மத்தியில் பா.ஜ.க. ஆட்சி செய்த 2017 ஆம் ஆண்டுதான் முதன் முதலில் தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது – கே.எஸ் அழகிரி

21 June 2021

ஆளுநர் உரையை தமிழக அரசின் கொள்கை விளக்க உரையாகத் தான் கருத வேண்டும். மூலம்  முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு எத்தகைய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கப் போகிறது என்பதை ஆளுநர்  உரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழக ஆளுநரின் உரையை, வளர்ச்சிக்கான உரை என்ற முறையில் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கோவிட் தடுப்புப் பணிகள் தொய்வுற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்த போதே, திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்ற எல்லா பணிகளையும் விட கோவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரான பணிகளுக்கே முன்னுரிமை வழங்கியதை அனைவரும் அறிவார்கள். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடனே கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள வேண்டிய சவால் மிக்க பணியை மிகுந்த துணிவுடன் பல்வேறு உத்திகளைக் கையாண்டு இன்றைக்கு அதைக் கட்டுப்படுத்துவதில் சாதனைகள் புரிந்துள்ளதை எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது.

அதேபோல, தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே இருந்த தயக்கம் நீக்கப்பட்டு, தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழக அரசின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதேசமயம், தமிழகத்திற்குத் தடுப்பூசி வழங்குவதில் மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிற போக்கையும் காண முடிந்தது. இதையும் எதிர்கொண்டு தடுப்பூசி போடுகிற எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தமிழக அரசின் நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியவை.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று பொது நிவாரண நிதிக்கு 335 கோடி ரூபாய் பெற்றதே மிகப்பெரிய சாதனையாகும். இந்தப் பணியில் முதலமைச்சரின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் அளித்த ஒத்துழைப்பே, முதலமைச்சர் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரண தொகையை, இரண்டு தவணைகளாக மொத்தம்  8,393 கோடி ரூபாய் அளவுக்கு வழங்கியதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்த தமிழக முதலமைச்சரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு நோபல் பரிசு பெற்ற எஸ்தர் ட‡ப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட உலக அங்கீகாரம் பெற்ற பொருளாதார நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது மிகச் சரியான நடவடிக்கையாகும். இவர்களது ஆலோசனை தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த அ.தி.மு.க. ஆட்சி 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை வைத்து விட்டுச் சென்றுள்ளது. இதை எதிர்கொள்ள வேண்டிய கடுமையான பணி இன்றைய தமிழக அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில் சமூக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. இதை உரிய முறையில் எதிர்கொண்டு நிதி வருவாயைப் பெருக்கி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற சூழல் இருப்பதை ஆளுநர் அறிக்கை தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2014 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்படவில்லை. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி செய்த 2017 ஆம் ஆண்டுதான் முதன் முதலில் தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. அன்றைய அ.தி.மு.க. ஆட்சியால் அதைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையில் நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களின் எதிர்காலம் எத்தகைய பாதிப்பிற்கு உள்ளானது என்பதை அனைவரும் அறிவார்கள். இத்தகைய பாதிப்புகளை மதிப்பிடவும், அதிலிருந்து தமிழக மாணவர்களைப் பாதுகாக்கவும் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வைத் தடுக்கும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கே.எஸ். அழகிரி