தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.
தமிழகத்தின் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பொறியாளர்கள். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற இருபதுக்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பொறியாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் ரூபாய் வரை தமிழக அரசு குறைத்து வழங்குகிறது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொறியாளர்கள்தான் தமிழக அரசின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சிப் பணிகளை களத்தில் நின்று செயல்படுத்தி வருகிறார்கள். இவர்களது ஊதியத்தை குறைப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
மருத்துவர்களுக்கு இணையான தொடக்க நிலை ஊதியத்தை பொறியாளர்களுக்கு 2010 இல் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. அரசு 2013 இல் உதவிப் பொறியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும் வகையில் ஊதிய விகிதத்தை வழங்கியது. இதை எதிர்த்து பொறியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள், நீதிமன்றத்திலும் முறையிட்டார்கள். ஆனால், அ.தி.மு.க. அரசு அநீதியை போக்க முயலவில்லை.
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழுவினை தமிழக அரசு அமைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிபதி முருகேசன் குழு அறிக்கை கொடுத்தும், 2013 இல் குறைத்து வழங்கப்பட்ட ஊதியத்தையே இப்போதும் வழங்கி, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. நீதிபதி முருகேசன் குழு அறிக்கையை பொது வெளியில் வெளியிடாமலும், குழு அளித்த பரிந்துரைகள் தொடர்பாக பொறியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளின் கருத்தை அறியாமலும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கின்ற பொறியாளர்களின் கடும் பணி குறித்து கவலைப்படாமலும் எதேச்சதிகார முறையிலும் ஊதிய குறைப்பு ஆணைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் வழங்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக அரசு நீதி வழங்காத நிலையில், நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரையை நிறைவேற்றாத சூழலில் தான் பொறியாளர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டார்கள். நீதிமன்றம் சென்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் பழிவாங்கப்படுவது தமிழக ஆட்சியாளர்களின் அராஜக போக்கையே வெளிப்படுத்துகிறது. பொறியாளர்களின் ஊதியத்தை குறைப்பது, சமநிலையில் பணியாற்றுகிற மற்ற ஊழியர்களை விட குறைவான ஊதியத்தை வழங்குவது என்பது திறமையான பொறியாளர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
எனவே, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளை கடமை உணர்வோடு நிறைவேற்றுகிற பொறியாளர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் உடனடியாக கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.