சாஸ்திரி & இந்திரா காந்தி ஆட்சி

லால் பகதூர் சாஸ்திரி மற்றும் அன்னை இந்திரா காந்தி ஆட்சியில் இந்தியா

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பீல்டு மார்ஷல் அயூப்கான், நேருவுக்குப் பின் இந்தியா மிகவும் வலுவிழந்திருக்கிறது என்று எண்ணி, பாகிஸ்தான் படைகளை, குஜராத் எல்லையிலும், காஷ்மீர் எல்லையிலும் இந்தியாவை தாக்குவதற்கு ஆணைப் பிறப்பித்தார். ஆனால் பிரதமர் சாஸ்திரி அதற்கெல்லாம் பயப்படவில்லை. நமது ராணுவம் மிகுந்த பலம் கொண்டு தாக்கியதில் பாகிஸ்தான் படைகள் சிதறி ஓடின. பிரதமர் சாஸ்திரி பார்வைக்கு வலுவில்லாதவர் போல் தோற்றம் கொண்டவராக இருந்தாலும், அந்தப் போர் அவரை எப்பேர்பட்டவர் என்று அடையாளம் காட்டியது. ரஷ்யாவின் தலையீட்டால், அப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பின் இரு தரப்பினரையும் சமாதானம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்திட ரஷ்யா முயற்சி செய்தது. அதற்காக பிரதமர் சாஸ்திரி, 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்ட் நகருக்கு விரைந்தார். 

அச்சமயத்தில் விவசாயிகளையும், ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்திட லால்பகதூர் சாஸ்திரி ஏற்படுத்திட்ட கோஷம் தான் ‘ஜெய் கிஸான், ஜெய் ஜவான்’ என்ற கோஷம். 

1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் நாள், இரு நாடுகளுக்கிடையே சமாதான ஒப்பந்தமாகிய “தாஷ்கண்ட் சமாதான ஒப்பந்தம்” நிறைவேறியது. அதில் பிரதமர் சாஸ்திரியும், பீல்டு மார்ஷல் அயூப் கானும் கையெழுத்திட்டனர்.

1966 ல் அன்னை இந்திரா காந்தி பிரதமராக பதவியேற்றார்.

இரும்பு எஃகுத் தொழிற்சாலைகள்:

1962 ல் சீனாவுடன் போர், 1965 ல் பாகிஸ்தானுடன் போர் என இரு போர்களை சந்தித்தது. அதனால், பொருளாதார ரீதியாக பின்னடைவைச் சந்தித்திருந்தது. இரு பஞ்சங்களையும் ஏககாலத்தில் இந்தியா சந்திக்க நேர்ந்தது. 

நாடு முழுவதும் உணவுக்குத் தட்டுப்பாடு (Supply could not cope up with demand) ஏற்பட்டது. நாட்டில் பட்டினி சாவுகள் அதிகமாக இருந்தது. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள், வாரத்தில் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டிடவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கும் படி ஆயிற்று. நாடெங்கிலும் உணவுப் பற்றாக்குறை. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்காக இருந்திடவில்லை. (அன்றைய மக்கள் தொகை 48 கோடியாக இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.) 

இந்தப் பற்றாக்குறையை சமாளித்திட PL-480 என்ற திட்டதின் படி அமெரிக்காவை கையேந்தி, கோதுமையை இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலிருந்தது இந்தியா. 

1966 ஆம் ஆண்டு டில்லியில் நடந்த “கூட்டுச்சேரா அணிகளின் – NAM” மாநாட்டில், எகிப்து அதிபர் நாசர், யூகோஸ்லேவிய அதிபர் மார்ஷல் டிட்டோ அவர்களின் முன்னிலையில், பிரதமர் இந்திரா காந்தி காலம் காலமாக நடந்து வந்த ‘வியட்நாம்’ விடுதலைப் போரில் அமெரிக்கா தலையிடுவது நியாயமற்றது என்றும், அதிலிருந்து அமெரிக்க விலகிக் கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

இது அன்றைய அமெரிக்கா அதிபர் லிண்டன் ஜான்சனை ஆத்திரமூட்டியது. ‘இந்தியா கையேந்தி உணவு பெறும் நாடு, அமெரிக்கா உணவைத் தரும் நாடு’ என்பதை இந்தியா நினைவில் கொள்ளவேண்டும் என்று ஏளனமாகப் பேசினார். 

இது பிரதமர் இந்திராவை மிகவம் ஆத்திரமடையச் செய்தது. அதனால் உணவுப்பற்றாக்குறையை அறவே நீக்கிட முடிவு செய்தார். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஒரளவு பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியை அமைத்ததினால் தான் இந்தியாவில் ‘பசுமைப்புரட்சி’ யை உருவாக்க முடிந்தது. 

1967 ஆம் ஆண்டு பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்திரபிரதேசம் ஆகிய விவசாயிகளுக்கு உற்சாகமும், உறுதியும் அளித்து, மெக்ஸிகோ நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட கோதுமை விதைகளைப் பயன்படுத்தி, விவசாயம் செய்திட ஊக்குவித்தார். 

அதன்பயனாக, இதுவரை 1 ஹெக்டேருக்கு வெறும் சிறிய அளவிற்கு உற்பத்தி கொடுத்த வந்த நிலங்கள், மெக்ஸிகோ ரக விதைகளைப் பயன்படுத்தியபின், 5000 அல்லது 6000 கிலோ என்ற அளவிற்கு பிரமிக்கத்தக்க உற்பத்தியைக் கொடுத்தது. சில இடங்களில் 12,000 கிலோ அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. இதனால், உணவுப் பற்றாக்குறை அறவே ஒடுக்கப்பட்டுவிட்டது. 

