தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு மக்களிடையே கிடைத்து வருகிற பேராதரவின் மூலம் மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவே ஜனநாயகத்திற்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை – 28-Nov-2022

இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டின் நிதியுதவியும், கார்ப்பரேட்டுகளின் நன்கொடையும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது பா.ஜ.க. ஆட்சியில் ஜனவரி 2018 ஆம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தேர்தல் பத்திரங்கள் வழியாகச் செலுத்தப்படுகிற நன்கொடைகளை யார் கொடுத்தார்கள் ? எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை எவரும் அறிந்து கொள்ள முடியாது. இதன்மூலம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடைகளைத் திரட்டுகின்றன. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை திரட்டுவதை பா.ஜ.க., ஆட்சி அதிகாரத்தின் மூலம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. இதன்மூலம் தேர்தல்கள் சமநிலைத்தன்மை இல்லாமல் பெருத்த நிதி ஆதாரங்களோடு பா.ஜ.க.வுக்கு கூடுதலான வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இது குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையின்படி ஏழு அரசியல் கட்சிகளின் நன்கொடை வருவாய் ரூபாய் 1398 கோடி எனக் குறிப்பிட்டு, அதில் பா.ஜ.க.வுக்கு மட்டும் ரூபாய் 1038 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. இதில், 989 கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடையாக மட்டுமே பெறப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய மொத்த நன்கொடையில் 73.5 சதவிகிதம் பா.ஜ.க.வுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு நவம்பர் 7 ஆம் தேதி வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி சில திருத்தங்களைச் செய்து, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறுவதை நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டியது. மத்திய அரசின் இந்த கால அவகாச நீட்டிப்பு குஜராத், இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலை நோக்கமாகக்  கொண்டு செய்யப்பட்டது என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சட்டவிரோதமான செயலாக உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, குஜராத் மாநிலத்திற்காக தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நன்கொடை ரூபாய் 174 கோடி. இதில் பா.ஜ.க.வுக்கு மட்டும் ரூ.163 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. இது மொத்த நன்கொடையில் 94 சதவிகிதம் ஆகும். இந்த நன்கொடைகள் பெரும்பாலும் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலானவையாகும்.  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ப்ருடன்ட் எலக்ட்ரல் டிரஸ்ட் என்ற நிறுவனம் ஒரே தொகையாக ரூபாய் 74 கோடியை பா.ஜ.க.வுக்கு வழங்கியிருக்கிறது. இத்தகைய தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும் தொகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் நன்கொடை பெற்ற காரணத்தால் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பண பலத்தோடு, அதிகார பலமும் சேர்ந்து சுயேச்சையாக, நியாயமாக தேர்தல் நடைபெற முடியாத சூழலை பா.ஜ.க. உருவாக்கியிருக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் யார் மூலம் எவ்வளவு நன்கொடை பெற்றது என்கிற விவரத்தைத் தேர்தல் ஆணையத்திற்கு கூட தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் சட்ட விதிகளை பா.ஜ.க. அரசு உருவாக்கியிருக்கிறது. இதன்மூலம் பா.ஜ.க.  கார்ப்பரேட்டுகளிடமிருந்து லஞ்சம் வாங்குவதற்குப் பதிலாக பகிரங்கமாகத் தேர்தல் பத்திரங்களின் மூலம் காசோலை வழியாக நன்கொடை பெறுவதை விட ஒரு அப்பட்டமான ஊழல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.

மோடி அரசு இத்தகைய நன்கொடைகளின் மூலம் ஊழலுக்குச் சட்டப் பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. இதன்மூலம் தேர்தல் நடைமுறைகளையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. இதற்குத் தேர்தல் ஆணையம் துணை போய்க் கொண்டிருப்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.

அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் பா.ஜ.க. அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அநீதிகளை எதிர்த்து தான் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் பொதுமக்களைத் திரட்டி பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகப் பரப்புரையின் மூலம் ஆதரவைத் திரட்டி வருகிறார். இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியின் மூலமே மோடியின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டப்படும் என்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு மக்களிடையே கிடைத்து வருகிற பேராதரவின் மூலம் மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவே ஜனநாயகத்திற்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியாகும்.

 – தலைவர் திரு கே.எஸ். அழகிரி