பிறப்பு: ஜூன் 26, 1924
இறப்பு: செப்டம்பர் 9, 2005
இளையபெருமாள் லட்சுமணன் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இருபது வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பிறந்தவர் இளையபெருமாள். பள்ளிகளில் பறையர்களுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக தனி பானையும் இருப்பதை பார்த்திருக்கிறார். எவருக்கும் தெரியாமல், பறையர்களின் பானை என்று எழுதப்பட்டிருக்கும் பானையை தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் உடைக்கும் போது பள்ளி முதல்வரிடம் பிடிபட்ட போதும், தன்னுடைய செய்கையின் நியாயத்தினை முன்வைக்கத் தயங்கவில்லை. அவரால் அன்று முதல் மாணவர்களுக்கு இருந்த வந்த இரு குவளை முறை நீக்கப்பட்டது.
இளையபெருமாள் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 1952 முதல் 1967 வரை தொடர்ந்து 3 முறை பதவி வகித்தார். இவர் 1962 முதல் 1967 வரை அப்போது பிரதமராக இருந்த நேருவின் அரசில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியை உருவாக்கி அதன் முதல் தலைவராக பணியாற்றினார். மேலும் 1979-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகித்தார். 1980-ல் சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றினார். கருத்துவேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்த இளையபெருமாள் 1984-ல் இந்திய மனித உரிமை கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.
இந்தியாவில் 1955 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1976 இல் பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர் இளைய பெருமாள் தலைமையில் ஒரு கமிட்டியை நாடாளுமன்றம் அமைத்தது. இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் மிகவும் தாமதமாக கடந்த 1995ல் தான் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இளையபெருமாள் அவர்களின் பரிந்துரையின் பேரில் கொண்டுவரப்பட்டது தான்.
தந்தை பெரியார், காமராசர், பி. கக்கன், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர், போன்றவர்களின் நன்மதிப்பை பெற்றவர். தோழர் ஜீவாவை தனது ரோல் மாடலாக கொண்டு வாழ்ந்து வந்தவர் இளையபெருமாள். உயர்சாதி மக்களால் புறக்கணிக்கப்பட்ட பட்டியல் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தார் என்கிற காரணத்தாலே தென்னாட்டு அம்பேத்கர் என அன்புடன் அழைக்கப்படுகிறார்.