இதுபோன்ற நெற்பயிருக்கும், ஆராய்ச்சியின் மூலம் புதுவிதைகள் உருவாக்கப்பட்டு, நெல் விளைச்சலும் அமோகமாயிற்று. இதுதான் உண்மையான ‘பசுமைப்புரட்சி’. 

இந்திரா காந்தியின் பசுமைப் புரட்சி அமெரிக்க அதிபர் ஜான்சனின் ஆணவப்பேச்சிற்குப் பதிலடி கொடுப்பது போல் அமைந்தது. 

இந்தப் பசுமை புரட்சி தான், இந்தியாவின் மக்கள் தொகை 125 கோடி ஆன பின்பும், இன்றும் உணவுப் பற்றாக்குறையில்லாமல் பார்த்துக் கொள்கிறது. 

(2003 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் அன்றைய இந்திய பிரதமர் வாஜ்பாய், “உணவுக்காக நாங்கள் பிறநாடுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். நாம் நமது காலிலேயே நிற்கவேண்டும், நமக்குத் தேவையான உணவுப் பொருட்களை நாமே உற்பத்தி செய்திட வேண்டும் என்று எண்ணினோம். அந்த எண்ணங்களை ‘பசுமைப் புரட்சி’ மூலமாக நிறைவேற்றித் தந்த இந்திரா காந்திக்கு நான் என்றென்றும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்” என்று மனமுவந்து இந்திரா காந்தியை பாராட்டினார்.) 

1967 ஆம் ஆண்டு, தொலைத்தொடர்பைப் பெருக்கிடவும் மற்றும் மேம்படுத்திடவும் விண்வெளியிலுள்ள மின்காந்த அலைகளை பயன்படுத்திட வேண்டிய கட்டாயமிருந்தது. அன்றைய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவர் இதற்காக பிரதமர் இந்திரா காந்தியை அணுகினார். இந்திரா காந்தி கொடுத்த ஆதரவாலும், ஊக்கத்தாலும் இந்தியாவின் பூமித்தளம் (Earth Station) ஒன்று, அகமதாபாத்தில் உருப்பெற்றது. 

இம்மாபெரும் முயற்சி நாட்டில் கல்வி வளம் மேம்படவும், தொலைத்தொடர்புத் துறை வளர்ச்சியுறவும் இன்றும் பயன்பட்டு வருகிறது.

வங்கிகள் நாட்டுடைமை

1969 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19 ஆம் தேதி, அன்றைய பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்த இந்திரா காந்தி 14 பெரிய வங்கிக் கிளைகளை நாட்டுடமையாக்கினார். (இது பின்னாளில் 27 ஆக உயர்ந்தது). 

நாடு முழுவதும் பல வங்கிகள் தோன்றின. இதனால் விவசாயிகள், சிறுதொழில் ஈடுபடுவோர், சில்லரை வணிகங்கள், சிறுபோக்குவரத்து நிறுவனங்கள் கடன் பெற்று கல்வியைத் தொடருவோர், தலித்துக்கள், ஏழை எளியோர் என சமூகத்தில் இதுவரை வங்கிச் சேவையை அனுபவித்திராத பலர் பயனடைந்தனர். 

(தற்போது பிரதமர் மோடி ‘ஜன்தன்’ திட்டத்தை செயலாற்ற முடிகிறதென்றால், அது இந்திரா காந்தி, வங்கிகளை நாட்டுடமை ஆக்கியதுதான் காரணம். ஆனால் அன்று இவரது கட்சியான ஜனசங்கம் (பிஜேபி). வங்கிகளின் நாட்டுடமையை முழுமூச்சுடன் எதிர்த்தது. இதையெல்லாம் மீறி வங்கிகளை நாட்டுடமையாக்கினார். இதனால் இந்திரா காந்தியின் செல்வாக்கு நாடெங்கிலும் உயர்ந்தது.) 

வங்கிகள் நாட்டுடமையால், சேமிப்பு கலாச்சாரம் நாடு முழுவதும் பரவியது. அனைத்து நாட்டுடமை வங்கிகளும் நல்ல நிலைமையிலிருந்ததால், 2008 ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரச் சரிவில், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும், வங்கிச் சேவை பெரும் சரிவைச் சந்தித்து பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாயின. 

ஆனால், அன்றைய இந்திரா காந்தியின் தீர்க்கதரிசனமான முடிவினால் இன்று இந்தியாவிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. 

வெண்மை புரட்சி

1970 ல் அன்னை இந்திரா காந்தியின் தலைமையிலான தேசிய பால் வள மேம்பாட்டு வாரியத்தினால் துவக்கப்பட்ட “ஊரக வளர்ச்சித் திட்டம்”, தேசிய அளவில் பால் உற்பத்தியை பெருக்கியது.

இந்த “வெண்மைப் புரட்சி” (White Revolution) இந்தியாவின் பால் உற்பத்தியிலும், பால் பொருட்கள் உற்பத்தியிலும் உலக அளவில் மாபெரும் உற்பத்தியாளர்கள் வரிசையில் வைத்து விட்டது.

‘பசுமைப் புரட்சி’ யை பின்பற்றி தோன்றிய “வெண்மைப் புரட்சி” இந்தியாவின் வறுமை ஒழிப்பிற்கும், பஞ்சம் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கவும் உதவின.

இந்த மாபெரும் ‘வெண்மைப் புரட்சியின்’ அடையாளச் சின்னம் தான் குஜராத்திலுள்ள “ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்-AMUL” நிறுவனம்.

