13 July 2021
தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற போது, கொரோனா தொற்றுப் பரவல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் உறுதியான நடவடிக்கை மூலம், 36 ஆயிரமாக உச்சத்திலிருந்த தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை மூன்றாயிரத்துக்கும் கீழே குறைத்துள்ளதை நாடே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இரவு, பகலாக உழைத்த அரசு மருத்துவர்கள், மூன்றாவது கொரோனா அலையே வந்தாலும் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி சமாளிக்க உறுதியாக இருக்கிறார்கள். இதற்காக அனைத்து கட்டமைப்பு வசதிகளும், தொலைநோக்குப் பார்வையோடு அமைக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றுக்குப் பல மருத்துவர்களை இழந்தோம். ஏராளமான மருத்துவர்களுக்குத் தொற்று ஏற்பட்ட போதும், தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என தெரிந்தும், அரசுக்கும், மக்களுக்கும் அவர்கள் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுத்ததோடு, கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு, ஊக்கத்தொகையாக 30 ஆயிரம் ரூபாய் வழங்க முன் வந்ததற்காகத் தமிழக அரசை மருத்துவர்கள் மனதாரப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும், நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்கள் பெற்று வருகின்றனர். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நியாயமான ஊதியக் கோரிக்கைக்காகப் போராடிய 118 மருத்துவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். நாட்டிலேயே ஊதியக் கோரிக்கைக்காகப் போராடிய மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் தமிழகத்தில் தான் நடந்தது. அதன்பிறகும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அரசு முன்வரவில்லை.
சுகாதாரத் துறை செயல்பாடுகளில் 25 ஆவது இடத்தில் உள்ள பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட, அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. ஆனால், முன்னணி மாநிலமான தமிழகத்தில் மருத்துவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளாக உரிய ஊதியம் மறுக்கப்பட்டு வந்துள்ளது. அதுவும் மற்ற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விடத் தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியமே தரப்படுகிறது.
ஒவ்வொரு அரசு மருத்துவரும் கடந்த 10 வருடங்களாக மாதம் தோறும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் வருமான இழப்புடன் மன உளைச்சலில் பணியாற்றி வருகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது. அதுவும் இதில் பெரும் பகுதியை மருத்துவர்கள் இன்சூரன்ஸ் மூலமாகவே அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தர முடியும். கடந்த 10 ஆண்டுகள் களத்தில் போராடிய மருத்துவர்களுக்குக் குரல் கொடுத்து வந்த முதலமைச்சர் அவர்களுக்கு மருத்துவர்களின் வலி நன்றாகவே தெரியும்.
அதேபோல, 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தமிழகத்திற்கு தடுப்பூசி விநியோகம் செய்வதில் மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 985 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை மொத்த மக்கள் தொகையில் 25.9 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 5.2 சதவிகித மக்களுக்குத் தான் இரண்டு டோஸ் போடப்பட்டிருக்கிறது. ஆனால், பா.ஜ.க. ஆட்சி செய்கிற உத்தரபிரதேச மாநிலத்தில் 3 கோடியே 72 லட்சம் பேருக்கும், மத்தியப்பிரதேசத்தில் 2 கோடியே 39 லட்சம் பேருக்கும், குஜராத்தில் 2 கோடியே 79 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டிருக்கிற தடுப்பூசியை விட பலமடங்கு பா.ஜ.க. ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு விநியோகம் செய்கிறது. மக்கள் உயிரைக் காக்கும் தடுப்பூசி விநியோகத்தில் கூட அரசியல் ரீதியாக மோடி அரசு பாரபட்சம் காட்டுவது கடுமையான கண்டனத்திற்குரியது. கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது.
ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள், கொரோனா தடுப்பூசி போன்றவற்றின் இருப்பை உறுதி செய்யும் வகையில் தீர்வை ஏற்படுத்தி வருவதோடு, கொரோனாவுக்கே முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அயராது பாடுபட்டு வருகிறார். அதுபோல, அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையான PB4 @12yrs ஐ முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354 ன்படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை தமிழக முதலமைச்சர் வெளியிட வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம் 10 ஆண்டுகளாக மனப்புழுக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.
கே.எஸ். அழகிரி