06/08/2025 தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டதிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை முடக்குகின்ற வகையில் நாள்தோறும் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் மாளிகையை தமிழக பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக மாற்றி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்.-இன் நச்சுக் கருத்துகளை பரப்புகின்ற ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக பத்திற்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் முடக்கி வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது. இதன்மூலம் ஆளுநரின் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடப்பட்டது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால நிர்ணயம் செய்து ஆணை பிறப்பித்தது மாநில உரிமைகளை பாதுகாக்கின்ற நடவடிக்கையாக கருதப்பட்டு நாடு முழுவதும் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த தீர்ப்பை உதாசீனப்படுத்துகின்ற வகையில் கலைஞர் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி அளிக்காமல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் கலைஞர் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்ற சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வாழும் மாணவர்களின் மேம்பாட்டிற்காக கலைஞர் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட உள்ளது. கருணாநிதி பெயரிலான பல்கலைக் கழகத்தின் வேந்தராக முதலமைச்சரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் அந்த சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற செயலாகும். இது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கின்ற நடவடிக்கையாகும். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டாலும் அனுமதி கிடைக்கவில்லை.
இனி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்து ஆளுநருக்கு மறுபடியும் புத்தி புகட்டுகின்ற வகையில் ஆணையை பெறுவதன் மூலமே மாநில உரிமைகளை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு விதித்திருந்தது. இந்த கால தாமதம் மீறப்பட்டதால் தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)
(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)
(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)