ராஜீவ் காந்தி ஆட்சி

ராஜீவ் காந்தி தலைமையில் இந்தியா

பிரபல பொறியாளரும், இந்தியாவிலுள்ள BHEL நிறுவனங்களின் பிரமாண்ட வளர்ச்சிகளுக்கு காரணகர்த்தாக இருந்த டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி ‘இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் எனக்கு வேண்டிய ஆதரவும், உற்சாகமும் கொடுத்தனர். கொள்கைகளை மாற்றித் தந்தனர். அதனால்தான் மாருதி கார் தொழிற்சாலைக்கு என்னை இயக்குநராக நியமித்தது மட்டுமல்லாது எனது ஆலோசனைப்படி, வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றிட அனுமதியளித்தனர். அதன்பேரில் தான் பிரபல ஜப்பான் தொழிற்சாலைக்கு 40 சதவீதம் பங்கு அளிக்கப்பட்டது. இன்று கார் தொழிற்சாலைகள், அந்நிய முதலீட்டுடன் அதிகமாக நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தான் என்று கூறினால் அது மிகையாகாது’ என்று கூறினார். 

1985 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29 ஆம் தேதி, ராஜீவ்-லோங்கவால் ஒப்பந்தம் ஏற்பட்டது. 
ராஜீவ் காந்தி பஞ்சாபில் அமைதியை நிலைநாட்டிட எடுத்த முதல் முயற்சி மாபெரும் வெற்றியை தந்திட்டது. 

