May 03
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்களின் அறிக்கை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறி வாக்கு கேட்க இயலாத நரேந்திர மோடி மலிவான அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கறுப்பு பணத்தை ஒழிப்போம், தீவிரவாதத்தை ஒழிப்போம், விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவோம், ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வினர் சாதனைகள் என்று சொல்லிக் கொள்வதற்கு எதுவுமே இல்லாத நிலையில் அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். ஆனால், நாட்டு மக்கள் ஐந்தாண்டு கால பா.ஜ.க.வின் மக்கள் விரோத ஆட்சிக்கு தேர்தல் மூலம் பாடம் புகட்டி வருகிறார்கள். இனியும் புகட்டுவார்கள்.
ஐந்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்ல இயலாத நிலையில் பாகிஸ்தான் எதிர்ப்பை பேசுகிறார். துல்லிய தாக்குதல் நடத்தியது குறித்து மார்தட்டிக் கொள்கிறார். பயங்கரவாதத்தை எதிர்க்கும் மாவீரனாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியதாக கூறி புளகாங்கிதம் அடைகிறார். இவை அனைத்தையும் ஆய்வு செய்து பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நரேந்திர மோடி நடத்திய துல்லிய தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டார்கள் என்கிற விவரம் இதுவரை எவருக்கும் தெரியாத மர்மமாக இருக்கிறது.
ஆனால் டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் ஆறுமுறை பாகிஸ்தான் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதை அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் செய்தியாக அன்றைய காங்கிரஸ் அரசு வெளியிட்டதில்லை. சிலவற்றை வெளியிடுவது பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால் செய்தியாக வெளியிட்டு நரேந்திர மோடியைப் போல விளம்பரம் தேடிக் கொண்டதில்லை. ஆனால் சர்வதேச தீவிரவாதியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச தீவிரவாதி மசூத் அசாரை காங்கிரஸ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை வாஜ்பாய் அரசு தான் விடுதலை செய்தது என்பதை எவரும் மறந்திட இயலாது.
பயங்கரவாதத்திற்கு எதிராக பேசும் நரேந்திர மோடி போபால் மக்களவை தொகுதியில் மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கிக் கொண்டிருக்கிற பிரக்யாசிங் தாகூரை பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். அவர் உடனே தாம் இட்ட சாபத்தால் தான் ஹேமந்த் கர்க்கரே கொல்லப்பட்டார் என்று இழிவாக பேசுகிறார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வீழ்த்துவதற்கு களத்தில் நின்று போராடிய மறைந்த மாவீரர் ஹேமந்த் கர்க்கரேவை இதைவிட எவரும் கொச்சைப்படுத்த முடியாது. இதன்மூலம் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து நரேந்திர மோடி அணிந்திருந்த வேடம் கலைந்திருக்கிறது.
நரேந்திர மோடி ஆட்சியில் ஊழலே நடக்காது என்று கூறினார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ரூபாய் 526 கோடிக்கு வாங்கப்பட்ட ரபேல் விமானத்தை 1670 கோடி ரூபாய்க்கு மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியது ஏன் என்று கேட்ட கேள்விக்கு இதுவரை மோடி பதில் கூறவில்லை. பொதுத்துறை நிறுவனத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் புறக்கணித்து விட்டு, அனில் அம்பானியின் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது ஏன் என்று கேட்டதற்கும் இதுவரை பதில் இல்லை. அதேபோல, பணமதிப்பு இழப்பால் இந்திய பொருளாதாரத்திற்கு 2.25 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 150 பேர் தங்களது உயிரை இழந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான பேர் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதற்கெல்லாம் நரேந்திர மோடியின் ஆட்சி தான் காரணம்.
