04/12/2025 அறிக்கை
இந்திய விடுதலைப் போராட்டத்தில் 9 ஆண்டுகள் சிறைவாசமும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 12 ஆண்டுகளும், தமிழ்நாடு முதலமைச்சராக ஒன்பதரை ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி செய்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் பெருந்தலைவர் காமராஜர். வேட்டி கட்டிய தமிழர்கள் எவரும் சாதிக்க முடியாத சாதனைகளை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று இரண்டு பிரதமர்களை மூன்றுமுறை தேர்வு செய்த பெருமை பச்சைத் தமிழர் காமராஜருக்கு உண்டு.
தமிழகத்தில் எந்த சொத்தும் இல்லாதவர்களுக்கு இலவச கல்வி என்ற சொத்தை வழங்கி வாழ்க்கையை உயர்த்தியவர். தமிழ்நாட்டிற்கே ஈடு இணையற்ற பெருமைகளை வழங்குவதற்கு தமது அரசியல் வாழ்க்கையில் நேர்மை, எளிமை, தூய்மையை கடைபிடித்து வாழ்ந்தவர். கர்மவீரர் காமராஜர் என்ற மாமனிதரை மை இந்தியா 24×7 என்ற யூடியூப் சேனல் நடத்துகிற முக்தார் அகமது என்பவர் இழிவாக ஆதாரமற்ற அவதூறு கட்டுக்கதைகளை கூறி கேவலப்படுத்தியிருப்பதை தமிழக மக்கள் எவராலும் சகித்துக் கொள்ள முடியாது.
தமது வாழ்க்கையை திறந்த புத்தகமாக அமைத்துக் கொண்ட பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திய முக்தார் அகமதுவை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் எவரையும் கீழ்த்தரமாக இழிவுபடுத்துகிற போக்கு சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடே போற்றி புகழ்ந்த மகத்தான தலைவரை இழிவுபடுத்தியவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)