இந்திய ஜனநாயகம் புத்துயிர் பெற வேண்டும் : காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி

“Indian democracy needs to be repaired and revitalized”

இந்திய ஜனநாயகம் புத்துயிர் பெற வேண்டும் : காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி

75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள்
‘தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்:

சுதந்திர தேசமான இந்தியாவின் 75 ஆவது ஆண்டின் தொடக்கத்தை இந்த ஆண்டு சுதந்திர தினம் குறிக்கிறது. இந்த பெருமைமிகு கொண்டாட்டம், ஆழ்ந்த பிரதிபலிப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புகளுக்கான ஒரு சந்தர்ப்பமாகும். நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்த, வளமான, இணக்கமான ஜனநாயக தேசத்தில் தைரியத்தைக் கற்பித்த தியாகிகளை நினைவுகூரும் ஒரு சந்தர்ப்பம். நமது பன்முகத்தன்மையால் ஒன்றிணைந்து, நமது பாரம்பரிய வரலாற்றால் ஈர்க்கப்பட்டு, விதியால் நமது சரியான இடத்தை தேடிக் கொண்டிருக்கிறோம்.

நமது தேசத்தைக் கட்டமைத்த தலைவர்களின் பங்கெடுப்பை நாம் கவுரவிப்போம்: மகாத்மா காந்தியின் தளராத தார்மீகத் தலைமை மற்றும் உண்மை, அகிம்சை, வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் ஏழைகளுக்காக அர்ப்பணிப்பு; நமது ஜனநாயகம், பொருளாதாரம், பொது நிறுவனங்கள் மற்றும் லட்சியவாதத்தில், இந்தியாவை உலக அரங்கில் மரியாதைக்குரிய இடமாக மாற்றியமைக்க ஜவஹர்லால் நேரு மேற்கொண்ட அயராத முயற்சிகள்; 560 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய அரசை உருவாக்கிய சர்தார் வல்லபாய் பட்டேலின் உறுதி; தேசிய திட்டக் குழுவில் சுபாஷ்சந்திர போஸின் தலைமை மற்றும் அவரது ராணுவ வலிமை; நீதி, சுதந்திரம் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் விடுதலையை உறுதி செய்த பாபாசாகேப் அம்பேத்கர்.

75 ஆண்டுகளுக்கு மேலாக ஆழமான வேர்களைக் கொண்ட துடிப்பான ஜனநாயகத்தை நாம் வளர்த்திருக்கிறோம். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றை உருவாக்கி, உலகில் உள்ள பெரும்பான்மை மக்களை வறுமை மற்றும் நோய்களிலிருந்து ஜனநாயக வழிமுறைகள் மூலம் உயர்த்தியுள்ளோம். நாங்கள் மிகப் பெரிய, வலிமையான ராணுவப் படைகள் மற்றும் ஒரு முன்னோடி விண்வெளிப் பயணத்தை உருவாக்கியுள்ளோம். ஆனாலும், நாம் நமது வெற்றிகளைக் கொண்டாடும் போது, நாம் இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்பதை உணர்கிறோம். இந்த சூழ்நிலையில், சமீபத்திய ஆண்டுகளாக நம் நாட்டின் முன்னேற்றம் பல முனைகளில் தலைகீழாக மாறியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், நாடாளுமன்ற செயல்முறைகள் மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் வெறுப்பையே காட்டுகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்புவதற்கான வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு மறுக்கப்பட்டது. அழிவுகரமான விவசாயச் சட்டங்கள், ராணுவத்தில் பயன்படுத்தும் பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி அரசியலமைப்பு பிரதிநிதிகள், அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. கைமீறிய பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், கடந்த 7 ஆண்டுகளாக எவ்வித விவாதமின்றியும், நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமலும் அதிக அளவில் நிறைவேற்றப்படும் சட்டங்களால் நாடாளுமன்றம் ரப்பர் ஸ்டாம்பாகிவிட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள், மக்களின் ஆணையை மதிக்காமல் கவிழ்க்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் மிரட்டப்பட்டு, உண்மையைப் பேச முடியாமல் அவர்கள் கைககள் கட்டப்பட்டுள்ளன. உண்மையான ஜனநாயகத்தின் கட்டமைப்பை வழங்குவதற்காகக் கவனமாகக் கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நிறுவனங்கள் சீரழிந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. சமத்துவம், நீதி மற்றும் நம் மக்களின் உரிமைக்கு மதிப்புக் கொடுக்கும் தனி மனித சுதந்திர மதிப்புகள் சிதைந்துள்ளன.

