஆண்டு ஜெர்மனியுடன் இணைந்து 

பிலாய் எஃகுத் தொழிற்சாலை (மத்திய பிரதேசம் – தற்பொழுது சட்டீஸ்கர்) – 1959 ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் நாட்டுடன் இணைந்து 

துர்காபூர் எஃகுத் தொழிற்சாலை (மேற்கு வங்காளம்) – 1965 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுடன் இணைந்து 

பொகாரோ எஃகுத் தொழிற்சாலை (ஜார்கண்ட்) – 1965 ஆம்

ஆண்டு சோவியத் நாட்டுடன் இணைந்து 

இஸ்கோ எஃகுத் தொழிற்சாலை (அஸன்சால், மேற்கு வங்காளம்) 

பத்ராவதி – விஸ்வேஸ்வரய்யா எஃகுத் தொழிற்சாலை (கர்நாடகா) 

பல புதிய சிமெண்ட் தொழிற்சாலைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடப்பட்டது.

நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட உரத்தொழிற்சாலைகள்:

  • சிந்தரி உரத்தொழிற்சாலை (1961) – ஜார்கண்ட் மாநிலம் 
  • குஜராத் உரத்தொழிற்சாலை (1967) – குஜராத் 
  • மெட்ராஸ் உரத்தொழிற்சாலை (1966) – தமிழ்நாடு 
  • கோரமெண்டல் உரத்தொழிற்சாலை (1961) 

நேரு காலத்தில் கட்டப்பட்ட முக்கியமான பெரும் அணைக்கட்டுகள்:

பஞ்சாப் மாநிலத்தில் ‘சட்லஜ்’ நதிக்குக் குறுக்காக ‘பக்ரா நங்கல் அணை’.

ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதியில் ‘நாகார்ஜுன சாகர் அணை’.

ஒரிஸா மாநிலத்தில் மகாநதியில் ‘ஹிராகுட் அணை’

தாமேதர் பள்ளத்தாக்கு அணை (மேற்கு வங்காளம்)

தமிழ்நாட்டில் வைகை அணை

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீசைலம் அணை (கிருஷ்ணா நதியில்) ஆகியவை குறிப்பிடத் தக்கதாகும்.

உள்கட்டமைப்பு வசதிகள்

தேசிய நெடுஞ்சாலைகளை நிறுவிடுவதற்குரிய திட்டங்கள் தீட்டப்பட்டன.

NH1, NH2, NH3, NH4, NH5, NH6, NH7,….. NH220 போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளான நெடுஞ்சாலைகள் நாடெங்கிலும் நிறுவிட வழிவகுக்கப் பட்டுள்ளன.

(இவைதான் இன்று தங்க நாற்கர சாலைகளாகவும், வைர நாற்கர சாலைகளாகவும் விரிவடைந்து நிற்கின்றன) 

ரயில்வேயின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை மேலும் வளர்த்திடுவதற்குரிய திட்டங்கள் தீட்டப்பட்டன.

அதன் முதல்படியாக சென்னையில் ‘இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை (1951)’லக்னோவில் ‘டீஸல் இஞ்சின் உருவாக்கிடும் தொழிற்சாலை (1951) ஆகியவற்றிற்கு அடித்தளம் போடப்பட்டது.

பல புதிய ரயில்வே பிராந்தியங்கள் (Zones) உருவாக்கப்பட்ட புதிய இருப்புப்பாதைத் தடங்களை அமைக்கப்பட, சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வசதிகள் பெருக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, குஜராத்தில் காண்ட்லா, ஒரிஸாவில் பராதீப், கர்நாடகாவில் மங்களுர், கோவாவில் மர்மகோவா போன்ற இடங்களில் மாபெரும் துறைமுகங்கள் உருவாக்கப்பட்டன.

குஜராத்தில் உள்ள காண்ட்லா துறைமுகம் உருவாக்கப்பட்டதாலும், அது அரபு நாடுகளுக்கு அருகில் இருந்ததாலும் கச்சா எண்ணெய் அங்கு இறக்குமதி செய்வதற்கு வசதியாக இருந்தது. எனவே தான், அம்மாநிலம் 1960 ஆம் ஆண்டு உருவான பின் மிக வேகமாக முன்னேறுவதற்கு வசதியாக அமைந்தது.

நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட கப்பல் கட்டும் தளங்கள்:

விசாகப்பட்டிணம் கப்பல் கட்டும் தளம்

கோவா கப்பல் கட்டும் தளம் (1961)

மசாகான் கப்பல் கட்டும் தளம் மும்பை (1960)

(இது போன்று இந்திராகாந்தியால், விசாகப்பட்டிணத்தில் நீர்முழ்கி கப்பல் கட்டும் தளம் உருவாக்கப்பட்டது)

மின்சார உற்பத்தி

1973 ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்களை அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டு CIL (இந்திய நிலக்கரி நிறுவனம்), NTPC (தேசிய அனல்மின்சக்தி ஆணையம்) ஆகியவை உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலியிலும், பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்திட்டம் அமுலாக்கப்பட்டது.

