99 கோடி வாக்காளர்களை கொண்ட உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இங்கே நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை நடத்துவது அரசமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணையம். பா.ஜ.க. ஆட்சி அமைவதற்கு முன்பாக தலைமை நீதிபதி உள்ளிட்ட மூவர் குழு இந்திய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது. ஆனால், உச்சநீதிமன்ற ஆணையை உதாசீனப்படுத்துகிற வகையில் தலைமை நீதிபதியை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரை சேர்த்து அமைக்கப்பட்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது.

04/09/2025 அறிக்கை

99 கோடி வாக்காளர்களை கொண்ட உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இங்கே நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை நடத்துவது அரசமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணையம். பா.ஜ.க. ஆட்சி அமைவதற்கு முன்பாக தலைமை நீதிபதி உள்ளிட்ட மூவர் குழு இந்திய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது. ஆனால், உச்சநீதிமன்ற ஆணையை உதாசீனப்படுத்துகிற வகையில் தலைமை நீதிபதியை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரை சேர்த்து அமைக்கப்பட்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது. இதிலிருந்து தேர்தல் ஆணையம் என்பது பா.ஜ.க.வின் கைப் பாவையாக செயல்பட தொடங்கியது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் எதுவாக இருந்தாலும் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது என்ற குற்றச்சாட்டை உறுதி செய்கிற வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். இதன்பிறகு, தேர்தல் ஆணையம் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. இது இந்திய ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய தலைவர் ராகுல்காந்தி, ஐந்து வகையான வாக்கு திருட்டுகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டினார். அதன்படி, போலி வாக்காளர்கள், போலி முகவரிகள், ஒரே முகவரியில் போலி வாக்காளர்கள், செல்லாத போலி புகைப்படங்கள், படிவம் 6 முறைகேடு எனக் கூறி அதற்குரிய ஆதாரங்களை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய பதிலை இன்றுவரை தெரிவிக்கவில்லை. முறைகேடுகளை அறிந்து கொள்வதற்கு வாக்காளர் பட்டியலை மின்னணு வடிவத்தில் கேட்டால் தேர்தல் ஆணையம் வழங்க மறுக்கிறது. அப்படி செய்தால் 30 வினாடிகளுக்குள் அவர்கள் செய்து வைத்திருக்கும் மோசடிகள் அம்பலப்பட்டு விடும் என்பதால் அதை வெளியிட மறுக்கின்றனர்.

இந்திய ஜனநாயகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உரிமையாக உள்ள ஒரே ஆயுதம் வாக்குரிமை தான். அந்த வாக்குரிமை அவர்களின் கண் முன்னே பறிக்கப்பட்டு வருகிறது. மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் மிகப்பெரிய மோசடி செய்து தான் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. சமீபத்தில் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியிருக்கிறது. இதை எதிர்த்துத் தான் நாடாளுமன்ற முகப்பில் நாள்தோறும் இந்தியா கூட்டணிக் கட்சியினர் இதுகுறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி சமீபத்தில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் வாக்காளர் உரிமை பயணத்தை பீகார் மாநிலத்தில் மக்களின் பேராதரவோடு நடத்தியிருக்கிறார். பீகார் மாநிலத்தில் 25 மாவட்டங்கள், 110 சட்டமன்றத் தொகுதிகள் என 16 நாட்களில் 1300 கி.மீ. தூர பயணத்தை மேற்கொண்டு பீகார் மாநில வரலாற்றில் இல்லாத அளவிற்கு தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை அம்பலப்படுத்தி பரப்புரை மேற்கொண்டிருக்கிறார். இதில் இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருக்கிறார்கள்.

பீகாரில் நடைபெற்ற வாக்காளர் உரிமைப் பயணம் இந்தியாவில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் தேர்தல் ஆணையத்தை கண்டிக்கின்ற வகையில் நிறைவு பெற்றிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ், தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடிகள் குறித்து மக்களிடையே தீவிர பரப்புரையை மேற்கொள்கிற வகையில் மாநில அளவில் மாநாடு நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டது. இதன்படி, தமிழ்நாட்டில் மாநில அளவிலான மாநாடு, வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி திருநெல்வேலியில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

தலைவர் ராகுல்காந்தி அவர்கள், தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை அம்பலப்படுத்துகிற முயற்சிகளுக்கு வலிமை சேர்க்கிற வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணிதிரண்டு வர வேண்டுமென அன்போடு அழைக்கிறேன். இப்பணியை சிறப்பாக செய்து முடிக்க மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டுமென விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியினரின் வருகையினால் நெல்லையே திணறியது என்கிற வகையில் வரலாறு படைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். ஜனநாயகம் இருக்க வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நேர்மையாக இருக்க வேண்டும். இன்றைக்கு தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் மோசடிகளுக்கு துணை போகிற ஆணையமாக மாறிவிட்டதால், ஜனநாயகத்தை காப்பாற்றுகிற பெரும் முயற்சியில் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டிருக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற உங்களைக் காண நெல்லையில் ஆவலுடன் காண காத்திருக்கிறேன். காங்கிரஸ் தோழர்களே அணி அணியாகத் திரண்டு வாருங்கள்.

(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)