FEB – 05

Feb  5

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை –

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக என்னை 2.2.2019 அன்று நியமனம் செய்தார். மாணவர் பருவம் முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபாடு கொண்டு ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராக இருமுறையும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்வு பெற்று எனது பணிகளை சேவை மனப்பான்மையோடு ஆற்றிய மனநிறைவு எனக்கு உண்டு. பின்தங்கிய சமுதாயத்தைச் சார்ந்த என்னை இத்தகைய பதவிகளை வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருந்து வருகிறேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வகுப்புவாத சக்திகள் பெருமளவில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு செயல்படுத்தப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து அன்னை சோனியா காந்தியும், எழுச்சித் தலைவர் ராகுல்காந்தியும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். இதன்மூலம் மக்களை திரட்டுகிற மகத்தான பணியை காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ராகுல்காந்தி அவர்கள் மிகச் சிறப்பாக செய்து வருகிறார். இதனால் சமீபத்தில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க.வின் கோட்டையாக கருதப்பட்ட மூன்று மாநிலங்களில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு தேசிய அளவில் 22க்கும் மேற்பட்ட கட்சிகள் திரு. ராகுல்காந்தி அவர்கள் தலைமையில் அணிவகுக்க தயாராக இருப்பது தேசிய அரசியலில் மிகப் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான வகுப்புவாத, பிற்போக்கு செயல்பாடு கொண்ட பாசிச ஆட்சியை அகற்ற வேண்டியது அனைவரது கடமையாக உருவாகியிருக்கிறது.

தமிழகத்தில் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராக கடும் கோபத்துடன் மக்கள் கொதித்தெழுந்து தங்களது எதிர்ப்புகளை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதற்கு எந்த ஒரு கட்சியும் முன்வராத ஒரு சூழல் தமிழகத்திலே நிலவி வருகிறது. இந்தப் பின்னணியில் மாநிலத்தில் நடைபெற்று வரும் அராஜக ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய பொறுப்பு ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகின்றன. இந்த அரிய பணியை தி.மு. கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். 
சமீபத்தில் மறைந்த தி.மு. கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களை மேடையில் வைத்துக் கொண்டு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் எதிர்கால பிரதமராக அவரை முன்மொழிந்து எதிர்கால வெற்றிக்கு முன்னோட்டமாக அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக காங்கிரஸ் கட்சி நன்றி பாராட்ட கடமைப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுகிற அரிய வாய்ப்பு இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

இத்தகைய அரசியல் சூழலில் சாதாரண தொண்டராக இருந்த என்னை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோர் அமர்ந்து பெருமை சேர்த்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நியமித்த தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, அன்னை சோனியா காந்தி அவர்களது வாழ்த்துக்களை பெறுவதை பாக்கியமாக கருதுகிறேன். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் திரு. முகுல் வாஸ்னிக் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்தியாவின் எதிர்கால பிரதமராக திரு. ராகுல்காந்தி அவர்களை அமர்த்துகிற இமாலயப் பணியில் தமது பங்களிப்பை செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இந்தப் பணியை செய்து முடிப்பதற்காக நமக்கு 100 நாட்கள் கூட இல்லை. கண் துஞ்சாது, அயராது, கடமை உணர்வோடு உழைப்பதன் மூலமே நமது வெற்றிகளைப் பெற முடியும்.

எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 8.2.2019 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களுமான திரு. சஞ்ஜய் தத், டாக்டர் சிரிவல்லபிரசாத் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி ஆகியோர் முன்னிலையில் பொறுப்பேற்க இருக்கிறேன். என்னோடு செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள திரு. எச். வசந்தகுமார், டாக்டர் கே. ஜெயக்குமார், டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், திரு. மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்க இருக்கிறார்கள். இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் செயல்வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக, செயல் தலைவர்களாக பொறுப்பேற்க இருக்கிற இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன். தொண்டனாக இருந்த நான் தலைவராக பொறுப்பேற்கிற அவ்விழாவிலே ஆயிரக்கணக்கான தொண்டர்களுடைய அன்பையும், வாழ்த்துக்களையும் பெறுவதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களது வாழ்த்துக்களை பெறவும், அதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகமும், வலிமையும் உருவாக்கி புதிய சகாப்தம் படைக்க காங்கிரஸ் செயல்வீரர்களே, சத்தியமூர்த்தி பவனை நோக்கி அணி திரண்டு வாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.

(கே.எஸ். அழகிரி)

Leave a Reply