மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பின்பற்றிய கொள்கைகளை பரப்புகிற வகையிலும் 75-வது சுதந்திர தின பவள விழாவை நன்றிப் பெருக்கோடு அனைவரும் கொண்டாட வேண்டும்.

14 Aug 2021

சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

மகாத்மா காந்தியடிகள் தலைமையில் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் ஆகிய போராட்டங்களை அகிம்சை வழியில் நடத்தி, 30 கோடி மக்கள் வாழ்ந்த இந்திய நாட்டிற்கு விடுதலையை 1947 ஆகஸ்ட் 15 இல் பெற்றோம். கடந்த 75 ஆண்டுகளாக 17 பொதுத் தேர்தல்களை நடத்தி, அமைதியான முறையில் ஜனநாயக வழியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். ஏறத்தாழ 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.

ஆனால், ஜனநாயகத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையிலும், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும் பிரதமர் மோடி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த போக்கு ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். இதை எதிர்த்து ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கையுள்ள கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியா, இன்றைக்கு 75-வது ஆண்டு பவள விழாவை கோலாகலமாக கொண்டாடுகிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத்தியில் எத்தகைய ஆட்சி அமைந்திருந்தாலும் சுதந்திர தின பெருமைகளை பெருமையோடு கொண்டாடுகிற கடமை ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் இருக்கிறது. அந்த வகையில், இந்திய விடுதலைக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்களின் தியாகத்தை போற்றுகிற வகையிலும், அவர்களை நினைவு கூர்ந்து பாராட்டுகிற வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

தற்போது 136 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் அரசமைப்பு சட்டத்தின்படி ஆட்சி நடைபெறவும், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பின்பற்றிய கொள்கைகளை பரப்புகிற வகையிலும் 75-வது சுதந்திர தின பவள விழாவை நன்றிப் பெருக்கோடு அனைவரும் கொண்டாட வேண்டும். அதன்மூலமே உண்மையான சுதந்திர தின விழாவை கொண்டாடுவதாக கருதப்படும்.

தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

(கே.எஸ். அழகிரி)