ஆண்டுக்கு 2 கோடி பேர் என ஐந்தாண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என 2014 பா.ஜ.க. தேர்தல் அறிக்கை கூறியது. ஆனால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. 2018 இல் மட்டும் 1 கோடி பேருக்கு மேல் வேலை பறிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 2018 நிலவரப்படி 4.27 கோடி பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ரயில்வேயில் சாதாரண கேங்க் மேன் போன்ற 96 ஆயிரம் வேலைக்கு 2 கோடியே 80 லட்சம் பேர் மனு செய்கிற அவலநிலை உள்ளது.
விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார் நரேந்திர மோடி. தலைநகர் தில்லியில் தமிழக விவசாயிகள் 41 நாட்கள் போராட்டம் நடத்திய போது அவர்களை சந்திக்க மறுத்தார். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படாது என்று கூறுகிற ஒருவரை பிரதமராக பெற்றிருப்பதற்கு விவசாயிகள் வெட்கி தலைகுனிய வேண்டும். ரூபாய் 2 லட்சத்திற்கு குறைவான கடன் வைத்திருக்கிற விவசாயிகளின் மொத்த கடன் தொகை ரூபாய்
1.90 லட்சம் கோடி. இதை தள்ளுபடி செய்ய மனமில்லாத நரேந்திர மோடி 15 தொழிலதிபர்களின் கடன் தொகையான ரூபாய் 5 லட்சத்து 50
ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்திருக்கிறார். இவரை விட விவசாயிகள் விரோத எண்ணம் கொண்ட ஒரு பிரதமரை இதுவரை இந்தியா கண்டதில்லை.
மோடியின் ஆட்சியில் ரூபாய் 90 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதில் சம்மந்தப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் நரேந்திர மோடியின் நண்பர்கள். பிரதமரோடு வெளிநாடு சுற்றுப் பயணத்தில் பங்கெடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள். இவர்கள் ரூபாய் 53
ஆயிரம் கோடி கடனை வாங்கி, வங்கிகளை ஏமாற்றி வெளிநாடுகளுக்க தப்பிச் சென்றவர்கள். அதேபோல, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி ரூபாய் 13
லட்சம் கோடி வசூல் செய்து மத்திய அரசின் கஜானாவை பா.ஜ.க. அரசு நிரப்பிக் கொண்டது.
ரபேல் விமான கொள்முதல் ஊழலில் தம் மீது விசாரணை வரும் என்ற பதற்றத்தில் இரவோடு இரவாக சி.பி.ஐ. இயக்குநர் மாற்றப்பட்டார். சி.பி.ஐ. அலுவலகத்திலேயே சி.பி.ஐ. சோதனை நடந்த அதிசயம் நடைபெற்றது. இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கிற தூண்கள் சிதைக்கப்பட்டன. தலித்துகள், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை என அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கிற அளவுக்கு பா.ஜ.க. அரசு கடந்த ஐந்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது. மே 23-க்குப் பிறகு பா.ஜ.க. ஆட்சி இருக்காது; நரேந்திர மோடி பிரதமராக இருக்க மாட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் கூறியது கள நிலவரத்தின் அடிப்படையில் கூறப்பட்டதாகும். தேர்தல் பிரச்சாரத்தை திசைத் திருப்புவதற்காக மோடி எடுத்துக் கொண்ட முயற்சிகள் கடுமையாக தோல்வியடைந்து வருகின்றன. நாள்தோறும் விதவிதமான உடைகளை அணிவதைப் போல, விதவிதமான அவதூறுகளை பரப்பி வருகிறார். இதையெல்லாம் கேட்டு மக்கள் சலிப்படைந்து கடுமையாக பாடம் புகட்டி வருகிறார்கள். எனவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிற அதேநிலையில், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. தேர்தலுக்குப் பிறக அ.தி.மு.க. ஆட்சி இருக்காது. அதுமட்டுமல்ல, அ.தி.மு.க. என்கிற கட்சி உருக்குலைந்து சிதறுகிற சூழல் ஏற்படப் போகிறது. ஆட்சி போன மறுநாளே அ.தி.மு.க. கூடாரம் காலியாகப் போகிறது. இதன்மூலம் புதிய ஆட்சி அமைந்து, தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படப் போகிறது.