MAY – 06

May 6

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்களின் அறிக்கை

இந்தியாவின் பிரதமராக பல சாதனைகளை புரிந்து இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தியவர் அமரர் ராஜீவ்காந்தி. இத்தகைய வரலாற்று சாதனைகளை புரிந்த ராஜீவ்காந்தி அவர்களை கொச்சைப்படுத்துகிற வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது மிகுந்த நாகரீகமற்ற செயலாகும். பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு மறைந்த ஒரு மாபெரும் தலைவரை 28 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி இழிவாக பேசியிருப்பது எத்தகைய அநாகரீகம் என்பதை கொஞ்சம் கூட கருதாமல் நாட்டின் பிரதமரே இவ்வாறு பேசியிருப்பது எவ்வளவு தரம் தாழ்ந்த செயல் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

பொதுவாக, மறைந்த தலைவர்களை பாராட்டி பேசவில்லை என்றாலும், இழிவாக பேசுவதை தவிர்ப்பது மரபாகும். ஆனால் இந்த மரபுகளை உதாசீனப்படுத்தி விட்டு, கடந்த காலங்களில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகிய நாட்டிற்காக தங்களது உயிரை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக நரேந்திர மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில் அமரர் ராஜீவ்காந்தியையும் அவர் இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். இத்தகைய பேச்சுக்களினால் நரேந்திர மோடிதான் இழிவுபடுத்தப்பட்டு வருகிறாரே தவிர, ராஜீவ்காந்தி அவர்களின் பெருமைக்கு எள்ளளவும் குறைவு ஏற்படப் போவதில்லை.

மேலும் ராஜீவ்காந்தியை போபர்ஸ் ஊழலோடு சம்மந்தப்படுத்தி நரேந்திர மோடி பேசியிருக்கிறார். 1986 இல் தொடுக்கப்பட்ட வழக்கு பிப்ரவரி 4, 2004 அன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பா.ஜ.க. ஆட்சி வாஜ்பாய் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், அந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்கு சட்டத்துறை அனுமதி தரவில்லை. ஏனெனில், ராஜீவ்காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே மேல்முறையீட்டை வாஜ்பாய் அரசு செய்யவில்லை. ஆனால், கடந்த நவம்பர் 2, 2018 இல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி பழிவாங்கும் நோக்கோடு மேல்முறையீடு செய்தது. 4500 நாட்கள் காலம் தாழ்ந்து செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தப் பின்னணியில் ராஜீவ்காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவதற்கு எந்த வகையான அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பிரதமர் மோடி இவ்வாறு பேசுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகும்.

நடைபெற்று வருகிற நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து மே 23 அன்று தீர்ப்பு வெளிவருகிற போது மீண்டும் பிரதமராக வர முடியாது என்கிற எதிர்ப்பு நிலை உருவாகி வருகிற நிலையை அறிந்த நரேந்திர மோடி சமீபகாலமாக பதற்றத்துடன் பேசி வருகிறார். அச்சத்தின் பிரதிபலிப்பு அவரது முகத்தில் தெரிகிறது. இதனால் ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறி தேர்தல் பிரச்சாரத்தை திசைத் திருப்ப முயற்சிக்கிறார். ஐந்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க துணிவில்லாத பிரதமர் மோடி, மறைந்த தியாகத் தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய இழிவான, அநாகரீக பேச்சுக்கு உரிய தண்டனையை பெறுவதில் இருந்து நரேந்திர மோடி தப்ப முடியாது.

Leave a Reply