ராஜ மானியம் ஒழிப்பு

1970 ஆண்டு, “ராஜமான்ய ஒழிப்பு மசோதா” (Abolition of Privy Purses) , மக்களவையில் தாக்கல் செய்தார் இந்திரா காந்தி. இந்த மசோதா Cong (O), ஜனசங்கம், சுதந்திரா. SSP கட்சிகளின் எதிர்ப்புக்களுக்கிடையே 3-ல் 2 பங்கு ஆதரவு பெற்று நிறைவேற்றப்பட்டது. ஆனால், பாராளுமன்ற மேலவையில், 3-ல் 2 பங்கிற்கு 1 ஓட்டுக் குறைவாகக் கிடைத்ததால் மசோதா தோல்வியடைந்தது.

1971 ஆம் ஆண்டில் ‘ராஜமான்ய ஒழிப்புச் சட்டம்’ நிறைவேறியது.

தொழில் நுட்பம் நிறைந்த இளைஞர்களை அதிகமாக்கிடவும், அவர்களது திறமைகளை நாட்டுக்கே பயன்படுத்தி இந்தியாவை வல்லரசாக்கிட முயன்றார் இந்திரா காந்தி. இதனால் பல உயர்தொழில் கல்வி நிலையங்களை உருவாக்கினார்.

பங்களாதேஷ் உதயம்

1970-ல் அண்டை நாடான பாகிஸ்தானில் பல விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்தேறின. 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் நடந்த பொதுத்தேர்தலில் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி மொத்தமுள்ள 313 இடங்களில் 169 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது. 

முஜிபுர் ரஹ்மானைப் பிரதமராக அமர்த்திட வேண்டும் என்று கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் விரும்பினர்.ஆனால், அன்றைய பாகிஸ்தான் அதிபர் யஹ்யா கானுக்கு இது ஏற்புடையதாக இல்லை. இதனால், கிழக்கு பாகிஸ்தானில் புரட்சி நடந்தது. முஜிபுர் ரகுமான் சிறையிலடைக்கப்பட்டார். கிழக்கு பாகிஸ்தானை, பாகிஸ்தான் ராணுவம் சூரையாடியது. 30 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 1 கோடி கிழக்கு பாகிஸ்தானியர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். 

இந்திரா காந்திக்கு கிழக்கு பாகிஸ்தானிலிருந்த இடம் பெயர்ந்த அகதிகளை காப்பாற்றும் பொறுப்பு ஏற்பட்டது. இந்தியா பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. எனவே, நீதியை நிலைநிறுத்திட அங்குள்ள மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர முயன்றார். ஆனால், இதற்கு அமெரிக்காவும், சீனாவும் குறுக்கே நின்றன. ஆனால், ஏனைய உலக நாடுகளின் சம்மதத்தைப் பெற்று, கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்தியப் படைகளை அனுப்பி, அமெரிக்காவின் அணுஆயுதக் கப்பலின் அச்சுறுத்தலையும் மீறி, அங்குள்ள மக்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தார் இந்திரா காந்தி. 

1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை பெற்று ‘வங்காள தேசம்’ எனப் புதுப்பெயர் கொண்டது. இந்திரா காந்தி “She not only has made History, but also made Geography” என இந்திய பாராளுமன்றத்தில் புகழப்பட்டார். “அவர் ஒரு துர்கா தேவி” – பாஜக தலைவர் வாஜ்பாயால் வர்ணிக்கப்பட்டார். 

93,000 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் போர்கைதிகளாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

1972-ல் பாகிஸ்தானுடன் “சிம்லா ஒப்பந்தம்” ஏற்பட்டது. இரு நாட்டு பிரதமர்களான, பூட்டோவும், இந்திரா காந்தியும் அதில் கையெழுத்திட்டார்கள். அதன்படி இந்தியா, பாகிஸ்தானிடையே இருந்திடும் பிரச்சனைகளை, அவர்களுக்குள்ளே பேசித்தீர்த்திட வேண்டுமென்றும், மூன்றாவது சக்தியின் தலையீடு தேவையில்லை என்ற நிபந்தனையை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. 

(காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.வின் தலையிட முடியாது என்பதை பாகிஸ்தானை ஏற்றுக் கொள்ளவைத்தார் இந்திரா காந்தி.) 

1973-ல் நிலக்கரிச் சுரங்கங்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. 

1973-ல் அரபு நாடுகளில் ஏற்பட்ட குழப்பங்களினால், கச்சா எண்ணைய் விலை எகிறியது. இந்தியப் பொருளாதாரம் கச்சா எண்ணெயை நம்பித்தான் உள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாகியது. பணவீக்கம் 25 சதவீதத்தைத் தொட்டது. ‘பங்களாதேஷ்’ அகதிகளை பராமரித்திடும் செலவு, 93,000 பாகிஸ்தான் போர்க்கைதிகளைப் பேணிக்காத்திடும் செலவு ஆகியவை வேறு சேர்ந்து கொண்டதால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 

இந்திரா காந்தி இந்த நிலையை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்று வெளிநாடுகள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தன. ‘கச்சா எண்ணை’ பற்றாக்குறையை தீர்த்திடுவதற்காக, பெட்ரோல் நிலவாயு உற்பத்திக்கான புதிய கண்டுபிடிப்புகள் நடந்தேறின. 

கடலுக்குள் துளை செய்து கச்சா எண்ணையை வெளிக்கொணறும் தொழில்நுட்பத்திற்கு ஆதரவு அளித்து, பம்பாய் ஆழ்கடலில் ‘சாகர் சாம்ராட்’ எனும் “நகரும் துளையிடும் மேடை” யை பம்பாய்க்குக் கொணர்ந்து, எண்ணைய் உற்பத்தியை அதிகப்படுத்துவதில் பெரும் முயற்சிகளை எடுத்தார். 

ஒஎன்ஜிஜி, ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்களை முடுக்கிவிட்டு, புதிய எண்ணைக் கிணறுகளைத் தோண்டி, எண்ணைய் உற்பத்தியை அதிகம் செய்திடும் படி பணித்தார். 

நிலையை இந்திரா காந்தி இவ்வாறு கடும்பாடு பட்டு சமாளித்துக் கொண்டிருக்கும் பொழுது, எதிர்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாடு முழுவதும் தழுவிய “ரயில்வே வேலை நிறுத்தத்தை” நடத்தி, நாட்டையே முடக்கினார். இந்திரா காந்தி அதையும் தைரியமாக எதிர் கொண்டு முறியடித்தார். 

1974-ல் ராஜஸ்தானில் அணு ஆயுதப் பரிசோதனை செய்து வெற்றி கண்டார் அன்னை இந்திரா காந்தி. 

இந்தியா ஓர் அணு ஆயுத நாடு என்று பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் மற்ற அணு ஆயுத நாடுகளான சீனா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதித்தன. 

இனி அணுசக்தி வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான உதவிகளை இந்நாடுகளிலிருந்து இந்தியா பெற வேண்டுமெனில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (Non-Nuclear Proliferation Treaty) ல் கையொப்பமிட வேண்டுமென்று இந்தியாவை வலியுறுத்தின. 

இந்த Non-Nuclear Proliferation Treaty ஒப்பந்தமானது, ஐந்து அணு ஆயுத நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடாது என்ற பாரபட்சமான ஒப்பந்தம். இதைஇந்திரா காந்தி ஏற்றிடவில்லை. கையெழுத்திட மறுத்தார். இதனால், அன்று முதற்கொண்டு, உலக அணு சக்தி வளர்ச்சியில் இந்தியா ஓர் ஒதுக்கப்பட்ட நாடாகவே இருந்தது. 

(2008 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் தான் இந்த ஒதுக்கப்பட்ட நிலை நீங்கியது.) 

மேலும், இந்தியா அணு ஆயுத நாடாக ஆகிவிட்டதால் பாகிஸ்தானும், சீனாவும் எல்லையோர பிரச்சனைகளை அறவே குறைத்துக் கொண்டன. எல்லையில் அமைதி நிலவியது. 

இந்தியாவின் பாதுகாப்பு உறுதியானது. ‘இந்திய பாதுகாப்பு’ என்றால் அனைவர் மனதிலும் தோன்றுவது அன்னை இந்திரா காந்தி தான். 

இதுவரை சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த ‘சிக்கிம்’ என்ற நாடு, தன்னை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைத்துக் கொண்டது. 

அணு மின் சக்தி வளர்ச்சியில் எந்த ஒரு உதவியும் முன்னேற்றமடைந்த நாடுகளிலிருந்து கிடைக்காத நிலை உண்டாகியதை இந்திரா காந்தி ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டார். 

அமெரிக்காவும், கனடாவும் முறையே தாராப்பூர் (மகாராஷ்டிரா) மற்றும் கோட்டா (ராஜஸ்தான்) அணு மின்நிலையங்களுக்கு யுரேனியத்தைத் தடை செய்தன. ஆனால், இந்திரா காந்தி துவண்டுவிடவில்லை. அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு ஊக்கமும், ஆதரவும் நல்கி, நாம் நமக்காகவே, நம் நாட்டிலேயே கிடைத்திடும் இயற்கை யுரேனியத்தை பயன்படுத்திடும் PHWR அணுஉலைகளை தயாரித்திடச் செய்தார். 

இந்தியர்களால், இந்தியாவிலேயே அணு உலைகள் தயாரிப்பது என்பது அணுசக்தி உலகில் ஓர் ஒப்பற்ற புரட்சியாகும். 

இன்று வெளிநாடுகளுக்கு PHWR அணு உலைகளை ஏற்றுமதி செய்யுமளவிற்கு இந்தியா திறமை பெற்றுள்ளது. இன்று நாட்டிலுள்ள 22 அணு உலைகளில், 16 அணு உலைகள் இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டதேயாகும்.

எமர்ஜென்சி காலம்

அலுவலகங்கள், பள்ளிகள் ஒழுங்கான நேரத்தில் செயல்பட ஆரம்பித்தன.

ரயில்கள், பேருந்துகள் சரியான நேரத்தில் காலதாமதமின்றி செயல்பட ஆரம்பித்தன.

தொழிற்சாலைகளில் பணிகள் சரிவர நடந்தேறின.

நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்கள் அதிலும் குறிப்பாக தலித்துகள் கொத்தடிமைகளாகத் திகழ்ந்தனர். இவர்கள் யாவரும் ‘நெருக்கடி நிலை’ காலத்தில் கொத்தடிமை நிலைகளிலிருந்து மீட்கப்பட்டனர்.

ஏழை, எளிய தலித் மக்களை வாட்டியது மற்றொரு கொடுமை ‘கந்து வட்டி’. நெருக்கடி காலத்தில் இவர்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைத்தது.

உணவுப் பொருட்களைப் பதுக்கல் செய்தவர்களும், கொள்ளை லாபம் அடிக்க முயன்றவர்களும் எச்சரிக்கப்பட்டனர்.