 

கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதாரச் சூழல் நிலவுவது வருத்தமளிப்பதாக உள்ளது. கொரோனா தொற்று தாக்கும் முன்பே, தவறான அறிவுறுத்தல்கள் மூலம் இந்தியப் பொருளாதாரம் சிதறடிக்கப்பட்டது. பொருளாதார மந்தநிலை காரணமாகப் பல குடும்பங்கள், சுய தொழில் செய்வோர், சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர், விவசாயிகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பை ஏற்படுத்திவிட்டது. நம் நாட்டின் உற்பத்திக்குக் காரணமாக இருக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பாதிப்பு, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வேலையின்மை, வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலரைத் தவிர,அனைத்து அடுக்குகளில் உள்ள தொழில்முனைவோர் துன்பத்தில் உள்ளனர். பொருளாதார வளர்ச்சி இருந்தால் மட்டுமே அது பணமாக மக்களை நேரடியாகச் சென்றடையும் என்பதை உணர அரசு மறுக்கிறது. அனைத்து வகை எரிபொருட்களுக்கும் அதிகபட்ச வரி விதிப்பால், வருவாய் இழப்பும் சுமையும் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்றைத் தவறாகக் கையாண்டதால், சுகாதாரத்தை மேம்படுத்துவதில் நாம் பல ஆண்டுகளாகக் கண்ட முன்னேற்றம் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. குழப்பமான மற்றும் மோசமான திட்டமிடலின் விளைவாக உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது குறித்து பெருமை கொள்கிறோம். எனினும், ஆர்டர்களை வழங்குவதில் ஏற்பட்ட பெரும் தாமதத்தால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. நமது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பப் போராடும் நேரத்தில், எதிர்கால அலைகளும் நம்மைப் பாதிக்கும் நிலை உள்ளது. நீண்ட காலமாகப் பாதிப்பு இருப்பதால் நம் குழந்தைகளின் கல்வியும் சீர்குலைந்துள்ளது.

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட நம் விவசாயிகள் பல மாதங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்க அரசு மறுக்கிறது. அவர்களது கோரிக்கைக்கு அரசு தீர்வு காண்பது அவசியம். நமக்கு உணவளிப்பவர்கள் பட்டினி கிடக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயத்தை இன்னும் நிலையான, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நாம் உருவாக்க வேண்டும்.

நாம் சுதந்திரம் பெற்றதிலிருந்து, கூட்டாட்சி என்பது நமது ஜனநாயக குடியரசின் வரையறுக்கும் அம்சமாக இருந்து வருகிறது. நாம் வளர்த்துள்ள கூட்டாட்சி என்பது உத்வேகம், ஒத்துழைப்பு, பன்முகத்தன்மை மற்றும் பிராந்திய அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரியில், மத்திய அரசு மீது நம் மாநிலங்கள் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலித்தது. ஆனால், சமீபகாலமாக மாநிலங்களின் ஒட்டுமொத்த வருவாயின் சரியான பங்கைக் கூட இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலங்கள் மீதான மத்திய அரசின் குறுகிய பார்வையையே இது வெளிப்படுத்துகிறது. நமது கூட்டாட்சி கட்டமைப்பைத் துளைத்து, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதை இது தடுக்கிறது.

மற்றொரு சமீபத்திய ஆபத்தான போக்காக, சட்டங்களும் அரசு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதும் கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களால் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் குறிப்பாக தீவிரவாதிகளுக்கு எதிரான சட்டங்கள், பிரதமரையும் அவரது அரசாங்கத்தையும் கேள்வி கேட்கத் துணிந்தவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. தங்களுக்கு எதிரான கருத்துகளை ஒடுக்க, புனையப்பட்ட வீடியோக்கள், திட்டமிட்டு உருவாக்கும் சாட்சியங்கள், போலி டூல்கிட்கள் ஆகியவை
ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசு ஏஜென்ஸிகள் அனைத்தும் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய நகர்வுகள் ஜனநாயக சுதந்திரத்தின் அடித்தளத்தையே வெட்டி எறிவதையும் பயத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

