08 June 2021
2020 ஏப்ரல் மாதம் தொடங்கி கடந்த திங்கட்கிழமை வரை கொரோனா தொடர்பாக 9 முறை நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார். இதற்கு முன்பு 8 முறை அவர் உரையாற்றியதில் எந்த பலனும் ஏற்படவில்லை. ஒவ்வொரு முறையும் மக்களை எச்சரிக்கும் பிரதமர் மோடி, தானே முன் எச்சரிக்கையாக இல்லாமல் தடுப்பூசி உற்பத்தியில் கோட்டை விட்டுவிட்டார். அதன் காரணமாக, இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து வருகிறோம்.
ஜூன் 21 ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தமது உரையில் இதுவரை நாடு முழுவதும் 23 கோடியே 18 லட்சம் பேருக்குத் தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதில் 4 கோடியே 51 லட்சம் பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி கூறுவது மாயாஜால வித்தை போலிருக்கிறது.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியதிலிருந்து மே 18 ஆம் தேதி வரை, 18 கோடியே 58 லட்சத்து 9 ஆயிரத்து 302 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த 123 நாட்கள் கால இடைவெளியில் தினமும் சராசரியாக 15 லட்சத்து 10 ஆயிரத்து 644 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் தடுப்பூசி போடுவதன் சராசரி மொத்த மக்கள் தொகையில் 0.12 சதவிகிதமாக இருக்கிறது. இது உலக அளவில் ஒப்பிடும்போது மிகக்குறைவாகும்.
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகவே, இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் போடுவதற்கான காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. தடுப்பூசி பற்றாக்குறையை மூடி மறைக்கவே இந்த கால நீடிப்பை மத்திய அரசு செய்துள்ளது. உற்பத்தியைப் பெருக்காமல், கொள்கை முடிவுகளை பிரதமர் மோடி அறிவித்து வருகிறார்.
ஏப்ரல் 23 ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட புதிய தடுப்பூசி கொள்கை பல்வேறு சர்ச்சைகளை எழுப்பின. இதை மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்தன. ஒரு தடுப்பூசிக்கு மூன்று விலையும், 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி போடுகிற பொறுப்பை மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டதும் கடும் விமர்சனத்திற்குள்ளானது. அகில இந்திய காங்கிரஸ் அறிவிப்பின்படி நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்ட பரப்புரை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்களால் பிரதமர் மோடி தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என்று அறிவித்திருக்கிறார். இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.
எனினும், தடுப்பூசிக் கொள்கையில் மத்திய அரசிடம் தொடர்ந்து தடுமாற்றம் தெரிகிறது. கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 3.3 சதவிகிதத்தினருக்கு தான் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்குவதிலும் மிகுந்த பாரபட்சத்தை மத்திய அரசு காட்டி வருகிறது. தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடத் தகுதியுள்ளவர்களில் 13.8 சதவிகிதத்தினருக்கு ஒரு டோஸூம், 3.6 சதவிகிதத்தினருக்கு இரண்டு டோஸூம் போடப்பட்டுள்ளன. ஆனால், தேசிய சராசரியாக ஒரு டோஸ் போட்டவர்கள் 20 சதவிகிதமும், இரண்டு டோஸ் போட்டவர்கள் 3.3 சதவிகிதமாக உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை தடுப்பூசி போடத் தயக்கமான நிலை இல்லாமல் அனைவரும் ஆர்வத்துடன் போட்டுக் கொள்ள முனைகின்றனர். ஆனால், மத்திய அரசு குறைவான தடுப்பூசிகளைத் தமிழகத்திற்கு ஒதுக்குவதால் தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
தட்டுப்பாடுகளைச் சமாளிக்க தமிழக அரசு வெளிநாடுகளில் கொள்முதல் செய்யும் முயற்சிகளுக்கு மத்திய அரசு உதவவில்லை. ஆனால், இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் 95 சதவிகிதத்தை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறது. இதைத் தவிர, தமிழ்நாடு அரசு தமது நிதியிலிருந்து 13 லட்சம் டோஸ் கொள்முதல் செய்து மக்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்கிறது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் வழங்கியதை விட, மே மாதத்தில் 30 சதவிகிதம் குறைவாக அதாவது, 19.7 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தான் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியிருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகிற போது, தமிழகத்திற்கு மிகக் குறைந்த அளவிலேயே தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியதை விட, மற்ற மாநிலங்களில் தடுப்பூசி போடத் தகுதியுள்ளவர்களில் மே 1 ஆம் தேதி நிலவரப்படி 18.12 சதவிகிதத்தினருக்கு வழங்கியிருக்கிறது. இது தமிழகத்திற்கு வழங்கியதை விட 6 சதவிகிதம் அதிகமாகும். ஜூன் 4 ஆம் தேதி நிலவரப்படி மற்ற மாநிலங்களுக்கு வழங்கியதில் 8 சதவிகிதம் அதிகரித்து மொத்தம் 26.29 சதவிகிதமாக கடுமையாக உயர்ந்திருக்கிறது. இந்த புள்ளி விவரங்களைப் பார்க்கிற போது மே, ஜூன் மாதங்களில் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிற தடுப்பூசி எண்ணிக்கையை விடத் தமிழகத்திற்கு மிகமிக குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தான் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 17.5 சதவிகிதத்தினருக்கு தான் முதல் டோஸ் தடுப்பூசி தமிழகத்தில் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி போடப்படுகிற எண்ணிக்கையை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் மிகுந்த அதிர்ச்சி தான் ஏற்படுகிறது. இதில் 6.37 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத் மாநிலத்தில் 29.4 சதவிகித மக்களுக்குத் தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் 13.9 சதவிகித மக்களுக்குத் தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மோடி அரசின் அப்பட்டமான பாரபட்ச போக்கையே வெளிப்படுத்துகிறது. பொதுவாக, மத்திய பா.ஜ.க. அரசு தடுப்பூசியை மாநிலங்களிடையே விநியோகிப்பதில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது என்கிற வெளிப்படைத் தன்மையில்லாமல் செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று போன்ற கொடிய நோய் மக்களை வாட்டுகிற போது, மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையிலும், தொற்று எண்ணிக்கை அடிப்படையிலும் தான் தடுப்பூசி பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டுமே தவிர, அரசியல் பாகுபாடு காட்டுவதன் மூலம் பிரதமர் மோடி கூட்டாட்சி கொள்கைகளுக்கு விரோதமாகவும், அரசியல் பாகுபாட்டோடும் நடந்து கொள்கிறார் என்று குற்றம்சாட்ட விரும்புகிறேன். இத்தகைய அணுகுமுறையைப் பிரதமர் மோடி உடனடியாக கைவிட்டு, தடுப்பூசி விநியோகம் செய்வதில் தமிழகத்திற்கு நியாயம் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
கே.எஸ். அழகிரி