பெயர் : சி. சுப்பிரமணியம்
பிறப்பு : 30-01-1910
இறப்பு : 07-11-2000
பெற்றோர் : சிதம்பரக்
கவுண்டர்
இடம் : செங்குட்டைப்பாளையம், கோயமுத்தூர், தமிழ்நாடு
புத்தகங்கள் : வறுமை மீதான
போர், இந்திய விவசாயத்தில் ஓர் புதிய வழிமுறை, உலகில் நான் சென்ற சில
நாடுகள், என் கனவு இந்தியா, திருப்புமுனை, தமிழால் முடியும்
வகித்த பதவி : சுதந்திர
போராட்ட வீரர், அரசியல் தலைவர்
விருதுகள் : பாரத ரத்னா
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
இந்தியா விடுதலை பெற்ற
பிறகு, அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு
இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதில் முக்கிய பங்காற்றிய சி. சுப்பிரமணியம்
அவர்கள் விடுதலைப் பற்று உள்ளவர். இவர், இந்திய பசுமைப் புரட்சியின்
தந்தையெனவும் போற்றப்படுகிறார்.
பிறப்பு:
அவர், இந்தியாவின் தமிழ்நாடு
மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள
செங்குட்டைப்பாளையம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர்
சிதம்பரம்.
ஆரம்ப வாழ்க்கை:
பொள்ளாச்சியிலுள்ள ஆரம்ப
பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த அவர், பின்னர் சென்னைக்கு சென்று
‘சென்னை மாகாணக் கல்லூரியில்’ அறிவியல் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.
பின்னர், சென்னை சட்ட கல்லூரியில் சட்டம் பயின்றார்.
அரசியல் வாழ்க்கை:
1952 – லிருந்து தன்னுடைய அரசியல்
வாழ்க்கையை தொடங்கிய அவர், ராஜாஜியின் வழிகாட்டுதலில் அரசியல் நிர்வாகமும்
பயின்றார். 1952 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மாநில
அரசின் கல்வி, சட்டம் மற்றும் நிதி அமைச்சராக பணியாற்றினார். பத்து ஆண்டுகள்
சென்னை சட்டமன்ற தலைவராக இருந்த அவர், 1962ல் மக்களவை உறுப்பினராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்டீல் மற்றும் சுரங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
நிதி மற்றும் பாதுகாப்பை தொடர்ந்து பல பிரிவுகளில் அவருக்கு பொறுப்புகள்
வழங்கப்பட்டது. 1965 ஆம் அண்டு உணவுத் துறை அமைச்சராக இருந்து
பசுமைப்புரட்சிக்கு வித்திட்டார். 1969 ஆம் ஆண்டு காங்கிரஸ்
பிளவுபட்டபோது, இந்திராகாந்தியுடன் இணைந்து பிளவுபட்ட காங்கிரசின் இடைகாலத்
தலைவரானார். அவசர காலகட்டத்தில், அவர் இந்திராகாந்தி அமைச்சரவையில் நிதி
அமைச்சராகவும் பணியாற்றினார்.
ஒரு காலகட்டத்திற்கு பிறகு, இந்திரா காங்கிரஸ்
கட்சியிலிருந்து பிரிந்து தேவராஜ் அர்ஸ் தலைமையில் தொடங்கப்பட்ட காங்கிரஸ்
பிளவுக்கட்சியில் சேர்ந்தார். பின்னர், அவர் 1971-72
ல் இந்திய திட்ட கமிஷன்
துணைதலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1990 ஆம் ஆண்டு மகராஷ்டிரா
ஆளுனராக பொறுப்பேற்றார். அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் குறித்து அவரின்
தனிப்பட்ட கருத்து, ஊடகங்களில் கசிந்ததின் பின்னணியில்
பதவியிலிருந்து விலகினார்.
இந்திய வளர்ச்சிக்கு சி.
சுப்பிரமணியத்தின் பங்களிப்பு:
முழுமையான அரசியலில்
சேர்வதற்கு முன், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை
சென்ற சி. சுப்பிரமணியம், இந்திய சட்டமன்றத்தில் உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டு ‘இந்திய அரசியலமைப்பு சட்டம்’ இயற்றுவதில் முக்கிய பங்காற்றினார்.
அவருடைய மிகப்பெரிய சாதனையாக கருதப்படுவது, இந்திய விவசாயத்தில் அவர்
கொண்டுவந்த திட்டங்கள் இன்றளவும் வியக்கத்தக்க சாதனையாக போற்றப்படுகிறது. இந்திய
உணவு மற்றும் விவசாய அமைச்சராக பதவியேற்ற அவர், அதிக மகசூல் தரும்
விதைகளையும் உரங்களையும் கொண்டு 1972 ல் மிக கூடுதலான கோதுமை
விளைச்சலை நிகழ்த்திக்காட்டினார். இது இந்திய விவசாய துறையில் ‘பசுமைப் புரட்சி’
எனவும் புகழப்பட்டது. அவர் சென்னை தேசிய வேளாண் நிறுவனம் மற்றும்
திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் என்ற
நிறுவனத்தையும் நிறுவினார்.
இத்தகைய வியக்கத்தக்க
சாதனைகளை புரிந்த சி. சுப்பிரமணியத்திற்கு, இந்திய நாட்டின் மிக உயரிய
விருதுதான ‘பாரத் ரத்னா’ விருதை மத்திய அரசு 1998 ல் வழங்கி கௌரவித்தது.
இறப்பு:
இந்திய விவசாய
வளர்ச்சிக்காக பல திட்டங்களை நடைமுறைப்படுத்திய சிதம்பரம் சுப்பிரமணியம், நவம்பர் 7, 2000ல் தனது 90 வது வயதில் காலமானார்.