‘நெருக்கடி நிலை’ அமுலுக்கு வந்த ஒரு வார காலத்தில் அரிசி, கோதுமை விலை சீரானது.

25 சதவீதமாக இருந்த பணவீக்கம், ‘நெருக்கடி நிலை’ பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு மாதத்தில் 2 சதவீதமாகக் குறைந்தது.

ஏழை, எளிய மக்களின் நன்மையை உத்தேசித்து, 20 அம்சத்திட்டத்தை அறிவித்து அதைத் தீவிரமாக செயல்படுத்திக் காட்டினார்.

இந்திராவின் 20 அம்சத் திட்டம் இதுதான்..

விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நில உச்சவரம்புச் சட்டத்தை செயல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப்புற மக்களுக்கு வீடு கட்ட மனை வழங்கப்படும்.

தொழிலாளர்களை அடிமைகளாகக் கருதும் எல்லா ஒப்பந்தங்களும் சட்ட விரோதம் ஆக்கப்படும்.

கிராமப்புற மக்களின் கடன் சுமைகள் அகற்றப்படும்.

விவசாயிகளின் குறைந்தபட்சக் கல்வி உயர்த்தப்படும்.

50 லட்சம் ஹெக்டர் நிலத்தை பாசன வசதிக்கு உட்படுத்த முயற்சி எடுக்கவேண்டும்.

மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

கைத்தறி தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்புத் தரப்படும்.

ஆலைகளில் உற்பத்தியாகும் வேஷ்டி, சேலைகள் கிராமப்புறப் பகுதியில் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

நகர்புற நிலங்களை தேசிய உடைமை ஆக்க சட்டங்களை இயற்றப்படும்.

வரி கட்டாமல் ஏமாற்றுபவர்கள் மீது உடனுக்குடன் விசாரணை செய்து தண்டனை வழங்கப்படும்.

கள்ளக் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் பறிக்கப்படும்.

புதிய தொழில்கள் தொடங்கும் முயற்சிகளுக்கு இப்போது அமலில் உள்ள லைசென்ஸ் முறை குறுக்கிடுகிறது. எனவே, லைசைனஸ் பெறும் முறைகள் தளர்த்தப்படும்.

தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்குப் பங்கு இருக்க வேண்டும்.

லாரிகள், டிரக்குள் மூலம் சரக்குகள் அனுப்புவதற்கான தடைகளும் அகற்றப்படும். இதற்கான தேசிய பெர்மிட் ஏற்படுத்தப்படும்.

வருமான வரிக்கான குறைந்தபட்ச விதிவிலக்கு தொகை இருப்பதை விட மேலும் அதிகமாக உயர்த்தப்படும்.

தங்கள் மேற்படிப்புக்காக வெளியூர் சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கான அனைத்து விடுதிகளிலும் அத்தியாவசியமான பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் வழங்கப்படும்.

பாடப்புத்தகங்கள், நோட்டுக்கள், பேனா, பென்சில் முதலியவை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நியாய விலைக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தொழிற்பயிற்சியாளர் சட்டம் திருத்தப்படும்.

புகழ்பெற்ற ’20 அம்சத்திட்டத்தின்’ மூலம் அன்னை இந்திரா காந்தி அவர்கள், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ‘தலித்’ மக்கள் மேம்பாடு அடைய செயலாற்றியவர்.

நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் கிடைக்கும் உபரி நிலங்களை பலவீனப் பகுதியினருக்கு விநியோகிக்கும் பொழுது 50 சதவீத தலித்துகளுக்கு அதாவது எஸ்.சி மற்றும் எஸ்.டி. இனத்தினருக்கு கட்டாயம் வழங்கிட வேண்டுமென்ற சட்டம் இயற்றினார்.

இதுதவிர, சஞ்சய் காந்தி தனியாக ஐந்து அம்சத்திட்டத்தை அறிவித்தார்.

முதியோர் கல்வி கட்டாயம் ஆக்கப்படும்.

வரதட்சணை ஒழிக்கப்படும்.

சாதி ஒழிக்கப்படும்.

நகர்ப்புறம் அழகுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

குடும்பக் கட்டுபாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.

ஆனால் இந்திரா காந்தியோ நாட்டு வளர்ச்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.

1975 ஆம் ஆண்டில்தான் இந்தியாவின் முதல் விண்வெளிக் கோளான ‘ஆர்ய பட்டா’ விண்ணில் செலுத்தப்பட்டது. இன்றைய கணினி வளர்ச்சிகள், கல்வி வளர்ச்சிக்கும் தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கும், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் அடித்தளமிடப்பட்டது.

1967 ல் அகமாதாபாத்தில் அமைக்கப்பட்ட ‘Satellite Telecommunication Earth Station’ வுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தது. இது தொலைதொடர்பு வசதி விஸ்தரிக்கப்படுவதற்கான முதல்படியாக அமைந்தது. 

அதன்பின் பல விண்கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டிருக்கின்றது. கூடுதலாக Earth Station களும் நிறுவப்பட்டன. 

1976 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மகாராஷ்டிர முதல்வர் எஸ்.பி.சவான், கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ், ஆந்திர முதல்வர் வெங்கல் ராவ் ஆகியோர் தங்களது மாநிலத்தில் பாயும் கிருஷ்ணா நதி நீரை, மாநிலத்திற்கு 5 டிஎம்சி என்ற அளவில், மொத்தம் 15 டிஎம்சி தண்ணீரை, சென்னை மாநகர குடிநீர்த் தேவைக்கு தருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுருப்பதாக அன்னை இந்திரா காந்தி சென்னை மெரினா கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். 

