Oct – 30

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் வெளியிடும் அறிக்கை.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வது கானல் நீராக போய்விட்ட நிலையில், தமிழக சட்டப் பேரவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கடந்த 45 நாட்களாக கால தாமதம் செய்து வந்தார். இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் அரசு சட்டமாக நிறைவேற்றாமல், அரசு ஆணையின் மூலமாக 10 சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்தது. இதை பின்பற்றி தமிழக அரசு 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டிற்கு நேற்று அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை பிறப்பித்த பிறகு தமிழக ஆளுநர் வேறு வழியின்றி இதற்கு தற்போது ஒப்புதல் வழங்கியிருந்தாலும் அதை வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.

அரசமைப்பு சட்டப்படி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்;ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் அளிக்க மறுத்தால் மசோதாவை திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி திருப்பி அனுப்பியிருந்தால் அரசமைப்புச் சட்டப்பிரிவு 200- இன்படி மீண்டும் சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் ஒப்புதல் தருவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. தமிழக அமைச்சரவை குழுவின் ஆலோசனையின்படி தான் தமிழக ஆளுநர் செயல்பட வேண்டும். இது அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு மசோதாவிற்கு 45 நாட்களாக ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தியதற்கான காரணத்தை ஆளுநர் விளக்க வேண்டும். சட்ட ஆலோசனை பெறுவதற்கு கூட சில நாட்களுக்கு மேல் அவசியமில்லை. இந்த காலதாமதத்திற்கான காரணம் தமிழக ஆளுநரின் அலட்சியப் போக்கு தான். ஆனால், தமிழக அரசியல் கட்சிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்பட்ட ஆளுநர் வேறு வழியின்றி தமிழக அரசின் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.

எனவே, தமிழக ஆளுநர் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற வகையில் இனியாவது செயல்பட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply