நாடே துக்கத்தில் உள்ளது. இந்த சூழலில் இது ஏழாண்டு சாதனை அல்ல…ஏழாண்டு சோதனை!- கே.எஸ் அழகிரி

05 June 2021

கடந்த 15 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றின் முதல் அலையில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு எண்ணற்ற உயிர்களை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கொடிய நோயிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசின் சார்பாக ஒரேயொரு தடுப்பூசிகூட தயாரிக்க முடியாத நிலையில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்குக் காலம் தாழ்த்தி அனுமதி வழங்கியதால் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த  பிணங்களின் மீது நின்றுகொண்டுதான் 7 ஆண்டு சாதனைகளை பாஜக கொண்டாடி வருகிறது. இன்று நாடு இருக்கும்  நிலையில் 7 ஆண்டு சாதனையை  கொண்டாடுவதற்கு பாஜகவுக்கு என்ன உரிமை இருக்கிறது.

பொருளாதாரத்திலிருந்து சர்வதேச உறவுகள் வரை, சுகாதாரம் மற்றும் கல்வி முதல் பொருளாதாரத்தை நிர்வகிப்பது வரையிலான இந்த அரசாங்கத்தின் அழிவுகரமான மற்றும் சீர்குலைக்கும் மேதாவித்தனம் ஈடு இணையற்றது.

தலைமையின் தோல்வி, ஜனநாயக ஆளுமையின் தோல்வி, பொது அமைப்புகளின் ஒட்டுமொத்த தோல்வி, நீதித்துறையின் தோல்வி, ஒரு நபரிடம் அதிகாரக் குவியல், தோல்வியடைந்த மத்திய அமைச்சர்களின் கூட்டுப் பொறுப்பு, கொரோனா தடுப்பில் தவறான நிர்வாகம் ஆகியவை பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள்.

இதோடு, மக்களை வேதனையில் தள்ளிய 2020 பொது முடக்கத்தையும், 2021 இல் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறை, மருந்துத் தட்டுப்பாடு, ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு, வெளிச்சந்தையில் விற்கப்படும் மருந்துகள், கொரோனாவால் மருத்துவமனைகளுக்கு வெளியேயும், சாலையோரத்திலும், வாகனங்களிலும் வீடுகளிலும் மக்கள் இறந்து கொண்டிருப்பதையும் சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

கங்கையில் சடலங்கள் மிதக்கும் படங்களும், ஆறுகளில் ஆழமற்ற மணலில் புதைக்கப்பட்ட அன்புக்குரியவர்கள், இறந்த உடல்கள் வெளிவந்து நாய்களுக்கு உணவாகும் கொடுமை, தகனம் செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த உடல்கள் என, அத்துனை கொடுமைகளும் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், நாட்டையும் அரசையும் களங்கப்படுத்தும்  செயல் என்று எளிதாகக் கூறிவிட்டு அதனைக் கடந்து போகின்றனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பது, மருந்துகளின் பற்றாக்குறை, பெருமளவு உயிரிழப்பும், வாழ்வாதாரப் பாதிப்பும், மக்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் அதிகாரத்தைப் பயன்படுத்துவது…இவையெல்லாம் நம் வரலாற்றின் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

ஒருமித்த கருத்து இல்லாமல் தன்னிச்சையாக அதிகாரத்தைப் பயன்படுத்துவது, இந்தியாவைப் பெரும்பான்மை இந்து தேசமாக மாற்றுவது, முறையான திருத்தங்கள் இன்றி அரசியலமைப்பை மாற்றுவது, தேர்தல் ஆணையத்தை அரசாங்கத்தின் துணை துறையாக மாற்றுவது, தேவையில்லாத சென்ட்ரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்துக்கு அனுமதி அளித்து, அதனைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டுவதை மோடி அரசு பெருமையாக நினைக்கிறது.

2021 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியுடன் மோடி அரசின் 7 ஆண்டு ஆட்சி முடிந்த நிலையில், சூழ்ந்திருக்கும் இருளின் மத்தியில் நேர்மறையைப் பரப்ப முயற்சிகள் நடக்கின்றன.

நட்பு எனும் பாலங்களைப் பிரதமர் தகர்த்திருக்கிறார். ஒவ்வொரு பிரிவினரையும் விரோதப் போக்கிற்கு உட்படுத்தியுள்ளார். அனைத்து அரசு அமைப்புகளையும் தலைகீழாக மாற்றியுள்ளார்.

இந்தியாவை 4 வழிகளில் அவர் அழித்துள்ளார்… முதலாவதாக, சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் கொள்கைகளைச் செயல்படுத்தினார்.