சென்னைக் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க அடித்தளமிட்டவர் அன்னை இந்திரா. 

1976 லிருந்து 1977 வரை, கவர்னர் ஆட்சியிலிருந்த தமிழ்நாட்டில், 20 அம்சத் திட்டம் மிகத்தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்தனர். அத்துமீறல்கள், தமிழ்நாட்டில் அதிகமாக இல்லை. 

ஜனநாயகம் (Democracy) , மதச்சார்பின்மையும் (Secularism), சோஷலலிஸமும் (Socialism) இந்நாட்டின் ஆணிவோர்க் கொள்கைகளாக இருந்தாலும், அரசியல் சட்டத்தின் முகவுரையில் (Preamble of the Constitution) அவற்றிற்கு இடமில்லை. ஆனால், அன்னை இந்திரா காந்தி தான், ‘நெருக்கடி நிலை’ யின் போது, பாராளுமன்ற இரு அவைகளிலும், 3 ல் 2 பங்கு ஆதரவு 20 க்கும் மேற்பட்ட சட்டமன்றங்களில் ஆதரவு ஆகியவற்றை பெற்று, அரசியல் சட்ட முகவுரையில், ‘மதச்சார்பின்மை’, ‘சோஷலிசம்’ ஆகிய இரண்டையும் பொன்னெழுத்துக்களால் பொறித்தார். அதற்குரிய சக்தி அவர் ஒருவருக்குத்தான் இருந்தது. 

இதை மாற்றிட வேண்டுமென்று பாஜக கூச்சல் போடுகிறது 

1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘நெருக்கடி நிலை’ தளர்த்தப்பட்டது. 

1977 ல் தேர்தலை எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ‘ஜனதா’ எனும் புது அமைப்பினை ஏற்படுத்தி, ஜெயப்பிரகாஷ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தேர்தலை சந்தித்தது. 

தேர்தலில் ஜனதா கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், 300 இடங்களுக்கு அதிகமான இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது. 

மூன்று வருடங்களில் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. 

இந்திரா காந்தியை பழிவாங்க ஜனதா அரசு ‘ஷா கமிஷன்’ நியமித்ததற்கு எதிராக டில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. 

1979 ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் நாள் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.பி.எஸ்.சாவ்லா ‘ஷா கமிஷனின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவை, அரசியல் சட்டத்திற்கு எதிரானவை எனத் தீர்ப்பளித்தார். ஜஸ்டின் டக்ளஸின் கூற்றினை மேற்கோளை நான் காட்டினால், ஷா தனது அதிகாரத்தின் வரம்பை மீறிவிட்டார் எனலாம்’ என்று கூறியுள்ளார். ‘ஷா கமிஷனின்’ அறிக்கைகள் நியாயமற்றவை எனத் தீர்ப்பளித்தது டில்லி உயர்நீதிமன்றம். 

இந்திராகாந்தி மீதிருந்த கரும்புள்ளி அகன்றுவிட்டது. 

1980 தேர்தலை இந்திரா காந்தி தனியொருவராகச் சந்தித்தார். முன்பு அவருடன் இருந்த பெருந்தலைவர்கள் யாரும் அவருடன் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் அவர் மிகவும் பலவீனமான நிலையிலிருந்து இந்தத் தேர்தலைச் சந்திக்க நேர்ந்தது. 

தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க முதல்வர் எம்.ஜி.ஆர் அவரை எதிர்த்தார். 

கேரளாவில் அவருடன் கூடயிருந்தவர்களே அவரை எதிர்த்தனர். 

கர்நாடகாவில் முதல்வர் தேவராஜ் அர்ஸ் எதிர்த்தார். 

ஆந்திராவில் முதல்வர் வெங்கல் ராவ் எதிர்த்தார். 

மகாராஷ்டிரர் முதல்வர் சரத்பவார் எதிர்த்தார். 

குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒரிஸா ஆகிய மாநிலங்களில் Cong (O), சுதந்திரா, ஜனசங்கம் ஆகியவையின் கலவையான ‘ஜனதா’ எதிர்த்தது. 

பஞ்சாப், ஹரியானா. உ.பி, பிஹார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சரண்சிங், தேவிலால், பிரகாஷ்சிங் பாதல், கர்பூரி தாகூர், ஜோதிபாசு போன்றோர் எதிர்த்தனர். 

அவர்கள் அனைவரும் நெருக்கடி கால கொடுமையை நினைவுபடுத்தி மக்களிடையே பிரச்சாரம் செய்தனர். 

ஆனால் அந்தப் பிரச்சாரங்கள் 1977 ல் அவர்களுக்கு கை கொடுத்தது போல் 1980 ல் கை கொடுக்கவில்லை. 

1980 ல் மக்கள் நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட நன்மைகளை உணர ஆரம்பித்ததால் தெருவில் நின்ற இந்திரா காந்தியை, டில்லி சிம்மாசனத்தில் அமர்த்தினர். 

காங்கிரஸ் கட்சி 352 இடங்களை வென்று மீண்டு ஆட்சியைப் பிடித்தது. 

இந்திரா காந்தி பிரதமராக மீண்டும் வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மக்கள் வாக்களித்தனர். 

‘நெருக்கடி கால நிகழ்வுகள்’ மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உணர்ந்திருந்ததனால் ஏற்பட்ட விளைவு 1980 ல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். 

ஆனால், நிலைமை முன்போல் இல்லை. நாடெங்கிலும் குறிப்பாக பஞ்சாபில் ‘காலிஸ்தான்’ தீவிரவாதம் தலைவிரித்தாடியது. 

