26/08/2025 அறிக்கை
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி செய்து வருகிற 11 ஆண்டு காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறாமல் எதிர்கட்சிகள் முடக்கி வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால், நாடாளுமன்ற செயல்முறைகளை பார்க்கிற போது இக்குற்றச்சாட்டில் கடுகளவு கூட உண்மையில்லை. சமீபத்தில் பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டுப் போயிருப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று இந்தியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைத்து நாள்தோறும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அதற்கு பா.ஜ.க. இசைவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் எதிர்கட்சிகள் இக்கோரிக்கையை மக்களவையில் எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்ந நிலையிலும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் அவர்கள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார்.
மக்களவை செயல்பாடுகள் குறித்து பி.ஆர்.எஸ். அமைப்பின் நாடாளுமன்ற ஆராய்ச்சி ஆய்வின்படி கடந்த கூட்டத் தொடரில் 32 நாட்களில் 21 நாட்கள் நடந்து 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மக்களவை 29 சதவிகிதமும், மாநிலங்களவை 34 சதவிகிதமும் தான் செயல்பட்டிருக்கிறது. இது 18-வது மக்களவை காலத்தில் மிகமிக குறைவானதாகும். மேலும், மக்களவையில் 8 சதவிகிதமும், மாநிலங்களவையில் 5 சதவிகிதமும் குறியிடப்பட்ட கேள்விகளுக்கு தான் வாய்மொழி பதில் கிடைத்துள்ளது. மாநிலங்களவையில் 12 நாட்களும், மக்களவையில் 7 நாட்களும் எந்த கேள்விகளுக்கும் 21 நாட்களில் பதில் வழங்கப்படவில்லை. எதிர்கட்சிகள் கேள்வி நேரத்தின் போது கேட்கிற கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால் அந்த கடமையை நிறைவேற்றாமல் பா.ஜ.க. புறக்கணித்து வருகிறது. மேலும், அந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என ஒருங்கிணைப்போடு செயல்படாதது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவாலாகும் என்று குறிப்பிட்டுள்ளது. ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். நாணயத்தின் ஒரு பக்கம் சேதாரம் ஆனாலும், அந்த நாணயம் செல்லாததாகி விடும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை வழிநடத்துவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாவார்கள். இந்த தேர்வை பாரபட்சமின்றி வெளிப்படைத்தன்மையோடு சட்டப்படி நடத்த வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் பா.ஜ.க. அரசுடன் ரகசிய உடன்பாடு கொண்டு வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடத்தியிருப்பதை தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பகிரங்கமாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறார். நாட்டின் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் போலியான நபர்கள் பெருமளவு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மின்னணு வடிவத்தில் கேட்டால் வழங்க மறுக்கிறது. அப்படி வழங்கினால் 30 வினாடிகளுக்குள் தேர்தல் ஆணையம் செய்த மோசடிகள் அம்பலப்பட்டு விடும் என்பதால் அதை தர மறுக்கின்றன. அதனால் தான் தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே எதிர்கட்சிகளின் கோரிக்கையை புறக்கணித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டை மக்கள் மன்றத்தில் பரப்புரை மேற்கொள்வதற்கு தான் பீகாரில் தலைவர் ராகுல்காந்தி 21 நாள் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதற்கு மக்களிடம் அமோக ஆதரவு பெருகி வருகிறது. இதன்மூலம் ஜனநாயகம் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு உருவாகி வருகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியது. அதைத் தொடர்ந்து வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் திருநெல்வேலியில் எனது தலைமையில் தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை கண்டிக்கின்ற வகையில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், இன்னாள் – முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகிகள் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க அன்போடு அழைக்கிறேன். நெல்லையில் கூடுகிற பெருங்கூட்டம் தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய தலைவர் ராகுல்காந்தி அவர்களின் கரங்களை பலப்படுத்துகிற வகையில் அனைவரும் அணிதிரண்டு வரும்படி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)