இரண்டாவதாக, 2016 இல் பணமதிப்பிழப்பு, 2017 இல் ஜிஎஸ்டியை அமல்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளத்தைத் தகர்த்தது மற்றும் ஊடகங்களை அச்சுறுத்தி அமைதியாக்கியது.

மூன்றாவதாக, மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வந்ததும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மாநில அரசுகளைக் கவிழ்த்து கூட்டாட்சித் தத்துவத்தை அழித்தது, காஷ்மீருடனான நமது உறவை மாற்றி எழுதியது, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு சட்டங்கள் மூலம் பெரும்பான்மை இந்துக்களின் தேசமாக மாற்ற முயல்வது, ராமர் கோயில் விவகாரம்.

நான்காவதாக, தடுப்பூசிகளோடு சேர்த்து நாடாளுமன்றத்தையும் முடக்கியது, இந்து தேசம் என்பதை கார்பரேட் அந்தஸ்துக்கு உயர்த்துவது, 3 கருப்பு விவசாயச் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் திருத்தச் சட்டங்கள், இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு, கொரோனா தொற்றைத் தவறாக நிர்வகித்தது.

அரசியலமைப்பு மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களை அடிபணியச் செய்தல், செயலாக்க ஏஜென்ஸிகள் மற்றும் காவல் துறையை முற்றிலும் துஷ்பிரயோகம் செய்தல், நீதித்துறையை குறைமதிப்புக்குட்படுத்துதல், ஆயுதப்படைகளை அரசியல் மயமாக்குதல், ஆணவப் போக்கு மற்றும் பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல் செயல்படுவது, இரக்கமற்ற முறையில் எதிர்ப்புகளை நசுக்குவது, அரசாங்கத்துக்கு எதிரான குரல்களை ஒடுக்க, கோயபல்ஸ் அளவுக்குப் பொய்ப் பிரச்சாரம் செய்வது போன்ற செயல்கள் தான், அவரது அரசு பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய சாதனைகள்.

மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களில், அவர் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். தனியார்மயமாக்கல் மூலம் பொதுத்துறை வங்கி அமைப்புகளைச் சீர்குலைத்தார். தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் மூலம் தொழிலாளர் வர்க்கத்தைச் சீர்குலைத்தார். ஆயுர்வேத சிகிச்சை அளிப்பவர்களையும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளித்து, நவீன மருத்துவத்தைச் சீர்குலைத்தார். கடந்த காலங்களில் எந்த அரசும் செய்யாத வகையில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்க அனுமதித்தார்.

வங்கிகளை அன்னை இந்திரா காந்தி தேசியமயமாக்குவதற்கு முன்பு, பொது காப்பீட்டுக் கழகம் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடமிருந்து மத்திய அரசு கடன் வாங்கியது. தம் ஊழியர்களின் வளர்ச்சிக்காக அந்த நிதியைப் பயன்படுத்தியது. எதிர்காலத்திலும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் தொடர் நடவடிக்கையில் பிரதமர் வெற்றி பெற்றுள்ளார்.

சுகாதாரப் பாதுகாப்பு, பத்திரிக்கைச் சுதந்திரம், கல்வித் தரம், வெளிப்படைத்தன்மை,மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜனநாயக ஆட்சி, சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள், மத சுதந்திரம் உள்ளிட்ட மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் நாட்டின் தரவரிசை வீழ்ச்சியடைந்து, கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துள்ளது. தொற்றுநோயை மோசமாக நிர்வகித்தது மற்றும் எண்ணற்ற உயிரிழப்பு, ஜனநாயக விதிமுறைகளின் தோல்வி குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, நைஜீரியா, கென்யா மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளிடம் யாசகம் கேட்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுவிட்டது.

ஜனநாயக ஆட்சிக்கான தகுதியைப் பிரதமர் மோடி இழந்துவிட்டார். ஜனநாயக நிர்வாகத்தின் கருவிகளை அவர் மழுங்கடித்துவிட்டார். இப்போது தன் தேசத்தைக் கபளீகரம் செய்த கொரோனாவுக்கு எதிராகப் போரிட , பிரதமரின் கையில் இருக்கும் வில்லில் அம்புகள் இல்லை.

பிரதமரும் இந்த அரசாங்கமும் மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்ட சூழலில், நாடே துக்கத்தில் உள்ளது. இந்த சூழலில் கொண்டாடுவது ஏழாண்டு சாதனை அல்ல…ஏழாண்டு சோதனை!

(கே.எஸ்.அழகிரி)