தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளின் மூலம் கொரோனா நிவாரணப் பணிகளை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சியினர்… -கே.எஸ் அழகிரி

17 June 2021

காங்கிரஸ் கட்சியின் ஒப்பற்ற தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் 50 ஆவது பிறந்தநாள் விழா,  வருகிற ஜூன் 19 ஆம் தேதி மிக எளிமையாக, ஆடம்பரமில்லாமல் ஆக்கப்பூர்வமான முறையில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிற தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று விரும்பினாலும், கொரோனா தொற்றுக் காரணமாக விழாவாகக் கொண்டாட வேண்டாமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, பிறந்தநாளன்று கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல், பேனர்கள் மற்றும் சுவரொட்டி விளம்பரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியினர் அத்தகைய செயல்பாடுகளில்  ஈடுபட வேண்டாம்.

தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குகிற வகையில் மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் மற்றும் ஏழை,எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய அரிய சேவைகளின் மூலம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் எளிமையான முறையில் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை கொரோனா நிவாரண நாளாகக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏழை, எளிய மக்களின் அன்பையும், ஆதரவையும் பெறுகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உற்ற துணையாகத் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிற வகையில், அவரது பிறந்தநாளில் நிகழ்ச்சிகள் அமைத்திட வேண்டும்.

இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிற தலைவராக விளங்குகிற திரு. ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளில்,  கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிற வகையில் செயல்படுவதே, அவருக்கு நாம் சொல்லும் பிறந்தநாள் வாழ்த்தாக இருக்க முடியும்.

எனவே, தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளின் மூலம் கொரோனா நிவாரணப் பணிகளை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். ராகுல்காந்தி பிறந்தநாளில்  இத்தகைய பணிகளை மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டிகளின் தலைவர்கள் முன்னின்று சிறப்பாகச் செய்து மக்களின் அன்பையும், ஆதரவையும் பெறவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி