01/11/2025 அறிக்கை
பீகார் மாநில தேர்தல் பரப்புரையின் போது அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கில் தமிழர்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்துகிற வகையில் பேசியதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடுமையான எதிர்ப்பு வெளிப்படுத்தியதை மடைமாற்றம் செய்ய பிரதமர் மோடி வரலாற்று திரிபு வாதங்களை செய்திருக்கிறார். பீகாரில் பேசியதற்கு மாறாக, அகமதாபாத்தில் வல்லபாய் படேல் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவில் பேசும் போது உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி இந்தியாவில் இருப்பதில் நமக்கு பெருமை என்று பேசியிருக்கிறார். அன்னை சோனியா காந்தியின் ஆலோசனையின்படியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பரிந்துரையின்படியும் 2004 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது. அறிவிக்கப்பட்டவுடன் தமிழ் மொழிக்கு இந்திய மொழிக்கான வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 113.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் தமிழ் மொழி உள்ளிட்ட தென்னக மொழிகளை புறக்கணிக்கப்பதோடு, நிதி ஒதுக்கீடு செய்வதிலும் அப்பட்டமான பாரபட்சத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு கடைபிடித்து வருகிறது.
பீகாரில் பேசியதை சரிகட்டுகிற வகையில் அகமதாபாத்தில் தமிழ் மொழி மீது பாசத்தை பொழிகிற நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த 2014 முதல் 2025 வரை தமிழ் உள்ளிட்ட 5 தென்னிந்திய மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 140 கோடி. அதேநேரத்தில் 24,000 பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு ரூபாய் 2532 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 17 மடங்கு அதிகமாகும். கடந்த 11 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 230.24 கோடி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனால், 5 மொழிகளுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகிற தொகை ரூபாய் 13.41 கோடி மட்டுமே. இதன்மூலம் தென்னிந்திய மொழிகள் வஞ்சிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய தமிழ் விரோத போக்கை கையாண்டு வருகிற நரேந்திர மோடி, தமிழ் மொழி மீது பாசத்தை பொழிவதை விட அரசியல் சந்தர்ப்பவாதம் வேறு எதுவும் இருக்க முடியாது.
அரசமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இவை இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட மக்கள் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட அமைதியான சூழல் நிலவுகிற போது, சாதி ரீதியாக, மத ரீதியாக, இன ரீதியாக மக்களிடையே பிரிவினையை வளர்ப்பது, தமிழர்களுக்கும், பீகார் மக்களுக்கும் இடையே பகையை உண்டாக்குகிற கீழ்த்தரமான அரசியலை பா.ஜ.க.வின் நான்காம் தர அரசியல் தலைவர்கள் செய்திருந்தால் அதை புறக்கணித்து விடலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து மாநிலங்களையும் சமமாக கருத வேண்டிய ஒரு பிரதமர் இப்படி இரு மாநில மக்களிடையே மோதல் போக்கை வளர்க்கிற வகையில் கருத்துகள் கூறுவது அவர் வகிக்கிற பிரதமர் பதவிக்கு மிகப்பெரிய இழிவாகும்.
அதேநேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பீகார் மற்றும் வடஇந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக இங்கே வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தமிழர்களோடு, தமிழர்களாக எவ்வித பேதமுமின்றி மகிழ்ச்சியாக தங்களது பணியை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 2.47 லட்சம் பேர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுடைய வேலை வாய்ப்பில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்பட்டதில்லை. ஆனால், அதற்கு மாறாக, பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசுவதைவிட ஒரு கோயபல்ஸ் பிரச்சாரம் வேறு எதுவும் இருக்க முடியாது.
தமிழ் மொழியின் மீது பாசத்தை காட்டுகிற பிரதமர் மோடி, தேசிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் ஆகியவற்றில் மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தி புகுத்தப்படுவதை தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. அதனால், தமிழக கல்வித்துறைக்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூபாய் 2152 கோடி வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. மும்மொழி திட்டத்தை ஏற்றுக் கொண்டால் தான் நிதி ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆணவத்தோடு கூறுகிறது. இதனால், தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு இதுவரை நியாயம் வழங்க முற்படாத நிலையில் தமிழ் மொழியைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதியிருக்கிறது ?
எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நலன் தருகிற திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்காமலும், தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பதாலும் தமிழர்களை வஞ்சிக்கிற பிரதமர் மோடியின் பாசாங்கு பேச்சுக்களை தமிழக மக்கள் ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தியாவிலேயே நரேந்திர மோடி எதிர்ப்பு அலை வீசுகிற முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை ஆயிரம் நரேந்திர மோடிகள் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.
(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)