சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையில் கூறப்பட்டுள்ள இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்கள் பகுதியில் உடனடியாக அகற்றி அதன் விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

03-Apr-2025

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை எந்தவித எதிர்ப்பையும் லட்சியம் செய்யாமல் – எவ்வித ஜனநாயகப் பண்புகளுக்கும் இடம் கொடாமல் – நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. இந்தியாக்கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்த்து நின்றபோதும் – தான் துணைக்கழைத்துக்கொண்ட சக்திகளுடன் இணைந்து இந்த சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்பை இழிவு செய்து அலட்சியப்படுத்தியிருக்கிற இந்த மசோதா இஸ்லாமியர்களின் சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கிறது என்பது தெள்ளத்தெளிவு..

முறைகேடுகள் நிகழாமலிருக்கவே இந்த சட்டத் திருத்தத்தை கொண்டுவந்திருப்பதாகவும் – இதை வைத்து இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவர்களாக தங்களை சித்திரிக்க எதிர்க்கட்சிகள் முனைவதாகவும் – பாஜக தலைவர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள முனைகிறார்கள். இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டியவர்கள் இஸ்லாமியர்கள்தாமே தவிர, அப்பட்டமான மதவெறி கொண்ட பாஜக அல்ல. இந்தியாவின் இஸ்லாமிய சமூகத்தினர் பெருவாரியாக இந்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கிறார்கள் என்பதை வசதியாக மறைத்துவிட நினைக்கிறார்கள்.

தமிழக சட்டமன்றத்தில் – வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். உரத்த குரலில் கண்டனங்களை முழங்கியபடி இந்தத் தீர்மானத்தை முன்வைத்திருக்கிறார். பாஜக தவிர மற்ற அத்தனைக் கட்சிகளும் தமிழக முதலமைச்சரின் தீர்மானத்துக்கு ஆதரவளித்திருக்கின்றன.

வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முழுமனதுடன் வரவேற்கிறது. அரசியல் சட்டத்தை நொறுக்கிக்கொண்டிருக்கும் பாசிச பாஜக அரசின் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதியாக தடுத்து நிறுத்தும் என்று நம்புகிறோம். காங்கிரஸ் கட்சியும் திமுக உள்ளிட்ட இந்தியாக் கூட்டணிக் கட்சிகளும் இஸ்லாமிய மக்களின் பாதுகாப்புக்காக எப்போதும் துணை நிற்பார்கள்.

தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