Feb 18
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை –
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து இருப்பதை வரவேற்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படுகிற பாதிப்புகளின் அடிப்படையில் பொதுமக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். அந்தப் போராட்டத்தின் இறுதி கட்டமாக கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற கண்டன பேரணியினர் மீது காவல் துறையினர் எவ்வித காரணமும் இன்றி தடியடி நடத்தி, தூப்பாக்கி சூட்டின் மூலம் 13 பேர் பலியாக வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இத்தகைய தாக்குதலுக்கு எந்த காரணமும் இல்லையென்பதை அறிந்து சென்னை உயர்நீதி மன்றம் காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணைப் பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தடை விதித்திருக்கிறது. இது குறித்து மேற்கொண்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமெனவென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை தருவதாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண தமிழக அரசு தொடர்ந்து நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
(கே.எஸ். அழகிரி)