குஜராத் மாநிலத்திற்கான பிரதமராக செயல்படாமல், அனைத்து மாநிலங்களையும் சமமாக அணுகும் பிரதமராக மோடி செயல்பட்டால் மட்டுமே கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும். – கே.எஸ் அழகிரி

26 July 2021

கொரோனா தொற்று பரவியது முதற்கொண்டு அதை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் தெளிவற்ற கொள்கைகளை பா.ஜ.க. நடைமுறைப்படுத்தி வருகிறது. தடுப்பூசி அளிப்பதிலே இதுவரை மூன்றுவிதமான கொள்கைகளை அறிவித்துள்ளது. தொடக்கத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி அளிக்கிற முதன்மை பொறுப்பு மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது என்று பலமுறை வலியுறுத்திக் கூறப்பட்டது. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு அந்த பொறுப்பை மாநில அரசுகளின் தலையில் சுமத்திவிட்டு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டது. அதற்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக அந்த கொள்கையை மாற்றிக் கொண்டு மாநிலங்களுக்குத் தேவைப்படுகிற தடுப்பூசிகளை மத்திய அரசே இலவசமாக வழங்குவது என்று ஒரு கொள்கையை அறிவித்தது. அதன்படி, தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விநியோகம் செய்து வருகிறது. இதில், மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. தடுப்பூசி கொள்கையைப் பொறுத்தவரை எந்த அடிப்படையில் மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகின்றன என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை. பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்களுக்கு சலுகையும், மற்ற மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய தடுப்பூசி காலம் தாழ்ந்தும் அளிக்கப்படுகிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை 2021 மதிப்பீட்டின்படி மொத்த மக்கள் தொகை 7.88 கோடி. தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 44 ஆயிரத்து 870 ஆகும். இதுவரை தமிழகத்தில் 1 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரத்து 418 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் மொத்த மக்கள் தொகை 6.48 கோடி. ஆனால், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் 8 லட்சத்து 24 ஆயிரத்து 546 பேர். அங்கு தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 58 லட்சத்து 68 ஆயிரத்து 770 பேர். இந்த இரண்டு மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பா.ஜ.க. அரசின் அப்பட்டமான பாரபட்சமான போக்கு புரியும். இத்தகைய அணுகுமுறையை பிரதமர் மோடி கையாளுவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கிற செயலாகவே கருத வேண்டியிருக்கிறது. கொரோனா தொற்றினால் நாட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பிரதமர் மோடி, தனது சொந்த மாநிலத்திற்கு சலுகை காட்டுவது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல. இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையைத் தவிர்த்து தடுப்பூசி விநியோகத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் மக்கள் தொகை மற்றும் பாதிப்புகளின் அடிப்படையில் ஒரு தெளிவான கொள்கையை வகுத்து தடுப்பூசி விநியோகத்தை சீரமைக்க வேண்டும். குஜராத் மாநிலத்திற்கான பிரதமராக மட்டும் செயல்படாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சமநிலைத் தன்மையோடு அணுகுகிற பிரதமராக மோடி செயல்பட வேண்டும். இதுவே கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும்.

திரு கே.எஸ். அழகிரி