இதுபோன்று, தீவிரவாதத்தால், அமைதி இல்லாமல் இருந்தது மற்றொரு மாநிலமான மிஸோரம், 1966 ஆம் ஆண்டில், மிஜோரமிலிருந்த MNA தீவிரவாதிகளிடமிருந்த பகுதிகள், இந்தியப் படையினரால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், MNA தீவிரவாதிகள் கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து கொண்டு அவ்வப்போது கொரில்லா தாக்குதல் செய்து கொண்டிருந்தன. 
1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் உதயமான பின். MNA தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் சரணடைவதைத் தவிர வேறுவழியில்லை. ஆனால், அவர்கள் சமாதானத்திற்கு முன்வருவதும் பின் பயந்து, ஒளிந்து கொள்வதுமாக இருந்தனர். இந்நிலை 1984 ஆம் ஆண்டு வரை நீடித்தது. 
பஞ்சாப் தீவிரவாதப் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் பிரதமர் ராஜிவ் காந்தி முனைப்பு காட்டியது, மிஸோரம் மக்களுக்கு அவர் மீது மிகுந்த நம்பிக்கையும், மதிப்பும் ஏற்பட்டது. 
MNA தீவிரவாதிகளின் செல்வாக்கு மக்களிடையே சரிய ஆரம்பித்தது. MNA தலைவர், லால் டேங்காவும் அவரது கூட்டாளிகளும் இந்திய அரசிடம் சரணடைந்தனர். MNA தனது அமைப்பினை MNF (Mizo National Front) எனும் அரசியல் கட்சியாக மாற்றிக் கொண்டது 
MNF கையில் மிஸோரம் மாநில ஆட்சி ஒப்படைக்கப்பட்டு, MNF ன் தலைவர்களில் ஒருவரான திரு மஸராம் தாகா முதல்வராக பதவியேற்றார். 
ராஜீவ் காந்தி வேண்டிய உதவிகளை செய்தார். அம்மாநிலத்தில் அமைதி திரும்பியது. நீர்க்குழாய்கள், வீடுகள், சாலைகள் எல்லாவற்றிற்கும் மேலாக பள்ளிகள், கல்லூரிகள் எனப்பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. 
15 ஆண்டுகளில் அதாவது 1999 ல் மிஸோரம், இந்தியாவிலேயே கல்வி அறிவு பெற்றோர் அதிகமாக இருக்கும் முதல் மாநிலம் எனப் பெயர் பெற்றது. இன்றும் அங்கு அமைதி நிலவுகிறது. இதற்கெல்லாம் பிரதமர் ராஜீவ் காந்தி தான் மூல காரணமானவார். 
அஸ்ஸாமில், வெளிநாட்டினவரை (குறிப்பாக வங்காள தேசத்தவரை) வெளியே அனுப்பிடவேண்டுமென்று, நடந்த போராட்டம் ஒன்றை அஸ்ஸாமில் மாணவரின் அமைப்பான AASU நடத்தி வந்தது. அதே நேரத்தில் அஸ்ஸாமை தனி நாடாக ஆக்கிடவேண்டுமென்று போராட்டம் நடத்திவந்தது. உல்பா எனும் தீவிரவாத அமைப்பு, மறைமுகமாக AASU விற்கு உதவி செய்து வந்தது. 
அஸ்ஸாம் மாணவர் அமைப்புத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அவர்கனை ULFA தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து விடுவித்து, ஜனநாயகப் பாதைக்கு திருப்பிடுவதற்கான வழிமுறைகளை வகுத்தார் ராஜீவ் காந்தி. 
1985 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அஸ்ஸாம் மாணவர் தலைவர்களுடன், ராஜீவ் காந்தி அமைதி ஒப்பந்தம் செய்தார். 
அஸ்ஸாம் மாணவர்கள், அஸ்ஸாம் கனபரிஷத் (Assam Gana Parishad-AGP) எனும் கட்சியை தோற்றுவித்தனர். 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் அஸ்ஸாம் கனபரிஷத் போட்டியிட்டு, அஸ்ஸாமில் ஆட்சி அமைத்தது அஸ்ஸாம் கனபரிஷத்தின் தலைவரான பிரபுல்ல மொகாந்தா, முதலமைச்சரானார். 
இவ்வாறு நாட்டில் தீவிரவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து அமைதியை நிலைநாட்டிய பின்னர், பல ஆண்டுகளாக நட்புரிமை இல்லாதிருந்த அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்த ராஜீவ் காந்தி மீண்டும் இந்தியாவிற்கும், அவ்விரு நாடுகளுக்கும் உள்ள நட்புறவை மேம்படுத்தினார். 
1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்படுவதற்காக, தெற்காசிய பிராந்திய கூட்டுறவு அமைப்பு (SAARC) , ராஜீவ் காந்தியின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது. இதில், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 
சீனாவிற்கு, இந்த அமைப்பில் சிறப்பு விருந்தினர் அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. விவசாயம், பொருளாதாரம், சமூகம், தொழில் நுட்பம், கலாச்சாரம், ஆகியவற்றின் வளர்ச்சிக்கு சுயமாக தன் கால்களிலேயே நின்றிடவும், ஒன்றுக்கொன்று உதவிட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். 
அதனடிப்படையில் தான் இலங்கைக்கு, இந்தியா உதவி செய்து வந்தது. தன் தாத்தாவைப் போல், உலகில் அமைதியும், சமாதானமும் ஏற்பட்டிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ராஜீவ் காந்தி. 
1985 ஆம் ஆண்டு இது சம்பந்தமாக ஐ.நா.சபையில் ஓர் ஒப்பற்ற உரைதனை ஆற்றினார். மறைந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ, பண்டித நேரு உலக சமாதானத்திற்காக நிகழ்த்திய ஒப்பற்ற உரைதனை நான் இதே சபையில் கேட்டிருக்கிறேன். அதற்குப் பின் அதற்கு ஈடான உரையை இன்றுதான் கேட்கிறேன். ‘நேருவிற்கு பின், உலக சமாதானத்திற்காக விழையும் உண்மையான தலைவர் நீங்கள்’ என்று ராஜீவ் காந்தியைப் பாராட்டினார். 
நாட்டை 21 ஆம் நூற்றாண்டில், ஓர் ஒப்புயர்வற்ற நாடாக மாற்றிடும் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. நாட்டிலுள்ள மனித வளம் மேம்பட்டிட, அதற்கென்றே தனியாக ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தினார். 
அமெரிக்காவிலிருந்து, இந்தியாவிற்கு வந்த தகவல் தொழில்நுட்ப மேதை சாம் பிட்ரோடாவை தனது ஆலோசகராக நியமித்து. கணினி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் ஆகிய நவீன உத்திகளைக் கல்விப் பாடத்திட்டங்களில் புகுத்தி, அதன் மூலம் நாட்டின் மனித வளங்களை மேம்படுத்தி, இந்திய இளைஞர்களை முன்னேறிய பல நாட்டினருக்கு ஈடாக செயல்பட வைத்தார். 
இன்று உலகமெங்கும் கணினித்துறையில், இந்திய இளைஞர்கள் கோலோச்சி வருகின்றனர் என்றால் அதற்கு மூலகாரணம் ராஜீவ் காந்தி தான். 
சாம்பிட்ரோடா வரும் வரை, நமது அலுத்துப் போன படைய அனலாக் (Analogue) முறைகளைப் பின்பற்றி வந்தது. அதன் பின் பழைய முறைகள் எல்லாம் மாற்றப்பட்டு, கணினி முறைகள் புகுத்தப்பட்டு, டிஜிடல் சிஸ்டம் (Digital System) முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 
சாம்பிட்ரோடா, கிராமப் பகுதிகளுக்கும் டிஜிட்டல் தொலைத்தொடர்பு CDOT (Centre for Development of Telematics) எனும் அமைப்பை நிறுவி, கிராமத்தொலைத் தொடர்பில் ஓர் மறுமலர்ச்சியே உண்டாக்கினார். 
இத்தகைய ‘டிஜிட்டல் சிஸ்டம்’ மேலும் மேலும் புரட்சிகளை ஏற்படுத்தி, இன்று ‘Mobile Phone Technology’ – ஐ, பயன்படுத்திடும் அளவில் வளர்ந்திருந்திருக்கிறது என்றால் அதற்கு ராஜீவ் காந்தியின் தீர்க்க தரிசனம் தான் காரணம் என்று உறுதியாகக் கூறமுடியும். 
இன்று சுமார் 100 கோடி இந்தியர்கள், ‘கைபேசி’ (Mobile & Phone) சேவையின் பலனை அனுபவித்து வருவதற்கும் அவர் தான் காரணம் என்பது நாடறிந்த உண்மை. 
1986 ஆம் ஆண்டு, சுற்றுப்புற சூழ்நிலையைப் பாதுகாத்திட தனி அமைச்சகத்தை உருவாக்கி, பின் ‘சுற்றுப்புற சூழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை’யும் இயற்றினார். 
1986 ஆம் ஆண்டு ‘கட்சித்தாவல் தடைச்சட்டத்தை’ அறிமுகப்படுத்தி, அதன் மூலம் நேர்மையற்ற அரசியல்வாதிகள் கட்சி தாவல் மூலம் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கேலிக்கூத்தாக்கி வந்த அவலத்திற்கு ஓர் முடிவு கட்டினார். 
1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுவீடன் நாட்டிலுள்ள ‘போபர்ஸ்’ (Bofors) எனும் பீரங்கிகள் உற்பத்தி செய்திடும் நிறுவனத்திற்கும், இந்தியப் பாதுகாப்புத் துறைக்கும் ரூ 1437 கோடி மதிப்பில் 410 பீரங்கிகள் வழங்கிடச் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சுவீடன் நாட்டு போபர்ஸ் பீரங்கி பேரம் படிவதற்கு இந்தியாவிலுள்ள முக்கிய அரசியல்வாதிகளுக்கும், தரகர்களுக்கும் கையூட்டு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிவித்தது. 
இதனால் நாட்டில் பெரும் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டு, ராஜீவ் காந்தியை ‘ஊழல்வாதி’ எனக்குற்றம் சாட்டி பிரச்சாரம் செய்தன. (1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது) ராஜீவ் காந்தி மீது (அவர் இறந்த பிறகு) 1998 ல் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு அவர் மீது வழக்குத்தொடர்ந்து. 
2004 ஆம் ஆண்டு, டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு ராஜீவ் காந்தி மீது குற்றம் சாட்டிட எள்ளளவு சாட்சியங்கள் கூட இல்லை எனக்கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தது.

