அனைத்து நீதிபதிகளுக்கும் தனித்தனியாகப் பாதுகாப்பு கொடுத்து நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்கிற நடைமுறை இல்லை. இதற்கு உள்நோக்கம் கற்பித்து கண்டனத்தை எழுப்புவது, தாம் வகிக்கின்ற நீதிபதி பொறுப்புக்கு அழகல்ல. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

03 OCT 2021 – அறிக்கை –

நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா அக்டோபர் 1 அன்று சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் நடந்தபோது, அந்த வழியாக வந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்  பயணம் செய்த வாகனம் போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்கிக்கொண்டது. இதனால் உயர்நீதிமன்றத்திற்கு 25 நிமிடம் காலதாமதமாகச் செல்ல நேரிட்டதாகக் கூறி உள்துறை செயலாளரை காணொளி வாயிலாக ஆஜராகி விளக்கம் கூற  உத்தரவிட்டார். இதையொட்டி பிற்பகல் 2.15 மணிக்கு காணொளி வாயிலாக ஆஜரான உள்துறை செயலாளரை நீதிபதி சரமாரியான கேள்விகளைக் கேட்டதாக நாளேடு ஒன்றில் செய்தி வெளிவந்துள்ளது.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உள்துறை செயலாளரிடம், “25 நிமிடம் காலதாமதமாக வந்தேன். எனது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. என்னை பணி செய்ய விடாமல் தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. இச்செயல் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதுகிறேன். என் காரை தடுத்து நிறுத்தியதை போல முதலமைச்சர், அமைச்சர்கள் பயணம் செய்கிற வாகனத்தைத் தடுத்து நிறுத்துவீர்களா?” என்று கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த செய்தியைப் படிக்கிறபோது நீதிபதியின் போக்கு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 74 நீதிபதிகள் இருக்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்திற்கு வரும்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர்களுடைய வாகனங்கள் சிக்கிக்கொள்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அனைத்து நீதிபதிகளுக்கும் தனித்தனியாகப் பாதுகாப்பு கொடுத்து நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்கிற நடைமுறை இல்லை. இந்த சூழலில் தான் நீதிபதியின் வாகனம் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு காலதாமதம் ஏற்பட்டிருக்கும். இதற்கு உள்நோக்கம் கற்பித்து கண்டனத்தை எழுப்புவது தாம் வகிக்கின்ற நீதிபதி பொறுப்புக்கு அழகல்ல. சில அசாதாரண சூழலில் இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய நீதிபதி பொங்கி எழுந்து காணொளி வாயிலாக உள்துறை செயலாளரை வசை பாடுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. மேலும் இச்செயலுக்காக உள்துறை செயலாளர் வருத்தம் கூட தெரிவித்திருக்கிறார்.

காணொளி வாயிலாக நீதிபதி பேசும்போது, “முதலமைச்சர், அமைச்சர்களின் கார்களை போலீசார் தடுத்து நிறுத்துவார்களா?” என்று கேட்கிறார். உயர்நீதிமன்றத்தில்  பொறுப்புமிக்க நீதிபதியாக இருப்பவர் முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டாரா? என்பது தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்றால் அவர் வருகைக்கு முன்பாக அந்த இடத்தில் வெடிகுண்டு சோதனை, மோப்ப நாய் சோதனை, ஜாமர்கள் அமைப்பது என பல்வேறு பணிகளை முன்கூட்டியே செய்யவேண்டிய நிலை இருக்கிறது. தமிழக முதலமைச்சருக்கு ‘கோர்செல்’ என அழைக்கப்படும் பாதுகாப்புப் பிரிவும், ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பும் செய்யப்படுகிறது. இதை எஸ்.பி. தலைமையில் இயங்கும் தனிப்பிரிவு கண்காணித்து வருகிறது. இதை ஏ.டி.எஸ்.பி., இரண்டு டி.எஸ்.பி., மூன்று இன்ஸ்பெக்டர்கள் ஒரே நாளில் மூன்று ஷிப்டுகளாக சஃபாரி உடை அணிந்து பாதுகாப்பு வழங்குகிறார்கள். இவர்கள் தான் முதலமைச்சரின் மெய்காவலர்கள். மேலும் முதலமைச்சர் பயணம் செய்யும் குண்டு துளைக்காத காரை பின்தொடர்ந்து கான்வாயில் 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. இந்த பின்னணியில் மிகுந்த பாதுகாப்புடன் முதலமைச்சர் ஒரு நிகழ்ச்சிக்கு வரும்போது அந்த பகுதியில் வாகனப் போக்குவரத்தை சில நிமிடங்கள் தடுத்து நிறுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளாமல் முதலமைச்சரோடு நீதிபதி தம்மை ஒப்பிட்டுப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதுகாப்பு சம்பந்தமான  வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் நீதிபதி தமது வரம்புகளை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரோடு ஒப்பிட்டுப் பேசியது மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா நடைபெறுவதை அறிந்து, காவல்துறையினரை  நீதிபதியின் நேர்முக உதவியாளர்  தொடர்பு கொண்டு அந்த வழியாகச் செல்லும் தங்களது வாகனத்தைத் தடுக்காமல் பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அந்த வேண்டுகோளை ஏற்று நீதிபதி போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிக்க மாற்று வழிகளை காவல்துறையினர் உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். அதே நேரத்தில் நீதிபதி தமது வருத்தத்தைக் கடிதம் மூலமாக உள்துறை செயலாளருக்குத் தெரிவித்திருக்கலாம். அதற்கு மாறாக உள்துறை செயலாளரைக் காணொளி வாயிலாக அழைத்து  25 நிமிடம் விளக்கம் கேட்டதால் நீதிபதியின் நேரமும், உள்துறை செயலாளரின் நேரமும் விரயமானதைத் தவிர்த்திருக்கலாம்.

எனவே, எந்த உள்நோக்கமும் இல்லாமல் சென்னை மாநகருக்கே உரிய போக்குவரத்து நெரிசலில் நூற்றுக்கணக்கான வாகனங்களுக்கு மத்தியில் சிக்கிய நீதிபதிக்கு ஏற்பட்ட சிரமத்தைத் தவிர்க்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை இயல்பாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டிய நீதிபதி நடைமுறையிலுள்ள பாதுகாப்பு அம்சங்களைப் புறக்கணித்து விட்டு முதலமைச்சர், அமைச்சர்களோடு ஒப்பிட்டுப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய விமர்சனங்களைத் தவிர்ப்பது தான் அவர் வகிக்கின்ற பதவிக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

கே.எஸ்.அழகிரி