பி. கக்கன்

பெயர் : பி. கக்கன்
 பிறப்பு : 18-06-1908
 இறப்பு : 23-12-1981
 பெற்றோர் : பூசாரி கக்கன்
 இடம் : தும்பைபட்டி, மேலூர், மதுரை

வரலாறு:-வாழ்க்கை வரலாறு
விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சருமான திரு கக்கன், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி தலைவர், இன்னும் பல பொறுப்புக்களையும், 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரஸ் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளையும் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் நிர்வாகியும் ஆவார்.


 வாழ்க்கை சுருக்கம்:


 கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக(பூசாரியாக)ப் பணிபுரிந்தவர். பல சிரமங்களுக்கு இடையே தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்றார். 12-வது வயதில் படிப்பைத் தொடர முடியாததால் ஒரு வீட்டில் பண்ணை வேலை செய்தார். ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் பி.கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். மதுரை வைத்தியநாத ஐயர் இவரைத் தன் வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். மகாத்மா கந்தியின் வழியை பின்பற்றி நடப்பவர். பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமனின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்

 மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார்.

 கக்கன் தனது பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். சிறையில் கசையடி உட்பட பல கொடுமைகளை அனுபவித்தார்.
 அன்றைய காலகட்டத்தில் பறையர்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினைக் கொண்டு வந்ததின் விளைவாகத் பறையர்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைய தடைசெய்யப்பட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் பறையர்கள் மற்றும் சாணர்களைத் தலைமை தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார். ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946-ல் அரசியல் அமைப்பு சட்டசபை தொடங்கப்பட்டது. அப்போது நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.

 கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். பெருந்தலைவர் காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது திரு கக்கன் அந்தப் பதவியை ஏற்றார். 1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார். இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.


 
 கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் மதராசு மாகாணத்தில் துவக்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார். அவர்களுக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்தார். மேலும் காவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது உட்பட ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அமைச்சரான பிறகும் தன் மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தவர். அரசாங்க பணத்தில் வாழாமல், இவரது மனைவி ஆசிரியை வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். தனது தம்பிக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர், மனை ஒதுக்கீடு செய்து அளித்த அரசாணையைக் கிழித்தெறிந்தார். பதவிக் காலத்தில் எந்தப் பரிசுப் பொருளையும் யாரிடமிருந்தும் பெற்றதில்லை.

 இவரது தம்பி தனது தகுதி, திறமையின் அடிப்படையில் போலீசில் வேலைக்கு சேர்ந்த போதிலும், தன் சிபாரிசினால் கிடைத்தது என்று பிறர் கருதுவார்கள் என்பதால், அதில் சேர வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத் துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று சல்லிகாசுகூட சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர்.


 மேலூர் (தெற்கு) தொகுதியில் 1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார். இத்தேர்தல் தோல்விக்குப்பின் 1969 முதல் 1972 வரை தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி தலைவர் பொறுப்பு வகித்தார். 1973 இல் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.



 விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின் பூதான இயக்கத்துக்கு அளித்துவிட்டார். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், அங்கு பணம் செலுத்த முடியாததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எளிமையின் சின்னமாகவும், பொது வாழ் வில் இருப்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த கக்கன் 1981-ஆம் ஆண்டு 73-ஆம் வயதில் காலமானார். இவர் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999 ஆண்டு வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.