Nov – 30

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.

மத்திய பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டுக்குழு கடந்த நான்கு நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி, அரியானா மாநில எல்லைக்கு அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவோம், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கிற வகையில் புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக விவசாயிகள் கருதுகிறார்கள். இதுவரை விவசாயிகள் பெற்று வந்த குறைந்தபட்ச ஆதரவு விலை புதிய வேளாண் சட்டத்தால் பறிக்கப்பட்டுள்ளது. தங்கள் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்கிற உரிமையை இழந்துள்ளனர்.

விவசாயிகளின் சந்தையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க புதிய வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும். முன்நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று விவசாய சங்கங்கள் அறிவித்தன. ஆனால், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிற இடத்தில் இருந்து நிராங்கரி மைதானத்திற்கு இடம் பெயர்ந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முன்நிபந்தனையை ஏற்க விவசாயிகள் தயாராக இல்லை.

புதிய விவசாயச் சட்டங்கள் புதிய உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை விவசாயிகளுக்கு அளித்திருப்பதாக, மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இந்நிலையில், டிசம்பர் 3 ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, போராடும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

விவசாயச் சட்டங்களைப் பிரதமர் நியாயப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கும் போது, போராடும் விவசாயிகளுடன் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவார்?

டெல்லியில் 15 கி.மீ தொலைவில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை அமித்ஷா பார்க்கவில்லை. ஆனால், 1,200 கி.மீ தொலைவு பயணம் செய்து ஐதராபாத்துக்கு வருகிறார். விவசாயிகள் மீது எந்த அளவுக்கு இந்த அரசு அக்கறையாக இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று இருக்கப் போகிறது ?

மூன்று விவசாயச் சட்டங்கள் தொடர்பாகப் பல கேள்விகள் உள்ளன. மண்டிகளே இல்லை என்றால், குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருட்களை யார் வாங்குவார்? விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அவர்களாகவே மற்ற மாநிலங்களுக்கு விற்க முடியும் என்று அரசு சொல்கிறது. ஆனால், 86 சதவீத விவசாயிகள், 5 ஏக்கருக்குக் குறைவான நிலம் வைத்துள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களால், தங்கள் மாவட்டத்திலிருந்துகூட வெளியே செல்ல முடியாது.

விவசாயிகளுக்கு எதிரான 12,000 வழக்குகளைத் திரும்பப் பெற்று, 3 விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பது தான் விவசாய சங்கங்களின் கோரிக்கை. விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொன்ன அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரும், விவசாயிகளை காலிஸ்தானியர்கள் என்று அழைத்த பாரதிய ஜனதா கடசியின் செய்தி தொடர்பாளர் அமித் மாளவியாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் போராட்டத்தைப் பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேசவேண்டும். அதன்பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதற்கான அடித்தளமாகப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply