முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் அவர்கள் இன்று (2.11.2021) சென்னை சத்தியமூர்த்தி பவனில் காலை 11.00 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது கூறிய கருத்துகள்.

முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் அவர்கள் இன்று (2.11.2021) சென்னை சத்தியமூர்த்தி பவனில் காலை 11.00 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது கூறிய கருத்துகள்:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை சிறுமைப்படுத்தவும் வீழ்த்தவும் தீட்டப்பட்ட பெரும் சதி அம்பலம்
மோடியும் வினோத் ராயும் தேசத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் !
1. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது கட்ட ஆட்சியை வீழ்த்த சதி வலை பின்னி, அவதூறு பரப்பப்பட்டது வரிசையாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக ஆதாரமற்ற முறையில் சி.ஏ.ஜி. தலைவர் வினோத் ராய் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டு அரசியல் ரீதியாக பா.ஜ.க. பலனடைந்து ஆட்சி அமைத்தது.
2. சி.ஏ.ஜி. அறிக்கையிலிருந்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரை நீக்குமாறு சஞ்சய் நிருபம் அழுத்தம் கொடுத்ததாகத் தாம் கூறிய குற்றச்சாட்டு தவறு என்று கூறி, கடந்த 18.10.2021 அன்று முன்னாள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியுள்ளார். இதன்மூலம் 2 ஜி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான சதி முழுமையாக வெளிப்பட்டுள்ளது.
3. இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக இருந்த வினோத் ராய் ஏஜெண்டாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 2 ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் அரசு கருவூலத்துக்கு ரூபாய் 1.76 லட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் இவர் குறிப்பிட்டதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த அறிக்கை ஒரு கற்பனையான மற்றும் அலங்காரச் சொற்களால் உருவாக்கப்பட்டது. அப்போதைய தபால் மற்றும் தொலைத் தொடர்புத்துறை கணக்கு தணிக்கைக்கான டைரக்டர் ஜெனரலும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் கணக்கு தணிக்கையாளருமான திரு. ஆர்.பி. சிங் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் கூறும்போது, ‘ 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் எவ்வித இழப்பும் ஏற்படவில்லை’ என்று குறிப்பிட்டார். இது குறித்து இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்துக்கும் (அப்போது இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக வினோத் ராய் இருந்தார்.) தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த குறிப்பிட்ட தணிக்கையிலிருந்து அவர் மாற்றப்பட்டதோடு, இழப்பு ஏதும் இல்லை என்று அவர் கூறிய பரிந்துரையும் மாற்றப்பட்டது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கையை ஒருபோதும் வினோத் ராய் நிரூபிக்க முடியாது என்பது தான் உண்மை.
4. இந்த அறிக்கையின் அடிப்படையில், தீய மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை ஜெனரல் வி.கே.சிங், கிரண் பேடி, பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் முன்னெடுத்தனர். இதன்மூலம் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை அவதூறு பிரச்சாரத்தின் அடிப்படையில் மக்கள் ஆதரவு திரட்டுவதே நோக்கமாக இருந்தது.
இந்த சதி உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில், மோடி பிரதமரானதும் முன்னாள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய், அதிகாரமிக்க வங்கி தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது மத்திய இணை அமைச்சர் பதவிக்கு இணையானது. ஜெனரல் வி.கே.சிங் இரு முறை பா.ஜ.க. எம்பியாக தேர்வு செய்யப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருக்கிறார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிரண் பேடி, பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். பாபா ராம்தேவ் பெரும் தொழிலதிபராக உருவெடுத்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு வணிகம் செய்து கொண்டிருக்கிறார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாபா ராம்தேவுக்கு சலுகை விலையில் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. மோடி அரசுக்கு எதிராக கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையிலும், விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பினருக்கு எதிராக கொடுமைகள் நிகழ்ந்த நிலையிலும் அன்னா ஹசாரே அமைதியானார். காங்கிரஸ் ஆட்சியை வெளியேற்றிவிட்டு டெல்லி முதலமைச்சரானார் அரவிந்த் கெஜ்ரிவால். இவற்றினால் பெரும் பலனடைந்தவர் பிரதமர் மோடி.
5. தோற்றது இந்தியா மட்டும்தான். எழுச்சியை, பொருளாதாரத்தை உள்ளடக்கிய வலுவான வளர்ச்சியை, அமைப்புகளின் சுதந்திரத்தை, அதன் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை, சுதந்திரமான அசைக்க முடியாத நாடாளுமன்ற பொறுப்பை, ஊடக சுதந்திரத்தை, நீதித்துறை செயல்பாட்டை இந்தியா இழந்துள்ளது.
6. வினோத் ராயின் சி.ஏ.ஜி. அறிக்கையின் படி, 2 ஜி வழக்கில் சி.பி.ஐ. புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அளித்த 1,522 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில்,’குற்றப்பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட எந்த ஒருவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டது’ என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
7. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை வீழ்த்த அடுக்கடுக்கான குற்றவியல் சதிகள் அரங்கேற்றப்பட்டன. இது பற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கடந்த 7 ஆண்டுகளாக அம்பலப்படுத்தப்பட்டு வரும் ஊழல் குறித்தோ, ஜன் லோக்பால் குறித்தோ யாரும் பேசவே இல்லை. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.13,500 கோடி ஊழல் குறித்தோ, வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை மோசடி செய்துவிட்டுத் தப்பியோடிய நீரவ் மோடி, மெஹல் சோஸ்கி, லலித் மோடி, விஜய் மல்லையா மற்றும் பலரைப் பற்றி வங்கி தேர்வு வாரிய தலைவராக இருந்தும் வினோத் ராய் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அப்போது செய்தி தொகுப்பாளர்களாக இருந்து இன்று தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு உரிமையாளர்கள் ஆனவர்களும் இது குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
8.’வாய்மை வென்றது’ என்பதை தேசம் அறிய வேண்டும். டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை வெளியேற்ற நடந்த சதித் திட்டம் மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
தங்கள் தீய செயலை ஒப்புக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியும் வினோத் ராயும் மட்டுமல்ல, மற்றவர்களும் மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட முன்னாள் சி.ஏ.ஜி. வினோத் ராய் :
உத்தராகாண்ட் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சஞசய் நிருபம் தொடர்ந்த அவதூறு வழக்கில், முன்னாள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) வினோத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு தாக்கல் செய்த மனு:
‘கடந்த 11.09.2014 அன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு நான் அளித்த நேர்காணலில், குறிப்பாக சஞ்சய் நிருபமுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்திருந்தேன். அதில், 2 ஜி ஒதுக்கீடு தொடர்பான சிஏஜி அறிக்கையிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் பெயரை நீக்குமாறு காங்கிரஸ் எம்பியாக இருந்த சஞ்சய் நிருபம் அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தேன். இந்த பேட்டி டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் 12.09.2014 அன்று வெளியாகி இருந்தது. அதோடு, சகரிகா கோஸ் என்னிடம் கண்ட நேர்காணல் 13.09.2014 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியானது. இதனைத் தொடர்ந்து ‘Not just an Accountant : the diary of nations conscience keeper’ (‘வெறும் கணக்கர் அல்ல : தேச மனசாட்சி காப்பாளரின் நாட்குறிப்பு’) என்ற தலைப்பில் நான் எழுதி வெளியிட்ட புத்தகத்திலும் திரு. சஞ்சய் நிருபம் பற்றி அதே கருத்தை குறிப்பிட்டிருந்தேன்.
சஞ்சய் நிருபம் குறித்து தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் வெளியான செய்திகள் தவறானவை. எனது பேட்டியின் மூலம் சஞ்சய் நிருபம் மற்றும் அவரது குடும்பத்தார், அவரது நலன் விரும்பிகள் ஆகியோருக்கு வலியும் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். இதற்காக சஞ்சய் நிருபம் உள்ளிட்டோரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புகின்றேன்.
என் நிபந்தனையற்ற மன்னிப்பை பரிசீலித்து ஏற்றுக் கொண்டு, இந்த பிரச்சினையை திரு. சஞ்சய் நிருபம் முடித்து வைப்பார் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.