டெல்லி உயர்நீதி மன்றத்தில் 2004 ஆம் ஆண்டு வந்த தீர்ப்பின் விவரம்

4.2.2004 அன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜே.டி.கபூர் 115 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பினை வழங்கினார். ‘போபர்ஸ் கம்பெனி’க்கு 410 பீரங்கிகள் வழங்கிடும் ஒப்பந்தத்தை முடிவு செய்ததற்காக, அன்றைய பிரதமர் திரு.ராஜீவ்காந்தியும், அன்றைய பாதுகாப்பு செயலர் திரு.எஸ்.கே.பட்நகரும் லஞ்சம் பெற்றனர் என்பதை நிருப்பித்ததிட அவர்களுக்கு எதிராக 16 வருடத்திய புலனாய்வுக்குப் பின் எள்ளளவு சாட்சியங்கள் கூட சிபிஐ யினால் வழங்கிட முடியவில்ல என்பதை இந்த வழக்கின் உண்மைகள் எடுத்துக் காட்டுகின்றன’ என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தார். 

(Pronouncing the 115 page judgement justice J.D.Kapoor said, “the facts of the case itself show that so far as the public servants-Rajiv Gandhi and SK Bhatnaga (since dead) are concerned, 16 years of investingation by the premier agency of the country-the central Bureau of investigation (CBI) could not unearth a SCINTILLA of evidence against them for having accepted bribe or illegal gratification in awarding the contract in favour of A.B.Bofors which had won the bid for supply of 410 guns to the country. All efforts by the CBI ended in a fiasco as they would not lay hand upon any secret or known account of these public servants where the alleged money might have found its abode either in swiss Banks or any other bank or vault” Mr.Justice Kapoor said) – The Hindu, dated 5.2.2004 

இவ்வாறு பல பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆளான போதும், தன் கடமைகளை நிறைவேற்றுவதில் தவறிடவல்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நகராட்சித் தலைவர்களாகவும், பஞ்சாயத்துத் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் பதவி பெற்று முழு ஆளுமை செலுத்திடும் வலிமையைப் பெற்றுத் தந்திட, 73 மற்றும் 74 ஆம் அரசியலமைப்புச் சட்ட விதிகளில், அதற்குரிய அரசியல் சட்டத்திருத்தங்களைக் கொண்டு வர வழிவகுத்தவர் ராஜீவ் காந்தி. 


1989 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள், மக்களவையில் பஞ்சாயத்து ராஜ் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய பிரதமர் ராஜீவ் காந்தி, ‘அரசியல் அதிகாரமில்லாத ஆளுமை, அடித்தள மக்களுக்கு தற்போதிருக்கும் ஆளுமை உரிமை, உப்பில்லா உணவிற்கும் சமமாகும். அதைப் பாதுகாத்திடவே இந்த மசோதா’ என உரையாற்றினார். ‘அடித்தள மக்களுக்கு உண்மையான அதிகாரமிருந்தாலொழிய, அதிகார பரவல் என்பது நியாயமற்றதாகவே இருக்கும’ என்று உணர்த்தியவர் ராஜீவ் காந்தி அவர்கள். 

‘மாநில சுயாட்சி’ மூலம், அதிகாரப்பரவல் வேண்டும ;என்று கூக்குரலிடும், மாநில கட்சியைச் சேர்ந்தவர்கள், இம் மசோதாவை, மாநிலங்களவையில் நிறைவேற்ற விடாமல் தடுத்தனர். அவர்கள் கூறும் ‘அதிகாரப்பரவல்’ என்பது மாநில அளவில் நின்றிட வேண்டுமே தவிர, கிராம அளவில் சென்றடைந்திடக் கூடாது என்பதே அவர்கள் சித்தாந்தம். 

(எனினும், இவர்களையும் மீறி, 1992 ஆம் ஆண்டு இச்சட்டத்திருத்தம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் அமுலுக்கு வந்து விட்டது. ஆனால் பல மாநிலங்கள் இன்னும் இச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்திடவில்லை. அதனால், கிராம சபைகள் மற்றும் பஞ்சாயத்துகள் அதிகாரமின்றி இருக்கின்ற நிலை தான் இப்பொழுது இருக்கிறது.) 

