தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்புகளை கண்டறிந்து, மாநில அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை – 05-Nov-2022

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் உணராத காரணத்தால் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினால் நிகழ்ந்த உயிரிழப்புகளும், பாதிப்புகளும் வார்த்தைகளால் வடிக்க இயலாது. அன்றைய அ.தி.மு.க. அரசிடம் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் கடந்த காலங்களில் ஏற்பட்டன. இதிலிருந்து உரிய படிப்பினையை பெற்று அத்தகைய பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில், கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால், மிகுந்த நிதி நெருக்கடிகளுக்கிடையே பொறுப்பேற்ற திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்த காரணத்தால், தற்போது பெருமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை பெய்கிற போது மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சென்னை மாநகராட்சி மூலம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் பல்வேறு போக்குவரத்து இடர்பாடுகளுக்கிடையில் முழு வீச்சில் நடைபெற்றன. ஏறத்தாழ 220 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 157 கி.மீ. தூரத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டதால் மக்கள் பாதிப்புகளிலிருந்து பெருமளவில் பாதுகாக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த சில நாட்களில் 55.96 மி.மீ. மழை பெய்துள்ளது. தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு நூற்றுக்கணக்கான நீர் இரைப்பான்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்யப்பட்டுள்ளன.

தேசிய மற்றும்  தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து செயலாற்றியதால் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள 1070 என்கிற இலவச தொலைபேசி அழைப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளன. கடந்த 48 மணி நேரத்தில் சென்னை மாநகரில் 90 சதவிகித மழைநீர் வெள்ள பாதிப்புகள் அகற்றப்பட்டிருப்பதை பாராட்டுகிறேன். இத்தகைய பணிகளை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே நிகழ்த்துவதில் முன்னணிப் பங்கு வகித்த தமிழக அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பணிகளும் மிகுந்த போற்றத்தக்க முறையில் அமைந்திருந்தன. இதற்காக அனைவரையும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு தமிழக முதலமைச்சர் உயர்மட்ட அளவில் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்ததால்  கடும் மழைநீர் பாதிப்புகளிலிருந்து மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதற்காக தமிழக அரசை அனைத்து மக்களும் பாராட்டி, மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டாரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு குறிப்பாக, விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு ஆளாகியுள்ளனர். சிதம்பரம் சுற்று வட்டார டெல்டா பாசன விளை நிலங்களில் தற்போது நடைபெறுகிற சம்பா நடவுப் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பல்வேறு கிராமங்களில் உள்ள நெல் வயல்களில் வெள்ளம் புகுந்து நடவு மற்றும் நாற்றங்காலில் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கி நாசமடைந்துள்ளன. சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற் பயிர்கள் மட்டுமின்றி நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் முழுவதுமாக அழுகி போயிருக்கிறது. நடவு நட்டு 20 நாட்கள் ஆனபிறகு நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்புகளை கண்டறிந்து, மாநில அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கடலூர் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகத்தினர் முழு வீச்சில் உரிய நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும். மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. கடந்த 10 நாட்களாக பெய்து வருகிற கனமழை காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும், ஈரப்பதம் உள்ள, மகசூல் செய்யப்பட்ட நெல்லை வாங்குவதற்கு அரசு கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

– தலைவர் திரு கே.எஸ். அழகிரி