அறிக்கை 26 August 2022
டெல்லியில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், வழக்கம் போல் வகுப்புவாத விஷத்தை கக்கி தன்னை தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரராக காட்டியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. திருக்குறளில் ஜி.யு. போப் அளித்த மொழிபெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக போகிற போக்கில் பொய்யான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். அதோடு, அனைத்துக்கும் பொதுவான ஆதிபகவன் என்ற வார்த்தையையும் தவிர்த்துள்ளதாக கூறியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டு எவ்வளவு பொய் என்பதை, ஆரம்பப்பள்ளியில் படிக்கும் நம் குழந்தைகளை கேட்டாலே புரியும்.
திருக்குறளில் மாற்றம் செய்யப்பட்டதாக இதுவரை யாரும் கூறியதில்லை. பரிமேலழகர், மு. வரதராசனார், முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் திருக்குறளுக்கு பொழிப்புரை எழுதியிருக்கிறார்கள். குறளை மாற்றியோ, திரித்தோ யாரும் எழுதவில்லை என்பதே உண்மை. 2014 ஆம் ஆண்டு வரை, 82 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் 57 மொழிபெயர்ப்புப் பதிப்புகள் கிடைக்கின்றன. இதுவரை திருக்குறள் மொழிபெயர்ப்பு திரிக்கப்பட்டதாக எந்த குற்றச்சாட்டும் எழுந்ததில்லை.
தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் நோக்கத்தில் கனடாவில் பிறந்து தமிழகத்தில் 40 ஆண்டுகள் வாழ்ந்து திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்கள். அதேபோல, இத்தாலி நாட்டில் பிறந்த கிறிஸ்தவ போதகர் வீரமாமுனிவர் தமிழகத்திற்கு வருகை புரிந்து 23 நூல்களை தமிழில் எழுதியுள்ளார். தமிழின் சிறப்பை மேல்நாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார். இவர் வெளியிட்ட தமிழ் – லத்தின் அகராதி தான் முதல் தமிழ் அகர முதலி. வெளிநாட்டில் பிறந்த ஜி.யு. போப், வீரமாமுனிவர் போன்றவர்கள் தமிழுக்கு செய்த அரும் பணியை போல ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத, சனாதன கொள்கையை கொண்ட எவராது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு கடுகளவு பணியை செய்திருக்கிறார்களா ? இதையெல்லாம் தமிழக ஆளுநர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எதையும் ஆராய்ந்து அறியாமல் யாரோ சொன்னதை வைத்துக் கொண்டு அவசர கோலத்தில் கருத்துகளை கூறுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை ஏற்றதிலிருந்து, தன் ஆர்.எஸ்.எஸ். முகத்தை வெளிப்படையாகவே காண்பித்துக் கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி. அதன் தொடர்ச்சியாகவே ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு திருத்தப்பட்டதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். இப்படி பொய்யும் புரட்டும் பேசும் ஒருவர் மாநில மக்களின் நலனில் அக்கறை காட்டுவார் என்று எதிர்பார்க்க முடியாது.
தமிழகத்தின் நலன்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே தொழிலாக கொண்டுள்ள ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார்களின் ஊதுகுழலாகவே செயல்பட்டு ஆளுநர் பதவிக்கு இழுக்கை ஏற்படுத்திக் கொண்டிருப்பது அரசியல் சாசனத்துக்கே அவமானமாகும். நீட் மசோதா முதல் துணைவேந்தர்கள் நியமனம் வரை முட்டுக்கட்டை போட்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படும் ஆர்.என்.ரவி, தற்போது வகுப்புவாதத்தை கையில் எடுத்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை பாராட்ட மனமில்லை என்றாலும், குறைந்தபட்சம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். அப்படி இழிவுபடுத்துகிற பணியை தமிழக ஆளுநர் தொடருவாரேயானால் தமிழ் மக்களின் கடும் சீற்றத்திற்கு அவர் ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன். தமிழர்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள். ஆனால், தமிழர்களுடைய பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம் ஆகியவற்றை இழித்து பேசுகிறவர் தமிழக ஆளுநராகவோ அல்லது வேறு எவராகவோ இருந்தாலும் தமிழ் மக்கள் பொங்கி எழுவார்கள் என எச்சரிக்க விரும்புகிறேன்.
எனவே, தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த அறிஞர் பெருமக்களை கொச்சைப்படுத்துகிற ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய போக்கை அவர் தொடருவாரேயானால் தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து அவர் விலக வேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்.
கே.எஸ். அழகிரி