நமது கனவு இந்தியா பல தசாப்தங்களாக முன்னேறிய பிறகு, நமது ஜனநாயகம் ஏன் ஆபத்தில் இருக்கிறது? ஏனென்றால், வெற்று முழக்கங்கள், நிகழ்வு மேலாண்மை மற்றும் கட்டமைப்பு ஆகியவை மாற்றியமைக்கப்பட்டு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் குறியீடாக மாறிவிட்டது. ஏனென்றால், அந்த குறியீட்டால் தான் ஜனநாயகம் ஒரு சர்வாதிகாரத்தால் மாற்றப்படுகிறது. இன்றைய அடையாளமும் எதார்த்தமும் நாடாளுமன்ற மாளிகையை ஓர் அருங்காட்சியகமாக மாற்றிவிட்டது.

சுதந்திர இந்தியாவின் 75 ஆவது ஆண்டு தொடக்கத்தில் இருக்கும் நாம், குடியரசை சேதமடையாமல் பாதுகாத்த நம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் தியாகம் செய்து பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் நாம் போராட வேண்டும். நம்முடைய கோடிக்கணக்கான மக்கள் வறுமை, பாகுபாடு மற்றும் நோய்களின் சவால்களிலிருந்து மீண்டு வர நாம் ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். நமது சுதந்திரப் போராட்டத்துக்கு எவ்வித பங்களிப்பும் செய்யாதவர்கள் நமது அடையாளங்களை பொருத்திக் கொள்ள மேற்கொள்ளும் வெற்று முயற்சிகளைப் பார்த்து நாம் சாய்ந்துவிடக்கூடாது. அவர்கள் காந்தியடிகளின் கண்ணாடியைக் கடன் வாங்கலாம். ஆனால், நம் நாட்டை அவர்கள் பார்ப்பது கோட்சே பார்வை தான். 74 ஆண்டுகளுக்கு முன்பு நம் தலைவர்கள் பிரித்தாளும் சித்தாந்தங்களை நிராகரித்தனர். அதை நாம் மீண்டும் ஒரு முறை நிராகரிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த, இணக்கமான, வலிமையான இந்தியாவுக்கு உலக அரங்கில் பெரும் பங்குண்டு. ‘விதியுடன் முயற்சிக்கவும்’ என்ற நேருவின் முக்கியமான உரையில், உலகத்தை தனித்தனி துண்டுகளாகப் பிரிக்க முடியாது என்றும், அமைதி பிரிக்க முடியாதது என்றும், சுதந்திரம், செழிப்பு மற்றும் பேரிடர் ஆகியவற்றின் அடிப்படையில் உலகைப் பிரிக்க முடியாது என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினார். கொரோனா மற்றும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உலகுக்கு, சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நேருவின் உரை முக்கியமானதாக இருக்கும்.

முன்னோக்கிச் சென்று கொண்டே, நமது உள்ளடக்கிய நாகரிக நெறிமுறைகளை ஏற்றுக் கொள்வதற்கான நம் உறுதிப்பாட்டையும், நீதி மற்றும் சமத்துவத்துக்கான நம் தலைவர்களின் அர்ப்பணிப்பையும் புதுப்பிப்போம். இது நமது பலம். நமது மக்களுக்கு மாற்றமான எதிர்காலத்தை உருவாக்கவும், மிகப்பெரிய முரண்பாடுகளைச் சமாளிக்கவும் இது நமக்கு உதவும். எண்ணற்ற மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இனங்களைக் கொண்ட ஒரு நாடு, எவ்வாறு பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது என்பதை உலகுக்கு இந்தியா தொடர்ந்து நிரூபிக்க வேண்டும். துடிப்பான ஜனநாயகத்தை உருவாக்கி நிலைநிறுத்தும் சாதனையை நிகழ்த்தி, மற்ற நாடுகளுக்கு இந்தியா ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். சமத்துவத்துடன் வளர்ச்சியை சமநிலைப்படுத்தும் உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றை உருவாக்குவதில் இந்தியா தமது வெற்றியை வெளிப்படுத்த வேண்டும். லட்சியவாத தரிசனங்களை வாழும் எதார்த்தங்களாக மாற்ற முடியும் என்பதை இந்தியா காட்ட வேண்டும்.