தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் வெளியிடும் அறிக்கை.
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. 15 ஆண்டுகால மக்கள் விரோத நிதிஷ்குமார் ஆட்சி முடிவுக்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்து விட்டன.
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை நெருங்குகிற வகையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். பீகாரில் மதச்சார்பற்ற கட்சிகளின் வலிமை உறுதிபடுத்தப்பட்டிருக்கின்றன. பீகார் மாநில தேர்தலை பொறுத்தவரை மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி வாய்ப்பை ஒவைசி கட்சி தடுத்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் பா.ஜ.க.வுக்கும், ஒவைசி கட்சிக்கும் ரகசிய உடன்பாடு இருக்குமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிளவுபடுத்தி பா.ஜ.க.வுக்கு உதவுகிற ஒவைசி போன்ற கட்சிகளின் விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.