1982 ஆம் ஆண்டு, அமெரிக்காவுடன் நட்புறவை வலுப்படுத்தினார். அன்றைய அமெரிக்க அதிபர் ரீகன் அவர்கள், லிண்டன் ஜான்சன், நிக்ஸன், போர்டு போல் இந்தியாவின் மீது விரோதம் பாராட்டவில்லை. 

அந்த ஆண்டு அவர், ராஜீவ் காந்தியுடன் அமெரிக்கா விஜயம் செய்தார். அங்குதான் அவர்கள் இருவரும், பிரபல தொழில் நுட்ப மேதையான சாம் பிட்ரோடவைச் சந்தித்து, இந்தியாவிற்கு திரும்ப வந்து, இந்திய வளர்ச்சிக்கு, அவரது நுட்பமான விஞ்ஞான அறிவைப் பயன்படுத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். 

அவரும், அதற்கு இணங்கினார். பின்னர் ராஜீவ் காந்தி ஆட்சியில் கம்ப்யூட்டர், தகவல் தொழில் நுட்பம், தொலைத் தொடர்புத் துறைகளில் மாபெரும் புரட்சி ஏற்பட, ராஜீவ் காந்திக்கு உறுதுணையாக இருந்தார் என்பது வரலாறு கூறிடும் உண்மை. 

1982 ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்தப்பட்டது. கலர் டிவிக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

1983 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற NAM மாநாட்டில், NAM அமைப்புகளின் தலைவராக பலமான கரகோஷத்திற்கிடையே இந்திராகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மேற்கு ஆசிய, ஆப்பிரிக்க, கீழ் ஆசிய நாடுகளில் அவருக்கிருந்த செல்வாக்கை இது வெளிப்படுத்தியது. 

2000 ஆம் ஆண்டு பிபிசி நடத்திய வாக்கெடுப்பில் 1000 ஆண்டுகளில் சிறந்த பெண்மணி (The Lady of the Milleninium) என்று இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் பெருமை வானளாவில் உயர்ந்தது. 

இந்திரா காந்தி, அணுசக்தித் துறையிலும், விண்வெளித் துறையிலும் மீண்டும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.ஏற்கனவே, குறிப்பிட்டது போல, வெளிநாடுகளில் பொருளாதாரத் தடைகள், நமது நாட்டிலுள்ள அணுமின் உற்பத்தியை மிகவும் பாதித்தன. 

ஆனால், எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைத்து, எறிந்து முன் செல்லும் ஆற்றல் இந்தியர்களுக்கு உண்டு என நிரூபித்தார் இந்திரா. 

BARC, BHEL, Larsen & Toubro ஆகிய நிறுவனங்களிலிருந்த இந்திய விஞ்ஞானிகளால் ஆராய்ந்து உருவாக்கப்பட்டு, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவி கொண்டு இந்திய அணு உலைகளுக்கான, முக்கிய இயந்திரங்கள், உபகரணங்கள் உருவாக்கிட முடியும் என்று உலகத்திற்கு எடுத்துக்காட்டின. 

1980 லிருந்து 1984 வரையிலான காலகட்டங்களில், கீழ்கண்ட இடங்களில் இந்திய விஞ்ஞானிகளால் ஆராய்ந்து உருவாக்கப்பட்டு, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் அணு உலைகள் நிறுவப்பட்டன. 

கக்ராபர் (மகாராஷ்டிரா) – 4 கோட்டா (ராஜஸ்தான் ) – 4 கைகா (கர்நாடகம்) – 4 நரோரா (உத்திரபிரதேசம்) – 2 கல்பாக்கம் (தமிழ்நாடு) – 2 மொத்தம் 16 அணுஉலைகள் நிறுவப்பட்டன.

இந்தக் காலவெளியிடைதான் இந்தியாவின் அணுமின் சக்தி உற்பத்திக்குரிய பொற்காலமாகும்.

வின்வெளி துறை வளர்ச்சி

1972 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலுள்ள ‘ஸ்ரீஹரிகோட்டா’ எனும் இடத்தில் செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்திடுவதற்கான ஏவுகணை தளம் நிறுவப்பட்டது.

இன்று விண்ணில் மிதக்கும் பல செயற்கைக் கோள்களும், ஏவுகணைகளும் இங்கிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 1980 – 1984 வரை இருந்த இந்தரா காந்தியின் ஆட்சிக்காலம், மற்றும் ஒரு துறைக்கும் பொற்காலமாக இருந்ததென்றால் அது விண்வெளித்துறையாகும். இதற்கு முன் ஏவப்பட்ட ‘ஆர்ய பட்டா’ போன்ற விண்வெளி கலன்கள், வெளிநாடுகளிலுள்ள ஏவுதளங்களிலிருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டன.

1980 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 28 ஆம் நாள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்ற இந்திய ஏவுதளத்திலிருந்து எஸ்எல்வி-3 எனும் விண்வெளி ஓடம், ரோகிணி எனும் விண்வெளிக் கலத்தை, விண்வெளியில் மிதக்கவிட்டு, மாபெரும் சாதனையை செய்து காட்டினார்கள்.

இதற்கு முன், இத்தகைய சாதனையை செய்தது அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா ஆகிய 5 நாடுகள் தான். இப்பொழுது இந்தியா 6 வது நாடாக அக்குழுவில் சேர்ந்துள்ளது.

இந்தச் சாதனைக் குழுவிற்குத் தலைவராக இருந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவரும், பிரபல விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களே.

