APR-27
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.
சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பணியாற்றுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் திரு. மோகன் குமாரமங்கலம் அவர்கள் தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
அவர் வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருப்பதால் இந்த பணியை தொடர முடியாத காரணத்தால் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. ஹசன் மௌலானா அவர்கள் சூலூர் சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு தலைவராக செயல்படுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் ₹5லட்சம் வழங்கும் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அறிவிப்பு.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்க பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை கோமதி. இவர் சொந்த ஊரான திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியான மறைந்த மாரிமுத்து என்பவருக்கு மகளாக பிறந்தவர். எந்தவித பொருளாதார ஆதரவும் இல்லாமல் கடுமையான உழைப்பின் மூலமாக இந்த பதக்கத்தைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
தமிழக வீராங்கனை கோமதி பதக்கத்தை வென்று பெருமை சேர்த்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன். மேலும் அவர் பல விருதுகளை பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவரை ஊக்கப்படுத்துகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.