APR – 11

APR-11

      தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ். அழகிரி அவர்கள் வெளியிடும் அறிக்கை

காங்கிரஸ் கட்சி தொடக்க காலம் முதல் திட்டமிட்ட பொருளாதார

கொள்கையை அறிமுகப்படுத்தி, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில்

அழைத்துச் செல்வதில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ளது. நாடு சுதந்திரம்

பெற்ற போது முதல் நிதியமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட் தொகை ரூபாய் 240

கோடி. சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட் தொகை ரூபாய் 25

லட்சம் கோடி. கடந்த 72 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட

பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. உலக நாடுகள் வரிசையில் இன்றைக்கு

இந்தியா வளர்ச்சியில் முன்னணி வரிசையில் இடம் வகிக்கிறது என்று

சொன்னால் அதற்கு காங்கிரஸ் கட்சியினுடைய பங்கு மகத்தானது. ஆனால்

அந்த வளர்ச்சியில் சமநிலைத் தன்மை இருக்கிறதா என்கிற போது மிகுந்த

ஏமாற்றம் தான் ஏற்படுகிறது. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை இத்தகைய

வளர்ச்சிகளினால் பெருமளவில் குறைக்க முடியவில்லை.

கடந்த 2011 இல் சமூக, பொருளாதார, ஜாதி வாரியான கணக்கெடுப்பில் 6 கோடி

குடும்பங்கள் வறுமையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5 கோடி

குடும்பங்களுக்கு மாதம் அடையாளம் கண்டு அவர்களுக்கு குறைந்தபட்ச

வருமான உறுதி திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்

திரு. ராகுல்காந்தி அவர்கள் அறிவித்தார். அந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின்

தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி அறிவித்த குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தின்படி

மக்கள் தொகையில் 20 சதவீதம் கொண்ட 5 கோடி குடும்பங்கள் ரூபாய் 6

ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூபாய் 72 ஆயிரம் வழங்குவது என

அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியை குடும்பத்தில் உள்ள

பெண்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவது என்றும்

கூறப்பட்டுள்ளது. இது வறுமைக்கு எதிரான இறுதி தாக்குதல் என்று திரு.

ராகுல்காந்தி அவர்கள் அறிவித்திருக்கிறார். இத்தகைய முடிவை காங்கிரஸ்

கட்சி அறிவித்ததும், பிரதமர் நரேந்திர மோடி இது மக்களை ஏமாற்றும்

நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். யார், யாரை ஏமாற்றுகிறார்கள் என்பது

இந்திய மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

கடந்த நிதிநிலை அறிக்கையை பா.ஜ.க. சமர்ப்பித்த போது பிரதமர் கிசான்

யோஜனா என்ற திட்டத்தின் அடிப்படையில் தேர்தலை மனதில் கொண்டு

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூபாய் 2 ஆயிரம் வீதம் சிறு

விவசாயிகளுக்கு ஓர் ஆண்டில் மூன்று கட்டமாக வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால் இந்த திட்டம், முறையாக செயல்படுத்த நில ஆவணங்கள் இல்லாத

நிலையில் பெரும் தோல்வியை அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள்

மத்தியில் கடும் கொந்தளிப்பு உருவாகியுள்ளது. விவசாயிகள் கேட்டது கடன்

நிவாரணமே தவிர, உதவித்தொகை அல்ல. அந்த அறிவிக்கப்பட்ட

உதவித்தொகை கூட தேர்தலுக்காக வழங்கப்படுகிறது என்பதை விவசாயிகள்

நன்கு அறிந்துள்ளார்கள்.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த சாத்தியமில்லை என்று மத்திய

நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் கூறியிருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி

அறிவித்துள்ள குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்திற்கு மொத்த நிதி தேவை

ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி. ஆனால் முதல் வருடத்தில் மொத்த

உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கு குறைவாகவும், இரண்டாவது

வருடத்தில் 2 சதவீதத்திற்கு குறைவாகவும் தான் நிதி தேவைப்படும்.

ஒட்டுமொத்தமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.92 சதவீதம் தான் நிதி

தேவைப்படும். ஆண்டுதோறும் ரூபாய் 245 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு

உற்பத்தி இருக்கிற இந்தியாவில் ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவு

செய்வது என்பது சாத்தியமா, இல்லையா என்பதை மனசாட்சியுள்ளவர்கள்

சிந்தித்து பார்க்க வேண்டும். மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு

நடைமுறையில் சாத்தியமில்லாத புல்லட் ரயில் விடுவதற்கு ரூபாய் 1 லட்சம்

கோடி நிதி ஒதுக்கிய நரேந்திர மோடி, வறுமையை ஒழிப்பதற்கு ரூபாய் 3

லட்சத்து 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது சாத்தியமில்லை என்று கூறுவது

அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகும்.

காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் உலகின்

பல நாடுகளில் வறுமை ஒழிப்பிற்கு பெருமளவில் உதவி செய்திருக்கிறது.

இதனால் வீடுகளில் உள்ள பெண்களிடம் குறைந்தபட்ச வருமானம் வருவதால்

வீட்டு உபயோக பொருட்களை வாங்குதல், சுகாதார மேம்பாடு, குழந்தைகளின்

கல்வி ஆகியவற்றுக்கு பயன்படுகிறது. இதன்மூலம் மகளிர் மேம்பாடு உறுதி

செய்யப்படுகிறது. வறுமையில் உழலுகிற, அன்றாடம் பிழைப்பை

எதிர்நோக்கியுள்ள மக்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட இத்திட்டம் பெரிதும்

உதவுகிறது.

வயிறு காலியாக இருப்பவர்கள் அடுத்த வேளை குறித்து சிந்திக்க முடியாது.

அப்படிப்பட்டவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதன் மூலம்,

இத்திட்டத்தினால் அவர்களை தொழில் முனைவோராகவோ, உற்பத்தி திறன்

கொண்ட பணியாளராகவோ மாற்ற முடியும். எனவே, குறைந்தபட்ச வருமான

உறுதி திட்டம் என்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இது ஊன்றுகோலாக

அல்லாமல் ஏணியாக பயன்படும். இதன்மூலம் 20 கோடி மக்கள் மாதாந்திர

செலவுகளை செய்யவும், ஒளிமயமான எதிர்காலம் குறித்து திட்டமிடவும்

மிகப்பெரிய வாய்ப்பை நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் திரு.

ராகுல்காந்தி அவர்கள் அளித்திருக்கிறார்.

ஏற்கனவே மத்திய காங்கிரஸ் கூட்டணியில் 100 நாள் வேலை திட்டத்தின்

மூலம் கிராமப்புற பொருளாதாரத்தில் வாழ்கிற ஏழைஎளிய மக்களுக்கு

குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்களது வாங்கும்

சக்தி உயர்ந்தது, வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது. அத்தகைய சாதனைகளை

படைத்த காங்கிரஸ் கட்சி, இன்றைக்கு வறுமைக்கு எதிராக இந்த திட்டத்தை

செயல்படுத்தி இந்தியாவிலிருந்து நிரந்தரமாக வறுமையை விரட்டுகிற

திட்டத்தை தேர்தல் அறிக்கை மூலம் அறிவித்திருக்கிறது. இதை எதிர்ப்பவர்கள்

அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள். அவர்களது எதிர்ப்பு என்பது நாட்டு

மக்களாலே நிராகரிக்கப்படும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலே காங்கிரஸ்

கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவு தருவார்கள் என்பது உறுதி.

Leave a Reply