APR – 08

APR-08

      தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே. எஸ். அழகிரி அவர்களின் அறிக்கை

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல்

அறிக்கையில் பா.ஜ.க. நிறைய வாக்குறுதிகளை வழங்கியது. அந்த

வாக்குறுதிகளின் அடிப்படையில் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரத்தை

மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்றினார். ஆனால் ஐந்தாண்டுகளில் கொடுத்த

வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றினார் என்று ஆய்வு செய்தால் மிகுந்த

ஏமாற்றம் தான் ஏற்படுகிறது. இந்நிலையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு

புதிதாக வாக்குறுதிகளை பா.ஜ.க. வழங்கியிருக்கிறது. ஏற்கனவே கொடுத்த

வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க., புதிதாக கொடுத்திருக்கிற

வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கை எவருக்கும்

ஏற்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

பா.ஜ.க. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையை முழுமையாக ஆய்வு

செய்தால் புதுமையும் இல்லை, கவர்ச்சியும் இல்லை, சொல்லிக் கொள்ளும்படி

எதுவுமே இல்லாமல் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையோடு

முடிவடைகிற நிலையில் இன்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கை

வெளியிட்டிருக்கிறது. இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம் ? ஏற்கனவே

திட்டமிட்டபடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட முடியாத அளவிற்கு

காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையால் திக்குமுக்காடிப் போனதால்

காலம் தாழ்த்தி தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டிய அவலநிலை

ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைப் போல விவசாயிகளின்

வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், விவசாயிகளின் விளை பொருளுக்கு

உரிய விலை வழங்குவோம் என்று திரும்பவும் வாக்குறுதி

வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் கொடுத்த இதே

வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த உருப்படியான திட்டமிடலும் செய்யாத

பா.ஜ.க. மீண்டும் அதே வாக்குறுதியை கொடுத்தால் விவசாய பெருங்குடி

மக்கள் நம்புவார்களா ? விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் ரூபாய் 1 லட்சம்

வரை ஐந்தாண்டுகளுக்கு கடன் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

ஏற்கனவே ஒவ்வொரு விவசாயி மீதும் சராசரியாக 1 லட்சத்து 4 ஆயிரம்

ரூபாய் கடன் சுமை இருக்கிறது. இந்த கடன் சுமையை போக்குவதற்கு

மனமில்லாத பா.ஜ.க. வட்டியில்லா கடன் குறித்து வாக்குறுதி வழங்குவதை

எவராவது ஏற்றுக் கொள்வார்களா ?

அன்னை சோனியா காந்தியின் முயற்சியால் மாநிலங்களவையில் மகளிருக்கு

33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில்

நிறைவேற்றுவதற்கு கடந்த ஐந்தாண்டுகளில் எந்த முயற்சியும் எடுக்காத

பா.ஜ.க. மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம் என்று

வாக்குறுதி கொடுப்பதற்கு என்ன தகுதியிருக்கிறது ? ஏழைஎளிய மக்களுக்கு

சமையல் எரிவாயு இணைப்பு, வீடுகளுக்கு மின்சாரம், பாதுகாப்பான குடிநீர்

போன்றவற்றை வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இவற்றையெல்லாம்

செய்கிற அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறோம். மக்களோடு

நெருக்கமாக இருக்கிற மாநில அரசோ, உள்ளாட்சி அமைப்புகளோ செய்ய

வேண்டிய பணிகளை மத்திய அரசு செய்யும் என்று சொல்வது கூட்டாட்சி

தத்துவத்திற்கு விரோதமானதாகும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு

வழங்குவோம் என்று 2014 தேர்தலில் வாக்குறுதியாக வழங்கினார்கள். அதன்படி

கடந்த ஐந்தாண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருக்க

வேண்டும். ஆனால் 10 லட்சம் வேலைகள் கூட புதிதாக உருவாக்கப்படவில்லை

என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதை மூடி மறைப்பதற்காக தேசிய

புள்ளியியல் ஆணையம் வெளியிட இருந்த அறிக்கையை முடக்கி, அந்த

அமைப்பே பா.ஜ.க. அரசினால் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கிற நடவடிக்கைகளை பா.ஜ.க. தேர்தல்

அறிக்கை தூபம் போட்டு வளர்த்திருக்கிறது. கடந்த ஐம்பது வருடங்களாக

சொல்லி, சொல்லி செல்லரித்துப் போன அரசமைப்பு சட்டப் பிரிவு 370 ரத்து

செய்யப்படும், பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும், அயோத்தியில் ராமர்

கோவில் கட்டப்படும் என்ற வாக்குறுதிகள் மீண்டும் கூறப்பட்டுள்ளன. இவை

எவற்றையுமே 1998 முதல் 2004 வரை நடைபெற்ற வாஜ்பாய் ஆட்சிக்

காலத்திலோ, 2014 முதல் 2019 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிற நரேந்திர

மோடி ஆட்சிக்காலத்திலோ நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு என்ன

காரணமென்றால் நிறைவேற்ற முடியாது என்று நன்றாக தெரிந்த பின்னரும்,

மக்களை மதரீதியாக திரட்டி வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்தவே

கூறப்பட்டு வருகிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

சமீபகாலத்தில் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் தலைதூக்கியிருக்கிற

சூழலில் அரசமைப்பு பிரிவு 370 ரத்து செய்யப்படும் என்று கூறுவது

இந்தியாவிலிருந்து காஷ்மீர் மாநிலத்தை பிரிக்கிற முயற்சியாகத் தான் கருத

முடிகிறது. இதைவிட ஒரு தேச துரோகச் செயல் வேறு எதுவும் இருக்க

முடியாது. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கிற பா.ஜ.க.வின் தேர்தல்

அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள். எனவே, வருகிற

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவை ஆளுவதற்கு தகுதியோ, உரிமையோ

இல்லாத கட்சியாக பா.ஜ.க.வை மக்கள் கருதி, புறக்கணிப்பார்கள் என்பது உறுதி.

Leave a Reply