இலங்கைத் தமிழர்களுக்கு பேருதவி

1987 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் கவலையளிப்பதாக இருந்தன. சிங்கள ராணுவம் யாழ்ப்பாண நகரை முற்றுகையிட்டு அங்குள்ள தமிழர்களுக்கு எல்லையில்லா துன்பத்தை அளித்து வந்தது. மனித உரிமைகள் மீறப்பட்டன. உணவுப் பொருட்களுக்குத தடை ஏற்படுத்தியது சிங்கள அரசு. 
மனித நேயத்துடன் நடந்து கொள்ளுமாறு இலங்கை அரசிடம் பிரதமர் ராஜிவ் காந்தி வலியுறுத்தினார். ஆனால், பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் நாடுகளின் ஆதரவு இருந்ததால் சிங்கள அரசு, பிரதமர் ராஜிவ்காந்தியின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்தது. 
இதையடுத்து, ராஜீவ் காந்தி 1987 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2 ஆம் தேதி பல கப்பல்களில் உணவு பொருட்களை ஏற்றி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால், சிங்கள கப்பற்படை, அந்தக் கப்பல்களை யாழ்ப்பாணப் பகுதிக்குள் நெருங்கவிடவில்லை. 
இலங்கை அரசின் எதிர்ப்பை மீறி, இலங்கை தமிழ் மக்களை காப்பாற்றிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஹெலிகாப்டர் மூலமாக அவர்களுக்கு உணவு அளித்திட ஏற்பாடு செய்தார் ராஜீவ் காந்தி. இத்திட்டத்திற்கு Operation Poomalai எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டது. 
இதனால், மிரண்டு போன அன்றைய இலங்கையின் அதிபரும், ஈழத்தமிழர்களின் நலன்களை காப்பதற்கு அதுவரை அக்கறை எடுத்துக் கொள்ளாதவருமான ஜெயவர்த்தனே, சிங்கள உள்நாட்டு போர் நிறுத்ததிற்காக ராஜீவ் காந்தியின் எந்த ஒரு திட்டத்திற்கும் ஆதரவளிப்பதற்கு முன் வந்தார். 
அதன் விளைவு தான், 1987 ஆம் ஆண்டு ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தம். இது பல அம்சங்களைக் கொண்டது. 1987 – இந்திய – ஸ்ரீலங்கா ஒப்பந்தம்.

இலங்கையில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக காரணமே ராஜிவ்காந்தியின் இந்த ஒப்பந்தம் தான்.

இந்த ஒப்பந்தத்தினால், இலங்கைத் தமிழர்களுக்கு பல உரிமைகள் பெற்றுத்தரப்பட்டன. மாகாண அரசுக்கு பல அதிகாரங்களையும், உரிமைகளையும் பெற்றிட வகை செய்துள்ளது இந்த ஒப்பந்தம். 

(இந்த ஒப்பந்தத்தை 1987 ல் ஏற்காதவர்கள் கூட, இதில் காணப்பட்டிருக்கும் பல உரிமைகளை, சிங்கள அரசு வடக்கு மாகாண அரசிற்கு கொடுத்திட வேண்டுமென்று இன்று கூறுகின்றனர்). 

அதே சமயத்தில் LTTE யினர் போரை நிறுத்தி, தங்களிடமுள்ள ஆயுதங்களே, இந்திய அமைதிப் படையினரிடம் (IPKF) ஒப்படைத்திட வேண்டும் என்றும் ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ளது. 

எனவே இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையாக நன்மைகள் செய்திட வகை செய்தவர் ராஜீவ் காந்தியே என்பதை இவர்கள் இன்றாவது உணரவேண்டும். ஆனால். LTTE யினர், இந்த ஒப்பந்தத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்கள் ஆயுதங்களை IPKF யிடம் முழுமையாகத் தந்திடவுமில்லை. 

IPKF அவர்களிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்ற எடுத்த நடவடிக்கைகளால், LTTE ன் வெறுப்பு முதலில் IPKF மேலும், பின் ராஜீவ் காந்தியின் மேலும் திரும்பியது. இது பின் கொலைவெறியாக மாறி பின்நாளில் ராஜீவ் காந்தியைப் பலி வாங்கும் அளவிற்குச் சென்றது. 

SAARC நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் படி, ராஜீவ் காந்தி ஈழம் உருவாவதற்கு இடையூறாக இருப்பார் என்பதனால், அவர் மீது LTTE யினர் விரோதம் காட்ட ஆரம்பித்தனர். 

ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்திற்கு முழு ஆதரவு தந்தவர் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஏனெனில், ராஜீவ் காந்தியின் நடவடிக்கைகள் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் நன்மை பயக்கும் என்ற எண்ணம் கொண்டவர் அவர். 

1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், எம்.ஜி.ஆர் அவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தார். அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் அவரது உடல்நிலையைப் பற்றி சரிவர அறிந்து கொள்ள நேரடியாக அவர் சிகிச்சை பெற்றுவரும் அப்போல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. மோசமாகியிருந்த உடல்நிலையிலும் கூட அவரால் இந்திரா காந்தியை அடையாளம் காணமுடிந்தது. 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு உடனடியாக உயர்ந்த மருத்துவ சிகிச்சை தேவை என்பதை அறிந்த இந்திரா காந்தி, அவரை அமெரிக்காவிற்கு அனுப்புவது என முடிவெடுத்தார். (ஆனால், 31.10.1984 அன்று இந்திரா காந்தி மரணமடைந்தார்) 

தனது தாயை இழந்த போதிலும், தனது தாயின் எண்ணத்தை பூர்த்தி செய்திட, நோய்வாய்ப்பட்டிருந்த புரட்சித் தலைவரை, சிறிய மருத்துவமனை போல் அமைக்கப்பட்ட பிரத்தியேக விமானத்தில் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக அனுப்பி, வெற்றிகரமாக நல்ல ஆரோக்கியத்துடன் தாய் நாட்டிற்கு திரும்பி அழைத்து வந்தவர் ராஜீவ் காந்தி. அதனால் புரட்சித்தலைவர் ராஜீவ் காந்தி மீது பாசத்தைப் பொழிந்து கொண்டிருந்தார். 

புரட்சித்தலைவர் ஆதரவுடன் இலங்கையில் வடக்கு மற்றும் வட கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து, ஒரே மாநிலமாக்கி, அங்கு தேர்தல்களை நடத்தி ஒரு ஈழத்தமிழரை (வரதாரஜப் பெருமாள்) முதல்வராக, ஈழத்தமிழர்களுக்கு ஆளுமை உரிமையும், மற்ற உரிமைகளையும் பெற்றுத் தந்தவர் ராஜீவ் காந்தி அவர்கள். 

1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி, புரட்சித்தலைவரின் முன்னிலையில், அவரது விருப்பப்படி சென்னை கத்திப்பாரா சந்திப்பில் பண்டித நேருவின் உருவச் சிலையை திறந்து வைத்தார் ராஜீவ் காந்தி அவர்கள். 

1988 ஆம் ஆண்டு சிதறுண்டு போகாத சோவியத் யூனியனின் அதிபர் கோர்பச்சேவுடன், தமிழ்நாட்டிலுள்ள நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்உலைகளை நிறுவி, 4000 மொகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். 

ராஜீவ் காந்தி உலக அமைதிக்காக கடும் முயற்சிகளை எடுத்துவந்த போதிலும், பாகிஸ்தான் அணுஆயுதப் பரிசோதனை செய்வதற்கு சீனா உதவி வருகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்ததால், நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டும் வேண்டிய அணு ஆயுதங்களை தயாரித்திட ஆணைப் பிறப்பித்தார். நிறுத்திவைத்திருந்த பணியினை மீண்டும் தொடங்கினர் அணு சக்தி விஞ்ஞானிகள். 

பின் நரசிம்ம ராவ் காலத்தில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு பரிசோதனை செய்வதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டன. (இதே அணுஆயுதற்களைத் தான் 1998 ஆம் ஆண்டு மே மாதம், வாஜ்பாய் காலத்தில் பரிசோதனைகள் செய்யப்பட்டது) 

1991ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி, விடுதலைப்புலிகளால் அனுப்பப்பட்ட மனித வெடிகுண்டினால், உயிர் இழந்தார். 

தமிழ் மக்களை தன் உடன் பிறப்புகள் போல் நேசித்த ராஜீவ் காந்தி, தமிழ் மண்ணிலேயே, சில துரோகிகளின் செயல்பாடுகளினால் உயிரழந்தார். நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமும் நாட்டை 21 ஆம் நூற்றாண்டை நோக்கி, வெற்றிப் பாதையில் அழைத்து செல்லும் நாடெங்கும் இருள் சூழ்ந்தது.