Feb 21
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களது வாக்குகளை நயவஞ்சகமாக கவருகிற வகையில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லப்போவதாக கவர்ச்சிகரமான வாக்குறுதி வழங்கி மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்க்க காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தலைமையில் 24-க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. இதில் தமிழகத்தில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலைஞர் சிலை திறப்பு விழாவில் திரு. ராகுல்காந்தி அவர்களின் பெயரை பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்தார். தி.மு.க. தலைமையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற, சமூகநீதியில் அக்கறையுள்ள காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என கடந்த சில வருடங்களாக மத்திய – மாநில அரசுகளை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்தி கட்சிகள் ஓரணியில் அணி திரண்டு நிற்கின்றன.
இந்நிலையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்;சி போட்டியிட 9 இடங்களையும், புதுச்சேரியில் ஒரு இடத்தையும் வாய்ப்பு வழங்குகிற வரலாற்றுப் புகழ்மிக்க ஒப்பந்தம் நேற்று தி.மு. கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும், நானும் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் திரு. கே.சி. வேணுகோபால், திரு. முகுல் வாஸ்னிக் மற்றும் செயலாளர்கள் திரு. சஞ்ஜய் தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டன.
கடந்த 2004 ஆம் ஆண்டில் தி.மு. கழகத்தோடு தொடங்கிய லட்சியப் பயணம் இடையில் ஓரிரு ஆண்டுகளைத் தவிர, கடந்த 15 ஆண்டுகளாக கொள்கை அடிப்படையில் பீடுநடை போட்டு வருகின்றன.
2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல்,
2011, 2016 சட்டமன்றத் தேர்தல் என தி.மு. கழகத்தோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ்
2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பெரும் பங்காற்றிய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களுக்கும், தி.மு. கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களுக்கும் மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர் திருமதி. கனிமொழி அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பின்னணியில் நெஞ்சை உயர்த்தி நாங்கள் அமைத்திருப்பது கொள்கைக் கூட்டணி, லட்சியக் கூட்டணி என்று கூரை மீது ஏறி நின்று கூவி கூற முடியும். ஆனால் நம்மை எதிர்க்கிற கட்சிகளின் நிலை என்ன ? கொள்கை என்ன ? கடந்த கால அரசியல் அணுகுமுறை என்ன ?
கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை ஆதாரத்துடன் வழங்கியவர் பா.ம.க. இளைஞரணி தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ். அந்த ஊழல் பட்டியலில் முதலாவது குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் ஆற்றுமணல் விற்பனையில் ரூபாய்
7.10 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. பல்கலைக் கழக துணை வேந்தர்கள், ஆசிரியர்கள் நியமனத்தில் ரூபாய்
320 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி 24
ஊழல் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது. பட்டியல் வழங்கி 70 நாட்களுக்குள்ளாக எந்த அ.தி.மு.க. மீது ஊழல் பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டதோ, அந்த ஊழல் கட்சியோடு கைகோர்த்து இன்றைக்கு பா.ம.க. நிறுவனர் கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பட்டிருக்கிறார். கரைபடிந்த கரங்கள் இணைந்துள்ளன. இதைவிட அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா ? சந்தர்ப்பவாத அரசியலில் இன்றைக்கு மருத்துவர் ராமதாஸ் கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்.
எனவே, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து சந்தர்ப்பவாதிகளின் கூடாரம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆனால் மதச்சார்பற்ற, சமூகநீதியில் அக்கறையுடன், தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொள்கை கூட்டணி அமைத்திருக்கின்றன. நமது கொள்கைகளை மக்களிடம் கூறுவோம். அ.தி.மு.க., பா.ம.க.வின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டி அம்பலப்படுத்வோம்.
கடந்த 2004 இல் தி.மு.க., காங்கிரசோடு கூட்டணி சேர்ந்த பா.ம.க. 5
இடங்களில் வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் கேபினட் அமைச்சராகவும், ஆர். வேலு ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தார்கள். ஆனால்
2009 நாடாளுமன்றத் தேர்தலிலே கூட்டணியிலிருந்து விலகி, அ.தி.மு.க.வோடு சேர்ந்து 6 இடங்களில் பா.ம.க. போட்டியிட்டு அனைத்திலும் படுதோல்வி அடைந்தது. அத்தகைய தோல்வியை வருகிற
2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ம.க.வுக்கு வழங்கி உரிய பாடத்தை தமிழக மக்கள் வழங்குவார்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் தேவையில்லை.
2004 இல் மதச்சார்பற்ற கூட்டணி பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்கிற வெற்றியின் இலக்கை நோக்கி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடங்கி விட்டது.
(கே.எஸ். அழகிரி)