இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் மூலம் இந்தியாவில் மட்டும் 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. – கே.எஸ் அழகிரி

19 July 2021

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் 10 நாடுகளில் 1,571 முக்கிய பிரமுகர்களின் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டு, முக்கிய தரவுகள் கசிந்துள்ளன. இந்தியாவில் மட்டும் 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், நீதித்துறை, தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் 17 ஊடகங்களும் அடங்கும்.

இதில், பெகாஸஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் 37 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. இதில் 10 இந்தியர்களின் தொலைப்பேசிகளும் அடங்கும். இந்தியர்களின் தொலைப்பேசிகள் 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உளவு பார்க்கப்பட்டு தரவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

பெகாஸஸ் என்ற மென்பொருள் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, உலகில் உள்ள அரசாங்கங்கள் மட்டுமே இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இது தான் சந்தேகம் எழ வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட நபர், தனியார், மற்றும் அரசு அதிகாரிகளை இவ்வாறு வேவு பார்ப்பது இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

40 பத்திரிக்கையாளர்கள், 3 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒரு நீதிபதி என முக்கிய பிரமுகர்களின் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டு, தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. பெகாஸஸ் என்ற மென்பொருள் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டை, சம்பந்தப்பட்ட அந்த அமைச்சகம் இதுவரை மறுக்கவில்லை என்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் இத்தகைய செயல் நாட்டின் பாதுகாப்புக்கும், ஜனநாயகத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.  ஜனநாயகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள், மிருகபல பெரும்பான்மை கிடைத்தபிறகு சர்வாதிகாரிகளாக மாறி, பல உத்திகளைக் கையாண்டு எதிர்க்கட்சிகளை, பத்திரிக்கைகளை, நீதிபதிகளைக் கண்காணித்து அவர்களது தொலைப்பேசி, வாட்ஸ் ஆப் தரவுகளை உளவு பார்த்துப் பதிவு செய்திருப்பது அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு இதனால் மிகப் பெரிய தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. இப்படி எல்லாம் நடக்குமா? என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் இது நடந்திருக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட அமைப்புகள், புலனாய்வுத் துறைகள் இருந்தும், இவர்களுக்குத் தெரியாமலேயே இஸ்ரேலின் என்எஸ்ஓ என்ற நிறுவனத்தின் மூலம் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. யாரை நம்புவது? எதை நம்புவது என்ற குழப்பத்தை இந்த உளவு விவகாரம் ஏற்படுத்தியுள்ளது. எல்லையிலும் அச்சுறுத்தல், நாட்டுக்குள்ளும் அந்நிய நிறுவனம் மூலம் அச்சுறுத்தல் என்பது, இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவாலாகத்தான் கருத முடியும். அரசாங்கங்களை மட்டுமே வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள என்எஸ்ஓ நிறுவனம், இந்தியாவில் தொலைப்பேசிகளை உளவு பார்க்கிறது என்றால், அது மோடி அரசுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

எனவே, இந்தியாவில் பெகாஸஸ் ஸ்பைவேர் வாங்கப்பட்டு தொலைப்பேசிகள் ஹேக் செய்யப்பட்டு உளவு பார்க்கப்பட்டது குறித்து,  உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் நீதிபதிக்கு சாட்சிகளை மட்டும் விசாரிக்க அதிகாரம் அளிக்காமல், நீதிமன்றம் போல் சாட்சியங்களை எடை போடவும் அவருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.  குற்றவாளிகள் யார்? இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதைக் கண்டறிந்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி