Dec – 02

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை கைவிடுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. 11, 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வசதியாக இந்த கல்வித் திட்டம் 75 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தை முடக்குவதற்காக பா.ஜ.க. அரசு 2017 ஆம் ஆண்டிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து வருகிறது. மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு மாணவர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 18 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான நிதியை மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40 சதவிகிதமும் ஒதுக்கி வந்தன. ஏற்கனவே, ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 லட்சம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே இந்த கல்வி உதவித்தொகை வழங்குவதால் பட்டியலின, பழங்குடி மாணவர்கள் பெருமளவில் பயனடையவில்லை. நாடு முழுவதும் 60 லட்சம் மாணவர்கள் தான் கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார்கள். தற்போது இந்த திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை கைவிட்டு விட்டு, பிரதமரின் பெயரில் பட்டியலின, பழங்குடியின மற்றும் பின்தங்கிய, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என அனைத்து தரப்பினருக்குமான புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஏற்கனவே 65 லட்சம் பட்டியலின மாணவர்கள் பயனடைந்து வந்தனர். ஆனால், பிரதமரின் புதிய பெயரிலான கல்வி உதவித்தொகை திட்டத்தில் மொத்த பயனாளி மாணவர்களே 62 லட்சமாக குறைத்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இது ஒடுக்கப்பட்ட மாணவர்களையும், முன்னேறிய வகுப்பு மாணவர்களையும் ஒரே தட்டில் வைத்து, கல்வி உதவித்தொகை வழங்குவது சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கிற செயலாகும். இதன்மூலம் பா.ஜ.க. அரசு தனது தலித் விரோத போக்கையே வெளிப்படுத்தியிருக்கிறது.

எனவே, பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் 11, 12 ஆம் வகுப்புகளில் படிப்பதற்கு மத்திய அரசிடமிருந்து பெற்று வருகிற கல்வி உதவித்தொகையை மத்திய பா.ஜ.க. அரசு குறைப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இதில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை மீண்டும் தொடர்கிற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், மத்திய பா.ஜ.க. அரசின் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டத்தை முடக்குகிற நடவடிக்கைக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

Leave a Reply