தமிழகத்தில் புரட்சிகரமாக வேளாண்மை நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு, விவசாயத்தோடு தொடர்புடைய வளர்ச்சிக்காக 34 ஆயிரத்து 220 கோடியே 64 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. இதன்மூலம், தமிழக விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை பெறுவதோடு, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துகிற முயற்சியில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்.

14 Aug 2021

அறிக்கை

தமிழக வரலாற்றில் முதல் முறையாக 2021-22 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை, அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவையில் சமர்ப்பித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். இம்முயற்சிக்கு வித்திட்ட தமிழக முதலமைச்சரையும் பாராட்டுகிறேன். விவசாயிகளின் நலனில் தமிழக அரசுக்கு இருக்கிற அக்கறையை  இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது. தமிழகத்தின் பல்வேறு பிரிவினரிடையே கருத்து கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. இது ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட முயற்சியாகும்.

தற்போது, தரிசாக உள்ள நிலங்களில் 11.7 லட்சம் ஏக்கர் பரப்பில் குறைந்த நீர் செலவில் சாகுபடி செய்யக் கூடிய சிறுதானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி மற்றும் பழப் பயிர்களை பயிரிட்டு நிகர சாகுபடி பரப்பு 75 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று கூறியிருப்பது  மிகுந்த வரவேற்புக்குரிய ஒன்றாகும். காலம் காலமாக தரிசு நிலங்கள் கவனிப்பாரற்று கிடந்த நிலையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல, 10 லட்சம் ஏக்கர் அளவிற்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இரு மடங்காக, அதாவது 20 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டி விட்டால் உற்பத்தி பெருகுகிற வாய்ப்பு ஏற்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் 2500 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் நோக்கங்களாக தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரியசக்தி பம்பு செட்டுகளை அமைத்தல், வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுதல்,கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகஅளவு பயிர் கடன்கள் வழங்குதல் என்று பல அறிய திட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்திட்டங்கள் 250 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கிராமங்களில் வாழ்கிற விவசாயிகளின் வாழ்வாதாரம் பலமடங்கு கூடுகிற நிலை ஏற்படும்.

அதேபோல, நெல் ஜெயராமன் அவர்களின் மரபு சார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தை வலிமைப்படுத்துகிற வகையில் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளை திரட்டி, பாதுகாக்கிற பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் 25 லட்ச ரூபாய் செலவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.

தமிழகத்தின் தொன்மையான மரமாக கருதப்படுவது பனைமரம். அதனுடைய பரப்பு வெகுவாக குறைந்து வருவது மிகுந்த கவலையை தருகிறது. பனைமரங்களை பாதுகாப்பதுடன், கூடுதலாக பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங் கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது மிகுந்த புரட்சிகரமான திட்டமாக கருதப்படுகிறது.

நெல் உற்பத்தி சிறப்பு திட்டத்தின்படி, நடப்பாண்டு 120 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கினை எய்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஊக்கம் தரும் வகையில் ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகம் ரூபாய் 2060 ஆகவும், சாதாரண ரகம் ரூபாய் 2015 ஆகவும் கொள்முதல் செய்யப்படும் என்றும், இதற்காக அரசுக்கு ரூபாய் 99 கோடியே 38 லட்சம் கூடுதலாக செலவாகும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கூடுதலாக தமிழக அரசு நெல் விலையை உயர்த்தியிருப்பது விவசாயிகளிடையே நிச்சயம் மிகுந்த வரவேற்பை பெறும்.

புதிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயத்தில் கருவிகளை பயன்படுத்துகிற முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெறும். இத்திட்டத்தின்படி, 10 குதிரைத் திறன் வரையிலான 5 ஆயிரம் பம்பு செட்டுகள் 70 சதவிகித மானியத்தில் நிறுவப்படும். இதற்காக 115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் புரட்சிகரமாக வேளாண்மை நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு, விவசாயத்தோடு தொடர்புடைய வளர்ச்சிக்காக 34 ஆயிரத்து 220 கோடியே 64 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. பல்வேறு திட்டங்களை அறிவித்திருப்பதற்கேற்ப, அதற்கு இணையாக நிதியும் ஒதுக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் நோக்கத்தை உறுதி செய்கிறது. இதன்மூலம், தமிழக விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை பெறுவதோடு, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துகிற முயற்சியில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்.

கே.எஸ். அழகிரி