200 கோடி டன் நிலக்கரியைத் தோண்டி எடுப்பதற்காக மத்திய அரசு ‘நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன்’ என்ற பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்கினார்கள் பண்டித நேருவும், பெருந்தலைவர் காமராஜரும்.

இது இன்னும் லாபகரமாக பணியாற்றிக் கொண்டு, நாட்டிலுள்ள அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை வழங்கி வருகிறது.

நேரு காலத்தில் பல மாநிலங்களில்அனல், புனல், அணுமின் நிலையங்களுக்கும் அடித்தளமிடப்பட்டது.

உயர்கல்வி

1952-ல் தொழில் நுட்ப உயர்கல்விக்கு இந்தியாவில் முதன்முதலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

5 IIT உயர்தொழில்நுட்பக் கல்வி ஸ்தாபனங்கள் நிறுவப்பட்டன.

முதல்முதலாக மேற்கு வங்கத்திலுள்ள கரகபூரில் IIT நிறுவப்பட்டது. பின் சென்னை, மும்பை, கான்பூர், டெல்லி ஆகியவற்றில் IIT கள் நிறுவப்பட்டன. இதன் பின் பல இந்திய நகரங்களில் இவை விரிவாக்கப்பட்டன.

சென்னைக்கு IIT ஐ நிறுவியப் பெருமை, பெருந்தலைவர் காமராஜரேயே சாரும்.

1948 ஆம் ஆண்டு, ஜமீன்தாரி ஒழிப்புச்சட்டத்திற்குப் பின், தமிழ் நாட்டில் 1952 ஆம் ஆண்டு தஞ்சை பண்ணையார் பாதுகாப்புச் சட்டமும் நிறைவேற்றப்பட்டன.

சென்னை குத்தகை சாகுபடியாளர்கள் பாதுகாப்புச் சட்டமும், 1955 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது

பின் தமிழ்நாட்டில் 1956 ஆம் ஆண்டு நிலச்சீர்திருத்தச் (நிலஉச்சவரம்பு நிர்ணயித்தல்) சட்டம் நிறைவேறியது.

1972 க்குள் நிலச்சீர்த்திருத்தச் சட்டம் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்றப்பட்டது.

1954-ல் சீனாவுடன் பஞ்சசீலக்கொள்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

1956-ல் மாநிலங்களை மாற்றி அமைத்திடும் சட்டம் நிறைவேறியது. பல புது மாநிலங்கள் தோன்றின.

1956-ல் தொழில் வளர்ச்சிக் கொள்கை (The Industrial Policy Resolution (Revolution) of 1956) வகுக்கப்பட்டது.

இதன்மூலம் தொழில்துறைகள் மூன்று வகையாக அடையாளம் கண்டு பிரிக்கப்பட்டன.

முதல் பிரிவு (A): அரசாங்கமே முழுப் பொறுப்பேற்று செயல்படுத்தப்படும் தொழில்கள். இதில் அடிப்படைக் கட்டமைப்புகளை (Core Sector) உருவாக்கிடும் துறைகள் அடங்கும்.

இரண்டாம் பிரிவு (B): அரசாங்கத்தின் பொறுப்பிலும், அதே சமயத்தில் அவற்றில் தனியாருக்கும் பங்கு இருக்கும் தொழில்கள்.

மூன்றாம் பிரிவு (C): தனியார் துறை வசம் உள்ள தொழில்கள்.

தனியார்துறை நடத்தும் தொழில்களுக்கு நியாயமான பாரபட்சமற்ற உதவிகளை அரசு கொடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுஇச்சட்டம். அதே போல கிராமப்புற தொழில்கள், சிறுதொழில்களுக்கு அரசு நன்கு உதவிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளது இச்சட்டம். தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் விதிகள். கட்டுக்குள் இருக்கும் அந்நிய முதலீடுகள் போன்றவை இச்சட்டத்தின் சிறப்பு அம்சங்களாகும். 

தொலை தொடர்பு மற்றும் விண்வெளித் துறை

1959 ஆம் ஆண்டு செப்டம்பா மாதம் 15 ஆம் நாள் தொலைக்காட்சி சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது.

1962 ஆம் ஆண்டு நேரு ‘தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவை (INCOSPAR) நிறுவி அதன் தலைவராக, பிரபல விஞ்ஞானி விக்ரம் சாராபாய் அவர்களை நியமித்தார்.

1963ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் ஏவுகணை, விண்ணில் சீறிப்பாய்ந்தது.