காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதை முழுமையாக நிதி ஒதுக்கி நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு தொடக்கத்திலிருந்தே புறக்கணித்து வந்தது. அதற்கான நிதியும் குறைக்கப்பட்டது. கடந்த

12/08/2025 அறிக்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு வழங்குவதற்காக தேசிய ஊரக வேலை வாய்ப்பு சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டு ஆண்டுக்கு 100 நாள் வேலை உறுதி செய்யப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்ற பெயரில் மொத்த மக்கள் தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கிற 65 சதவிகித மக்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டது. இத்திட்டத்தினால் பட்டியலின மக்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் மேம்பாடு ஏற்பட்டது. ஆனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதை முழுமையாக நிதி ஒதுக்கி நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு தொடக்கத்திலிருந்தே புறக்கணித்து வந்தது. அதற்கான நிதியும் குறைக்கப்பட்டது. கடந்த 2024-25 இல் ஒதுக்கப்பட்ட அதே ரூபாய் 86,000 கோடி தான் 2025-26 ஆம் ஆண்டிலும் ஒதுக்கப்பட்டது. பெருகிவரும் வேலை வாய்ப்பின்மையை குறைப்பதற்கான முயற்சி நிதி ஒதுக்கலில் காட்டப்படவில்லை.

இதையொட்டி, ஊரகத்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு 100 நாள் வேலை திட்டத்தில் நிதி ஒதுக்காததை தனது அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த அறிக்கையில் 2024-25 இல் ஒன்றிய அரசு ஊதியமாக ரூபாய் 12,219.18 கோடியும், உபகரணங்கள் வகையில் ரூபாய் 11,227.09 கோடியும் மாநிலங்களுக்கு தராமல் நிலுவையில் இருக்கிறது. இது நடப்பு பட்ஜெட் தொகையில் 27.26 சதவிகிதமாகும். அதாவது, மொத்த ஒதுக்கீட்டில் நான்கில் ஒரு பங்கு கடந்த ஆண்டு நிலுவைத் தொகைக்காக நடப்பாண்டு பட்ஜெட் தொகையில் செலவிட வேண்டிய நிலை உள்ளது. அதனால், நடப்பாண்டு பட்ஜெட் தொகை ரூபாய் 86,000 கோடியிலிருந்து ரூபாய் 62,553.73 கோடியாக குறைந்து விட்டதாக நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து 2024-25 ஆம் ஆண்டு நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்பதோடு, 2025-26 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 86,000 கோடியிலிருந்து கடந்த ஆண்டு நிலுவைத் தொகையை செலவிடக் கூடாது என அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த ஆண்டு நிலுவைத் தொகையை வழங்குவதாக தெரியவில்லை. இந்த போக்கு 100 நாள் வேலை திட்டத்தால் பயனடைகிற கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, நுகர்வு செலவினங்களில் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கடுமையான ஏற்றத்தாழ்வு இருக்கிறது. கிராமப்புற நுகர்வு செலவை விட, நகர்ப்புறங்களில் வாழ்கிறவர்களின் தனிநபர் செலவு 71 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது கிராமப்புற மக்களின் வாழ்வாதார நிலையை சுட்டிக் காட்டுகின்றன. அதேபோல, கிராமப்புற மக்களின் கடன் தொகை 2016 முதல் 2021 வரை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்படி, சராசரி கடன் ரூபாய் 91,231 ஆக உள்ளது. இதற்கு காரணம், கிராமப்புறங்களில் விவசாயத்தை தவிர, வேறு வகையான வருமானம் கடுமையாக குறைந்து வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் கூட 2024-25 ஆம் ஆண்டில் 4 சதவிகித குடும்பங்களுக்கு தான் முழுமையாக 100 நாள் வேலை கிடைத்திருக்கிறது. இது காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தின்படி வேலை கேட்பவர்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்குவது சட்ட உரிமையாகும். இதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உரிய நிதி ஒதுக்காத காரணத்தால் சட்டத்தின் பலன்கள் கிராமப்புற மக்களுக்கு செல்லக்கூடிய நிலை இன்றைக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு விலைவாசியின் அடிப்படையில் 100 நாள் வேலை திட்டத்தில் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் அனைத்து மாநிலங்களுக்கும் செய்யப்பட்டிருக்கிறது. அதில் தமிழ்நாட்டிற்கு ஒரு நாள் ஊதியம் ரூபாய் 319 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், சராசரியாக ரூபாய் 276 தான் ஒரு நாள் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதற்கு காரணம், ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்காதது தான். இந்த அவலநிலையைத் தான் நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையின் மூலம் ஒன்றிய அரசிற்கு அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியை ஒதுக்காமல் புறக்கணிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எனவே, உடனடியாக 2024-25 ஆம் ஆண்டு நிலுவையில் உள்ள தொகையை தனி நிதியாக ஒதுக்கி, நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட ரூபாய் 86,000 கோடியை மாநிலங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறேன்.

(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)

(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)

(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)