APR-30
ஆசிய தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற செல்வி கோமதி மாரிமுத்து அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ரூ 5 லட்சத்திற்கான காசோலையை தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் இன்று சத்தியமூர்த்தி பவனில் செல்வி கோமதி மாரிமுத்து அவர்களிடம் வழங்கினார். உடன் முன்னாள் மாநில தலைவர்கள் திரு. குமரி அனந்தன், திரு. சு. திருநாவுக்கரசர், திரு கே.வீ. தங்கபாலு, திரு. எம். கிருஷ்ணசாமி, மாநில செயல் தலைவர்கள் திரு. வசந்த குமார், டாக்டர் கே. ஜெயக்குமார், திரு. மயூரா ஜெயகுமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்களின் மே தின வாழ்த்துச் செய்தி.
உழைக்கும் வர்க்கத்தினருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லாமல் அடிமைகளாக நடத்தப்பட்ட கொடுமையை எதிர்த்து சிகாகோ நகரில் மே 4, 1886 இல் நடைபெற்ற தொழிலாளர் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது அன்றைய ஆட்சியாளர்கள் தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். இந்த போராட்டத்தின் காரணமாக தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை மற்றும் ஓய்வு உள்ளிட்ட சில உரிமைகள் கிடைத்தன. இந்நாளை நினைவுகூறுகிற வகையில் தான் ஆண்டுதோறும் மே மாதம் முதல் நாளை உழைப்பாளர்கள் தினமாகவும்;, மே தினமாகவும் நாம் கொண்டாடி வருகிறோம்.
கடந்த ஐந்தாண்டுகளாக உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மோடி அரசு செயலாற்றி வருகிறது. அதேநேரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிற பா.ஜ.க. பினாமி அ.தி.மு.க. ஆட்சியும், தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் மத்திய – மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு முடிவுகட்டும் வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் மக்களின் முடிவு பிரதிபலிக்கும். அதேபோல் நடைபெறவுள்ள நான்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் மக்கள் தங்களின் எதிர்ப்புக் குரலை உறுதியாக பதிவு செய்வார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
கட்சிகளின் எல்லைகளைக் கடந்து அனைத்து தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை நிலைநாட்ட மக்கள் விரோத ஆட்சியாளர்களை எதிர்த்து களத்தில் நின்று போராட வேண்டியது மிகமிக அவசியமாகும்.
தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்றைக்கும் உறுதியாக துணை நிற்கும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களால் வெளியிடப்பட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தொழில்துறையின் வளர்ச்சிக்கும், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை இந்நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய உழைப்பை மூலதனமாக வைத்து வாழ்க்கை நடத்தி வரும் தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இந்த மே தின நன்நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.