FEB – 18

Feb 18

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை –

தமிழகத்தில் விவசாயத் தொழிலுக்கு துணை தொழிலாக பால் உற்பத்தியாளர்கள் கிராமப்புறங்களில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வருகிறார்கள். ஏறத்தாழ 25 லட்சம் குடும்பங்கள் கூட்டுறவுத் துறைக்கு நாள்தோறும் 2 கோடி லிட்டர் பால் விநியோகம் செய்து வருகிறார்கள். அமைப்பு சார்ந்து செயல்படுகிறவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்கிற தமிழக ஆட்சியாளர்கள், அமைப்பு சாரா முறையில் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் பால் உற்பத்தி செய்கிற தொழிலை செய்பவர்களின் கோரிக்கைகளை கருணையோடு பரிசீலிப்பதில்லை. விவசாய தொழிலுக்கு அடுத்தபடியாக கடுமையாக உழைக்கிற தொழிலாக பால் உற்பத்தியாளர்கள் விளங்குகிறார்கள். நாள்தோறும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 35 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களது இடுபொருளான மாட்டுத் தீவனம், கலப்புத் தீவனம் 15 முதல் 20 சதவீதம் விலை ஏறி இருக்கிறது. ஆனால் இந்த விலை ஏற்றத்திற்கு ஈடாக பால் உற்பத்தியாளர்களுக்கு விலை கொடுக்க தமிழக அரசு மறுத்து வருகிறது. 
கடந்த 2014 ஆம் ஆண்டில் நிர்ணயித்தபடி ஒரு லிட்டர் பசும்பால் ரூ.28, எருமைப்பால் ரூ.35 என தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக விலை உயர்வு வழங்கப்படவில்லை. இந்த விலை கட்டுப்படியாகாத நிலை காரணமாக பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் ஒரு லிட்டர் பசும்பால் விலை ரூபாய் 10 ஆகவும், எருமைப்பால் லிட்டர் விலை ரூ.16 ஆகவும் இந்த மாதத்திற்குள் உயர்த்த வேண்டும். இக்கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில் அரசு அலுவலகத்தின் முன்னாலே பசுக்களை கட்டி வைத்து போராட்டம் நடத்துவோம் என்று பால் உற்பத்தியாளர் நலச் சங்கத் தலைவர் கே.ஏ. செங்கோட்டுவேல் அறிவித்திருக்கிறார். இந்த விலை உயர்வை தமிழக அரசு அறிவிக்கவில்லை என்றால் பால் உற்பத்தி தொழிலே அழிந்து விடுகிற அபாயகரமான நிலை இருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தில் விவசாயிகளுக்கு துணை தொழிலாக வாழ்வாதாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிற பால் உற்பத்தி தொழிலை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.
எனவே, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தையும், ஆவின் நிறுவனத்தையும் அழைத்து தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

(கே.எஸ். அழகிரி)

Leave a Reply