இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க.வுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக வருகிற திங்கட்கிழமை 11.8.2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக 11.8.2025 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

08/08/2025 அறிக்கை

தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பா.ஜ.க. தொடர்ந்து முறைகேடுகளை நிகழ்த்தி வெற்றி பெற்று வருவதை தலைவர் ராகுல்காந்தி ஆதாரங்களுடன் நேற்று தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். கர்நாடகாவில் ஒரே சட்டப்பேரவை தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்ப்பு, ஒரே அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள், ஒரே வாக்காளருக்கு 4 வாக்குச்சாவடியில் ஓட்டு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் வெளியிட்டார்.

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இருப்பினும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் அதிருப்தி அடைந்த எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை குறித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களை தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சந்தித்த ராகுல்காந்தி அவர்கள் பெங்களுர் மத்திய மக்களவை தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பா.ஜ.க. வேட்பாளரிடம் 32,707 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதி உட்பட கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி எடுத்த கணக்கின்படி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஒன்பது தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நடத்திய ஆய்வில் பெங்களுர் மத்திய தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டப்பேரவை தொகுதியில் மிகப்பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பேரவை தொகுதியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதனால் அந்த தொகுதியில் மட்டும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 46 வாக்குகளை பா.ஜ.க. அதிகம் பெற்றிருக்கிறது. இத்தகைய மோசடிகளின் மூலமே கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதை ராகுல்காந்தி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். இதன்மூலம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு துணை போயிருப்பதை ராகுல்காந்தி உறுதிபடுத்தினார்.

அதேபோல, மகாராஷ்டிராவில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் 1 கோடி போலி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருப்பதாக புள்ளி விவரத்தையும் வெளியிட்டார். உண்மையான வாக்காளர்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கினால் 30 விநாடிகளில் போலி வாக்காளர்களை கண்டுபிடித்து விடலாம் என்றும், ஆனால், பா.ஜ.க. சார்புடைய தேர்தல் ஆணையம் அதை வழங்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தான் போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதுவரை தேர்தல்கள் நடைபெற்ற அனைத்தும் அரசியல் சாசனத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம் என்றும், இதற்கு தேர்தல் ஆணையம் உரிய தீர்வினை காண வேண்டுமென்றும் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டார். இதன்மூலம் கிரிமினல் குற்றங்களை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. பா.ஜ.க.விற்காக தேர்தல் ஆணையம் செய்த முறைகேடுகளை கண்ணாடி போல் தௌ;ளத் தெளிவாக, துல்லியமாக ஆதாரங்கள் கொடுத்த பிறகு, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பதிலளித்த தேர்தல் ஆணையம் பிரமாணம் எடுத்து இந்த குற்றச்சாட்டை கூறினால் இதுகுறித்து விசாரிப்போம் என்று கூறுகிறது. ஆனால், தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக தொலைக்காட்சி ஊடகங்கள் முன்பு கூறிய பிறகு இத்தகைய சொத்தையான வாதத்தை கூறுவது பிரச்சினையை திசைத் திருப்புகின்ற செயலாகும்.

கடந்த காலங்களில் தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட ஆணையர்களை தேர்வு செய்வதற்காக தேடுதல் குழுவில் பிரதமர், எதிர்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்து வந்தது. இதன்மூலம் ஆட்சியாளர்களின் தலையீடு தவிர்க்கப்பட்டது. அதற்கு பிறகு இந்த அணுகுமுறையை மாற்றி பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் என தேடுதல் குழுவை அமைத்து இந்திய தலைமை நீதிபதியை பா.ஜ.க. அரசு நீக்கி விட்டது. இந்த முறை 2022 இல் அரசமைப்புச் சட்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிரானது. இதை எதிர்த்து 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு வழக்கு தொடுத்த போது உச்சநீதிமன்றம் பா.ஜ.க.வின் தேடுதல் குழுவுக்கு தடை விதிக்கவில்லை. இதன்மூலம் பா.ஜ.க.வுக்கு வேண்டியவர்களை தேர்தல் ஆணையர்களாக நியமித்ததன் காரணமாகவே இத்தகைய முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

எனவே, தேர்தல் ஆணைய முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தின் முகப்பில் இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்துகிற தொடர் போராட்டத்தை பா.ஜ.க. அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. தேர்தல் ஆணைய தேடுதல் குழு, அதேபோல தற்போது பீகாரில் நடைபெறும் வாக்காளர்கள் பெயர் நீக்கம் ஆகியவற்றுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடும். தலைவர் ராகுல்காந்தி கூறியதைப் போல தேர்தல் ஆணையம் செய்கிற இன்றைய முறைகேடுகளுக்கு உரிய கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன்.

ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்கிற மனோபாவம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க., மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் தொடர்ந்து வெற்றி பெறுவதில் மிகப்பெரிய மோசடியை செய்வதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருப்பதால் தான் பா.ஜ.க. தொடர்ந்து வெற்றிகளை பெற முடிகிறது. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தலைவர் ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு கிடைக்கிற வரை ஜனநாயகத்தை காக்கும் போராட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் தான் பாரபட்சமற்ற தேர்தல் நடைபெற்று இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தோலுரித்துக் காட்டிய இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க.வுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக வருகிற திங்கட்கிழமை 11.8.2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக 11.8.2025 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டங்களில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்புமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)

(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)

(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)