14/10/2025 அறிக்கை
ஹரியானா மாநில காவல்துறை அதிகாரி ஒய். புரன்குமார் பணியின் காரணமாக கொடுக்கப்பட்ட மனஅழுத்தத்தின் விளைவாக தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. இந்த செய்தி வெளிவந்தவுடனே மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, 11 பக்க கடிதத்தை எழுதி அதில் பத்திற்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் தான் அவரது இறப்பிற்கு காரணம் என்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானா முதலமைச்சர் ஆகியோர் உரிய விசாரணை நடத்தி தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒய். புரன்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் தலித் சமுதாயத்தினருக்கு எதிராக கடுமையான தாக்குதல்களும் அடக்குமுறைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறையில் உயர் பொறுப்பில் தலித் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் தொடர்ந்து பணி செய்ய முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. இத்தகைய நிகழ்வு நடைபெறுவதற்கு காரணம், பா.ஜ.க. ஆட்சியில் தலித் சமுதாயத்திற்கு எதிரான சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதிகரித்து வருவதால் இத்தகைய தற்கொலைகள் நிகழ்கின்றன. இத்தகைய கொடூரமான இழப்பிலிருந்து தலித் சமுதாயத்தினரை காப்பாற்றுகிற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்துகிறோம்.
தற்கொலை செய்து கொண்ட காவல்துறை அதிகாரி ஒய். புரன்குமார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)