இதுபோன்ற விண்வெளிக் கலங்கள் INSAT-1A, INSAT-2B, INSAT-2C, INSAT-3C, சந்திராயன், செவ்வாய் பயணம் ஆகியவற்றினை GSLV, PSLV ஆகியவற்றை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட வைத்தது நமது ISRO குழு.

‘இதற்கெல்லாம் வித்திட்டவர் பிரபல விஞ்ஞானி விக்ரம் சாராபாய் என்றால், அவருக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் கொடுத்தவர் அன்னை இந்திரா காந்தி. அவர் இல்லாவிட்டால் இத்தகைய சாதனைகளை இந்திய விஞ்ஞானிகள் செய்திருக்கவே முடியாது’ என உறுதிபடக் கூறுகிறார் பிரபல விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி யஷ்பால் அவர்கள். (The Week – 7.11.2004) இது மட்டுமல்லாது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் (ICBM) தயாரித்து செயல்படுத்திக் காட்டினர் நமது விஞ்ஞானிகள்.

அணு ஆயுதத்தை சுமந்து 5000 கீ.மீ. வரை சென்று தாக்கிடும் ஏவுகணைகளை தயாரித்தது நமது Brohmos Aerospace Company. 1984 ஆம் ஆண்டு. ரஷ்யா உதவியுடன் விண்வெளியில் முதன்முதலாக ஒரு இந்தியர் பறந்தார். அவர்தான் ராகேஷ் சர்மா. அங்கிருந்து அவர் இந்திரா காந்தியுடன் தொடர்பு கொண்டார். ராகேஷ் சர்மாவிடம் இந்திரா காந்தி ‘ராகேஷ், இந்தியா எப்படி இருக்கிறது’ எனக்கேட்டார். ‘ஜாரே ஜஹாம்சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா’ என்று உற்சாகமாகப் பதிலளித்தார்.

பஞ்சாப் பொற்கோயில் விவகாரம்

1984 ஆம் ஆண்டு ஜுன் மாதம், ‘அமிர்தசரஸ்’ பொற்கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ‘காலிஸ்தான்’ தீவிரவாதிகளின் அட்டுழியம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இந்துக்கள் பலரைச் சுட்டுக் கொன்றனர். ஒரு பேருந்தில் இருந்த பிரயாணிகளில், சீக்கியரை இறக்கிவிட்டு. பேருந்தில் இருக்கும் இந்துக்களை கொளுத்தினார்கள். இதில் பெரும்பாலானோர் தலித் இந்துக்களே.

உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. சுமார் 35,000 இந்துக்கள் காலிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

1984 ஆம் ஆண்டு ராணுவத்தை அனுப்பி பொற்கோவிலை தாக்குவதற்கு ஆணைப் பிறப்பித்தார்.

தீவிரவாதிகளின் தலைவன் பிந்தரன்வாலே உள்பட, பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதன் விளைவுதான், 31.10.1984 அன்று பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய காவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

தன் நாட்டின் ஒற்றுமையைக் காத்திடவே தன்னுயிர் நீத்தார்.

அன்னை இந்திரா காந்தி தான் இந்தியாவின் கீழ்கண்ட பெருமைகளுக்குக் காரணமானவர்.

உலகிலேயே அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளைக் கொண்ட நாடுகளில் மூன்றாம் இடத்தை வகிப்பது இந்தியா.

உலகிலேயே ராணுவ பலத்தில் 5வது இடத்திலிருப்பது இந்தியா.

அணுசக்தித் துறையில், உலகிலேயே 6 வது இடத்திலிருப்பது இந்தியா.

விண்வெளித்துறையில், உலகிலேயே 7 வது இடத்தை வகிப்பது இந்தியா.

தொழில் முன்னேற்றத்தில் 10 வது இடம் வகிப்பது இந்தியா.

இந்திராகாந்தி காலத்தில் இரும்பு எஃகுத் தொழிற்சாலைகள்:

சேலம் உருக்காலை (தமிழ்நாடு)

ஹாஸ்பெட் உருக்காலை (கர்நாடகா)

விசாகப்பட்டிணம் உருக்காலை (ஆந்திரா)

தைத்தாரி உருக்காலை (ஒரிஸா)

இந்திரா காந்தி காலத்தில் உருவாக்கப்பட்ட உரத்தொழிற்சாலைகள்:

ஜுவாரி அக்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (கோவா) – 1973

Natural Fertillizer and Chemical Ltd – 1974 – உத்திர பிரதேசம், நொய்டா

குஜராத் நர்மதா பள்ளத்தாக்கு உரத்தொழிற்சாலை – 1976 – குஜராத்

லிபர்டி பாஸ்பேட் லிமிடெட் – 1976 – மும்பை

பல சிறு உரத் தொழிற்சாலைகள் உருவாகின.

இந்தியாவை வானளவு உயர்த்திக் காட்டியவர் அன்னை இந்திரா காந்தி அவர்கள். இதெல்லாம் அவரால் சாதிக்கமுடிந்தது என்றால் அது அவரது தந்தையிடம் கற்றுக்கொண்ட பாடத்தினால் தான். பண்டித நேரு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து, அவரது நவீன மயமாக்கல், விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றின் இந்தியாவிற்குரிய பயன் ஆகியவற்றில் பெரும்பகுதியை நிறைவேற்றினார் இந்திரா (The Worthy Daughter of the Worthy Father).

அவர் காலத்தில்தான் பொருளாதார சீர்திருத்ததிற்கான அஸ்திவாரம், பொதுத்துறை நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தனியார் துறையின் வளர்ச்சிக்கும் கவனம் செலுத்திட தவறவில்லை.