Feb 7
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை –
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் வாக்குறுதி வழங்கினார். ஆனால் ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் கழித்து இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவித்திருக்கிறார். இது தேர்தலுக்கான அறிவிப்பாக கருதப்படுகிறதே தவிர, விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டதாக எவரும் கருத முடியாது.
எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளை பொருளுக்கு முதலாவதாக உற்பத்திச் செலவும், இரண்டாவதாக இடுபொருள் செலவோடு, விவசாயிகளுடைய உழைப்பிற்கான ஊதியமும் மற்றும் மூன்றாவதாக விவசாயிகளுடைய நிலத்திற்கு வாடகையும், முதலீட்டிற்கு வட்டியும் சேர்த்து கணக்கிடப்படுவது தான் உற்பத்திச் செலவு. இதில் 50 சதவீதம் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையாகும். ஆனால் நரேந்திர மோடி அரசு முதல் இரண்டையும் கணக்கில் சேர்த்து விட்டு மூன்றாவது பரிந்துரையை சேர்த்து நிறைவேற்றாமல் 22 விவசாய விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்து அறிவித்திருக்கிறது.
இதனால், இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பான சூழல் உருவாகி வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளை பொருளின் விலை சந்தை விலையை விட குறைந்து விற்கப்படுகிறது. தங்களது பொருளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை பெற முடியாத அவலநிலை நிலவுகிறது. இந்தப் போக்கை சரிகட்டுவதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சந்தை விலை குறைவாக இருந்தால் விவசாய விளை பொருட்களை நேரிடையாக கொள்முதல் செய்கிற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய பா.ஜ.க. அரசு வாக்குறுதி வழங்கியது. ஆனால் அந்த வாக்குறுதியை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த கண்டனத்திற்குரியது. இத்தகைய பாதிப்புகளின் பின்னணியில் தான் 5 மாநில தேர்தலில் பா.ஜ.க.வின் கோட்டையாக கருதப்பட்ட மூன்று மாநிலங்களில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக படுதோல்வி அடைய நேரிட்டது.
அதேபோல, எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூபாய்
2340 வழங்கியிருக்க வேண்டும். ஆனால் ரூபாய்
1760 தான் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல் விற்பனையில் ரூபாய்
590 இழப்பு ஏற்படுகிறது. அதேபோல, பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூபாய்
6771 வழங்க வேண்டும். ஆனால் வழங்கப்படுவதோ ரூபாய்
5150. இதனால் ஏற்படுகிற இழப்பு ஒரு குவிண்டாலில் ரூபாய்
1621. இப்படி அறிவிக்கப்பட்ட 22 விவசாய விளை பொருட்களிலும் கடுமையான விலை குறைப்பை சந்திக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள்.
எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க நிதி ஆதாரங்களை அறிவிக்காமல் வெற்று அறிவிப்பை மோடி அரசு செய்திருக்கிறது. அதேபோல, கரும்பு விவசாயிகள் ஆலைக்கு கொள்முதல் செய்த பிறகு 14
நாட்களுக்குள் தொகையை செலுத்த வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக கரும்புக்கான விலையை வழங்காமல் ரூபாய் 20
ஆயிரம் கோடி நிலுவைத் தொகை இருந்து வருகிறது. தமிழகத்திலும் ஏறத்தாழ ரூபாய் 3 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை இருக்கிறது.
விவசாயிகள் கடன் தொல்லையை தாங்க முடியாமல் நரேந்திர மோடி ஆட்சியில் 2017-18 இல் மட்டும் 14,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஒருநாளைக்கு 35 விவசாயிகள் தற்கொலை செய்கிற அவலம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கடன் தொல்லையை போக்குவதற்காக கடன் நிவாரணம் வழங்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறார். சமீபத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைந்த 10 நாட்களில் கடன் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் கடன் தொல்லையிலிருந்து மீட்க எந்தவிதமான அறிவிப்பையும் செய்யாதது விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பான நிலை உருவாகியிருக்கிறது.
எனவே, விவசாயிகள் மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராக உருவாகியிருக்கிற கடும் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளை பொருட்களுக்கு உரிய நியாய விலை கிடைப்பதற்காக தமிழகத்தில் உள்ள விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து கடுமையான போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னெடுத்துச் செல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
(கே.எஸ். அழகிரி)