தடுப்பூசி விநியோக கொள்கையை வெளிப்படைத்தன்மையோடு நடைமுறைப்படுத்த வேண்டும் -கே.எஸ் அழகிரி

16 June 2021

கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக இந்திய மக்கள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறார்கள். கொரோனாவின் முதல் அலையின் போதே மருத்துவ கட்டமைப்பு வசதிகளை உருவாக்காததன் விளைவை மக்கள் இன்று அனுபவித்து வருகிறார்கள். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை, உயிரை பாதுகாக்கும் தடுப்பூசி பற்றாக்குறை என நாட்டின் பல பகுதிகளில் மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள்.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் இதுவரை 25 கோடி மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், இரண்டு டோஸ் போட்டவர்கள் மக்கள் தொகையில் 3.4 சதவிகிதமாகத் தான் இருக்கிறது. இதன்படி 111 உலக நாடுகளில் இந்தியா 63 ஆவது இடத்தில் இருக்கிறது. அதேநேரத்தில் உலக நாடுகளில் 240 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 108 கோடி மக்களுக்கு 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடுவதன் மூலமே கொரோனாவின் பிடியிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும். இதை எதிர்கொள்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு தடுப்பூசி உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்திய மக்கள் அச்சம், பீதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல, தடுப்பூசி விநியோகத்திலும் அரசியல் பாரபட்சத்தோடு மத்திய பா.ஜ.க. அரசு நடந்து கொள்கிறது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு இதுவரை 1.16 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 96.5 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டு விட்டன. தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 கோடி பேர். இவர்களுக்கு தடுப்பூசி போட 10 கோடி டோஸ்கள் தேவை. அனைத்து மாநிலங்களையும் சமநிலைத்தன்மையோடு அணுக வேண்டிய பா.ஜ.க., மிகுந்த அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருவது வேதனையை தருகிறது.

கடந்த மே 11 வரை தமிழகத்தில் 13.2 சதவிகித மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது ஜூன் 9 ஆம் தேதி 17.5 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, மேற்கு வங்காளத்தில் இதே காலக்கட்டத்தில் 17.2 சதவிகிதமாக இருந்தது. 22.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதற்கு மாறாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் இமாச்சல பிரதேசத்தில் அதே காலக்கட்டத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 39.9 சதவிகிதத்திலிருந்து 52.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 29.6 சதவிகிதத்திலிருந்து 39.6 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இந்த புள்ளி விவரங்களைப் பார்க்கிற போது பிரதமர் மோடி அரசு அப்பட்டமான பாரபட்ச போக்கை கையாள்கிறது என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பிரதமர் மோடி, பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்களுக்கு சாதகமாகவும், பா.ஜ.க. அல்லாத மாநிலங்களுக்கு பாதகமாகவும் நடந்து கொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமரா ? பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்களுக்கு மட்டும் பிரதமரா ? என்கிற கேள்வியைத் தான் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா என்கிற கொடிய தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய பிரதமர் மோடி, அரசியல் பாரபட்சத்தோடு செயல்படுவாரேயானால், அதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. இதைவிட கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய போக்கை பிரதமர் மோடி கைவிட்டு மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தடுப்பூசி விநியோக கொள்கையை வெளிப்படைத்தன்மையோடு நடைமுறைப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

 கே.எஸ். அழகிரி